மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

பியூட்டீஸ் வழங்கும் ‘பியூட்டி டிப்ஸ்’!ரிமோட் ரீட்டா

சுட்டெரிக்குது சம்மர். 'இந்த வெயில், என் அழகை எல்லாம் விழுங்கிருச்சே’னு பல பியூட்டீஸ் ஃபீல் பண்றதா தகவல் வந்துச்சு. சேனல் ஸ்டார்ஸ்கிட்ட கொஞ்சம் பியூட்டி டிப்ஸ் கேட்போம். ஃபாலோ பண்றதா வேண்டாமாங்கறது உங்க சாய்ஸ்!

தக்காளியும் எலுமிச்சையும் 'சன் டேன்’- க்கு மருந்து!

'புதுயுகம்' சேனலின் பியூட்டி குயின் ஃபரினா அஸாத்கிட்ட பிட்டை போட்டு பியூட்டி டிப்ஸ் வாங்கிடலாம்னு பொண்ணோட வீட்டுக் கதவைத் தட்டினா, 'முறைமாமன்’ படத்துல குஷ்பு வர்ற மாதிரி முகத்துல பேக் போட்டுட்டு வந்து, நம்மை நிலைகுலைய வெச்சிட்டாங்க.

''ஓவரா ரியாக்ஷன் காட்டாத ரீட்டா. அதை விடு... என்னோட நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்கிறியா..?''

''பார்க்கிறேனே... ராஜ் டி.வி-யில...''

''அடிப்பாவி... அது நான் மீடியாவுக்கு வந்த புதுசுல பண்ணினது. இப்போ 'ஜீ தமிழ்’ல 'ஸ்டுடியோ சிக்ஸ்’, புதுயுகம்ல 'ஷோ ரீல்’, 'கோலிவுட் அன் கட்’னு பல நிகழ்ச்சிகள் பண்றேன். பேர்ல மட்டும் இல்லாம, கையிலயும் ரிமோட் வெச்சுக்கோ ரீட்டா''

''விடு பேபி... வெயிலோட சேர்த்து நீயும் வறுத்தெடுக்காதே...''

''நீ வேற ரீட்டா, இதெல்லாம் ஒரு வறுவலா? ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்துல நடிக்கப் போய்தான், இப்படி பேக் போட்டு பேய் மாதிரி உட்கார்ந்திருக்கேன். வறுத்தெடுத்துட்டாங்க...''

கேபிள் கலாட்டா

''என்னாச்சு ஃபரினா..?''

''மொட்டை வெயில்ல, காலையில ஏழு மணிக்கு ஆரம்பிச்ச ஷூட், சாயங்காலம் ஆறு மணிக்குதான் முடிஞ்சது. ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெகு அருகில், பஸ் ஸ்டாண்டுல இருந்து பக்கத்தில், ஸ்கூல்ல இருந்து கூப்பிடுற தூரத்தில்னு பொட்டல் காட்டுக்கு நடுவுல நின்னு பேசவெச்சி, அழகா இருந்த பொண்ணை அழுக்காணியா மாத்திட்டாங்க ரீட்டா.

அன்னிக்குனு பார்த்து, விஜய் டி.வி 'தாயுமானவன்’ சீரியல்ல ஒரு கேரக்டருக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்கதா சொல்லி, அடுத்த நாளே நேர்ல வரச் சொல்லி போன் பண்ணிட்டாங்க. 'சிவாஜி’ பட ரஜினி மாதிரி, ஓவர் நைட்ல ப்ளீச், ஃபேஷியல், ஃபேஸ்பேக்னு எதைப் பண்ணினாலும், கருத்தம்மாவாவே இருந்தேன். என்னோட மேக்கப் மேனுக்கு போன் பண்ணிக் கேட்டா, 'ஐயையோ... வெயில்ல போயிட்டு வந்ததும் ப்ளீச் பண்ணினா, ஸ்கின் இன்னும் கருத்துடும்னு’ பயமுறுத்திட்டார். அப்புறம் அவர் சொன்ன டிப்ஸைதான், இப்போ வரைக்கும் ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்''.

''அத அத... அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்!''

''அதுவா, தக்காளியை நல்லா மிக்ஸியில அடிச்சு, அதோட எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் முகத்துல தடவி ஊறவெச்சிக் கழுவுனா, வெயிலால கருத்த சருமம், மறுபடியும் பழைய நிறத்துக்கு மாறிடுமாம் ரீட்டா!''

''ஓகே... வந்த வேலை முடிஞ்சுடுச்சு... டாடா!'' 

க்ரீன் டீ மேஜிக்!

கேபிள் கலாட்டா

சன் டி.வி, 'இளவரசி’ சீரியல்ல சந்தியாவா கலக்கிட்டு இருக்கும் அப்சரா, கேரளத்து பெண் குட்டி. அப்புறம் எப்படி தமிழ் சீரியல் பக்கம்?!

