மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

ரிமோட்  ரீட்டா

கேபிள் கலாட்டா

ரெட்டைக் குதிரை ஜெனிப்ரியா!

ந்த ஜெனிப்ரியா பொண்ணு

எல்லா சேனல்கள்லயும் தலைகட்டிடுது. இன்னொரு பக்கம் சினிமாவுலயும் களமிறங்கிடுச்சு. ''எப்படி ஜெனி?''னு பொண்ணுகிட்ட போய் நின்னேன்.

''எனக்கே தெரியல ரீட்டா. முதல்ல வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாதான் மீடியாவுக்குள்ள வந்தேன். ரஜினி சாரோட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சுந்தரம் சார் மூலமா, பாரதிராஜா சார் ஆரம்பிச்ச 'தமிழ்த் திரை’ டி.வி-க்கு வந்தேன். அப்படியே ஜெயா, வசந்த், கலைஞர், சன், இசையருவினு எல்லா சேனல்கள்லயும் சீரியல், காம்பியரிங், செலிப்ரிட்டி இன்டர்வியூனு ஒரே பிஸி. இசையருவி சேனலின் 'இன்னிசை ஞானி’ நிகழ்ச்சிதான் என்னை டி.வி மீடியாவில் பிரபலமாக்கியது. இப்போ 'வம்சம்’ சீரியல்ல என்னோட கேரக்டர் சூடுபிடிச்சுப் போயிட் டிருக்கு.''

''படத்துலகூட நடிக்க ஆரம்பிச்சாச்சு போல?''

''ஆமா ரீட்டா. ஏற்கெனவே ரெண்டு படத்துல நடிச்சிருக்கேன். நான் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரோட ஸ்டூடன்ட். நல்லா டான்ஸ் ஆடுவேன். 'துள்ளல்’ படத்துல ஓபனிங் சாங்குக்கு டான்ஸ் பண்ணினேன். இப்போ 'வால்’ படத்துல சந்தானம் சாருக்கு ஜோடியாவும், 'காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை’ படத்துல ஹீரோயினாவும் நடிச்சிட்டிருக்கேன்.''

ரெட்டை குதிரை சவாரி ஸ்மூத்தா போகட்டும் ஜெனி!

கேபிள் கலாட்டா

'கனகு’ பேசுறார்!

'மோகமுள் படத்துல ஹீரோ அபிலேஷோட ஜூனியர் கெட்டப்புல நடிச்சதுதான் என்னோட முதல் கேமரா அனுபவம்!'' என காலரை தூக்கிவிடுகிறார், துரை.

அட, நம்ம 'இளவரசி’ சீரியல்ல 'கனகு’ கேரக்டர்ல கலக்கிட்டிருக்காரே, அவரேதான்!

''வாணி ராணி சீரியல்தான் எனக்கு டி.வி-யில பெரிய என்ட்ரி. தொடர்ந்து 'இளவரசி’, 'கல்யாணப் பரிசு’னு பல சீரியல்கள்ல கமிட் ஆகிட்டதால, சார் ஆல்வேஸ் பிஸி, யூ நோ! என் வீட்டுல யாரும் மீடியா சைடில் இல்ல ரீட்டா. 'மோகமுள்’ படத்துக்காக என்னைத் தேர்வு செய்தப்போ, நான் மூணாவது படிச்சிட்டு இருந்தேன். அதுக்கப்புறம்தான் என்னோட நடிப்பு ஆர்வம் வளர்ந்தது. இப்பகூட ஒரு காமெடி படம் கமிட் ஆகியிருக்கேன். செம ரகளையா இருக்கும்.''

''ஆமாம்... டி.வி-யைத் தவிர ரத்ததானம், அன்னதானம்னு சோஷியல் சர்வீஸ்னு கேள்விப்பட்டேனே?!''

''இதெல்லாம் உனக்கு எப்படி ரீட்டா தெரியும். ஏகப்பட்ட உளவாளிகள உலவ விட்டிருக்க போலிருக்கு. ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்போல. காலேஜ் படிக்கற காலத்திலிருந்தே ரத்த தானம் பண்ணிட்டிருக்கேன் ரீட்டா. இப்ப யாருக்காச்சும் ரத்தம் தேவைப்பட்டா... ஏற்பாடு செய்தும் தந்துட்டிருக்கேன். அது மட்டும் இல்லாம, அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம்; கோயில் சீரமைப்பு வேலைகளுக்கு பண உதவி; முதியோர், விதவை உதவித்தொகை வாங்கிக் கொடுப்பது; நல்லா படிச்சாலும் மேலே படிக்க வசதியில்லாத, ஏழைக் குழந்தைகளுக்கு உதவறதுனு சில நல்ல காரியங்களையும் செய்திட்டிருக்கேன். இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்கள்...''

கருணைமிக்க கனகு... நீ வாழ்க!

கேபிள் கலாட்டா

'ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ’

ப்போவெல்லாம் கோடம்பாக்கத்தில் ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. எந்த சினிமா வுக்குப் போறது, எது நல்லா இருக்கும்னு நாம முடிவெடுக்க, பெப்பர்ஸ் டி.வி-யில 'ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ’னு ஒரு நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகுது. அந்தந்த வாரம் புதுசா ரிலீஸ் ஆகற படத்தைப் பத்தி, தியேட்டரில் படம் பார்த்து வெளிவரும் ரசிகர்கள்கிட்ட கருத்து கேட்கறதோட, படத்தை பத்தின சின்ன தொகுப்பும் வழங்குறாங்க. வெள்ளித்திரை ரசிகர்களுக்கான சின்னத்திரையின் ஸ்பெஷல் ஷோ இது!

படிப்பாளீஸ்!

ப்ளஸ் டூ ரிசல்ட்... பத்தாவது ரிசல்ட்... இப்படி படிப்பைச் சுத்தியேதான் ஊரெல்லாம் பேசிட்டிருக்கு. அதனால, நம்ம டி.வி ஸ்டார்ஸ்களோட படிப்பு எந்த அளவுக்கு இருக்கும்னு விசாரிச்சேன்.

கேபிள் கலாட்டா

அந்தக் காலத்துலயெல்லாம்... 'நான், பத்தாவது படிக்கும்போதே நடிக்க வந்துட்டேன்....’னு சினிமா பிரபலங்கள் சூப்பரா எடுத்துவிடுவாங்க. ஆனா, இந்தக் காலத்துல அப்படி இல்லீங்கோ! உதாரணத்துக்கு... விஜய் டி.வி-யில கலக்கிட்டிருக்கற மா.கா.பா ஆனந்த், எம்.பி.ஏ. முடிச்சிருக்கார். சிவகார்த்திகேயன், பாவனா இவங்களும்கூட எம்.பி.ஏ-தானாம். ரம்யா பி.எஸ்ஸி., விஸ்காம் முடிச்சுட்டு, எம்.ஏ மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம் முடிச்சிருக்காங்க. ஆர்த்தி கணேஷ் எம்.பி.ஏ படிப்புல, ஹெச்.ஆர் அண்ட் மார்க்கெட்டிங்னு ரெண்டுவிதமான சிறப்பு படிப்பும் முடிச்சுருக்காங்க. கூடுதலா இப்போ பிஹெச்.டி வேற பண்ணிட்டிருக்காங்களாம். நம்ம டி.டி (திவ்யதர்ஷினி) மேடம்... எம்.ஃபில் முடிச்சிட்டு, தனியார் காலேஜ்ல லெக்சரரா வேற இருக்காங்களாம்.

ஓஹோ££££££!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா

 150

நாகரிக பாட்டி!

''அது 'பிக் பஜார்’ விளம்பரம். கடைப் பையனிடம் ஒரு பாட்டி, ஷார்ட்ஸ் (அரை டிராயர்) கேட்கிறார். பையன் ஆச்சர்யப்பட்டு பாட்டிக்குத் தகுந்த நீளமான ஷார்ட்ஸ் எடுத்துக் காட்ட, பாட்டி அதை மறுத்து சின்னதாக வேண்டும் என்று சைகையில் காட்டுகிறார். உடனே, அந்தப் பையன் சிறிய ஷார்ட்ஸ் எடுத்துக் கொடுக்க, பேத்தியை அழைக்கும் பாட்டி 'இந்த ஷார்ட்ஸைப் பாரு’ என்று சொல்ல, பேத்தி ஆச்சர்யப்படுகிறார். கடைப் பையன் வாயைப் பிளக்கிறான். ஒரே சுவாரஸ்யம் போங்க! அருமையான விளம்பரம்'' என்று பாராட்டுகிறார் சென்னையில் இருந்து காமாட்சி சுந்தரம்.

அடச்சே!

''பசியோடு சாப்பிட உட்காரும் சிறுவன், தயிர் சாதத்திலிருந்து கொத்தாக தலைமுடியை எடுத்து, முகம் சுளித்தவாறு தூக்கிப் போடுகிறான். அம்மாவோ, தனக்கு முடி கொட்டுகிறது என கவலையோடு பார்க்கிறாள். இது ஹேர் ஆயில் ஒன்றுக்கான விளம்பரம். அடச்சே... என்னதான் விளம்பரம் என்றாலும், ஒரு நாசூக்கு வேண்டாமா? இப்படி அருவருக்க வைக்கும் வகையிலா படம்பிடிப்பது! இதைப் பார்த்தால், அந்தத் தயாரிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும் போலிருக்கிறது'' என்று ஆதங்கப்படுகிறார் மதுரையில் இருந்து என்.சாந்தினி.

காணாமல் போகும் கஷ்டம்!

''தொலைக்காட்சிகளில் வி.ஐ.பி மற்றும் சாதித்தவர்கள் போன்றோரை நேர்காணல் செய்வதைத்தான் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், புதிய தலைமுறை சேனலின் 'சாமான்யருடன் ஒரு நாள்’ நிகழ்ச்சி... சமூகத்தின் சாதாரணமானவர்கள் பற்றியே பேசுகிறது. சுவரொட்டி ஒட்டி வாழ்க்கை நடத்துபவர், மரக்கிளைகளை வெட்டுவதை தொழிலாக வைத்திருப்பவர் என்றெல்லாம் பார்க்கும்போது... 'நாம் கஷ்டப்படுகிறோம்' என்று அடிக்கடி உள்ளுக்குள் எட்டிப் பார்க்கும் நினைப்பு, அடியோடு மறைந்தே போகிறது!'' என்று நெகிழ்கிறார் புதுச்சேரியில் இருந்து மகாலக்ஷ்மி சுப்ரமணியன்.