''நான் நடிக்க வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்தது இல்ல ரீட்டா. சினிமா ஹீரோயின் மாதிரி பேசறாளேனு நினைக்காதே. டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங் படிச்சப்போ, நிறைய ஷார்ட் ஃபிலிம் எடுப்போம். நான் எடுக்கும் படங்கள்ல என் ஃப்ரெண்ட்ஸ் நடிக்க, அவங்க எடுக்குற படங்கள்ல நான் நடிக்க... இப்படித்தான் நடிப்பு அறிமுகமாச்சு. படிப்பு முடிச்சதும் தனியார் கல்லூரியில கெஸ்ட் லெக்சரரா வேலை பார்த்தேன்...''

''அப்பூடியா!''

''நம்பும்மா. அந்தக் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியோட புகைப்படங்களை ஃபேஸ்புக் பேஜ்ல அப்லோட் பண்ணினேன். அதைப் பார்த்த பி.ஆர்.ஓ ஒருத்தர், என்னை தொடர்புகொள்ள, அவர் மூலமாதான் சேனலுக்கு வந்தேன். சன்-ல 'அழகி’, 'இளவரசி’, ஜெயா-வுல 'வைதேகி’னு, லெக்சரர் வேலையை விட்டுட்டு, பிஸியா நடிச்சிட்டு இருக்கேன்.''

''சூப்பரு! அது சரி, குளுகுளு கேரளாவுல இருந்துட்டு, சென்னை வெயில எப்படி சமாளிக்கிறீங்க?''னு மேட்டருக்கு வந்தேன்.

''நானே வீட்ல க்ரீன் டீ ரெடி பண்ணி ஆறவெச்சு பாட்டில்ல ஊத்தி, எங்க போனாலும் கூடவே எடுத்துட்டுப் போயிடுவேன் ரீட்டா. தினமும் 10, 12 ஃப்ரூட் ஜூஸ் குடிச்சிடுவேன். குறிப்பா... தர்பூசணி, சாத்துக்குடி. ஜூஸ் பண்றப்போ கிடைக்கிற பழச்சக்கையோட, நாட்டு மருந்துக் கடையில கிடைக்கிற நலங்கு மாவையும் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு, ஊறவெச்சு, கழுவிடுவேன். அப்புறம், நிறைய தண்ணி குடிப்பேன்.''

''அப்சுமா... நீ லெக்சரரா... பியூட்டிஷியனா..?!''

''கிண்டலா! நான் பார்லருக்கெல்லாம் பெருசா செலவு பண்றதில்ல ரீட்டா. எதுக்கு செலவு பண்றதா இருந்தாலும், அது அவசியமானு 10 முறை யோசிக்கிறதை பாலிசியா வச்சிருக்கேன். அநாவசிய செலவைக் குறைச்சுட்டு, அந்தக் காசுல தினமும் மூணு பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன். வீட்டுக்குப் பழங்கள் வாங்கும்போதெல்லாம், பக்கத்துல இருக்கிற குழந்தைகள் காப்பகத்துக்கும் வாங்கிட்டுப் போய் கொடுப்பேன். இப்படி என்னால முடிஞ்ச உதவிகளை செய்வேன். இதையெல்லாம் பெருமைக்காக சொல்லலை... நாலு பேர் என்னை ஃபாலோ பண்ணினா நல்லதுதானே!''

''நல்லா ஃபாலோ பண்ணுங்கப்பா. அப்சராவை இல்ல... அவங்க பாலிஸியை!''

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  

கேபிள் கலாட்டா

 150

வாசகிகள் விமர்சனம்

குழந்தைகளே... பாருங்கள்!

''நேஷனல் ஜியோகிராபிக் சேனலில், திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 9 - 10 மணிக்கு 'பிரெய்ன் கேம்ஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், நமது மூளை எவ்வாறு ஏமாறுகிறது என்பது பற்றி தெளிவாக சொல்லப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் அற்புத நிகழ்ச்சி. குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க வையுங்கள் பெற்றோர்களே'' என்று அக்கறையுடன் வேண்டுகோள் வைக்கிறார் திருவாரூரில் இருந்து டி.சந்திரா

அபசகுன விளம்பரம்!

''இப்போதெல்லாம் நிறைய பேருக்கு வரும் தும்மல், சாதாரண தும்மலாக இருப்பதில்லை என்றொரு சோப் விளம்பரம் வருகிறது. அந்த விளம்பரத்தின் தொடக்கத்தில், திடீரென ஒரு பெண் அதிர்ந்து தும்மும் சத்தம் ஒலிக்கும். வீடே அதிரும். பொதுவாக, தும்மல் என்பது அபசகுனமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில்.... மக்களின் கவனத்தை ஈர்க்கிறோம் என்று இப்படியெல்லாம் செய்வது சரியாகத் தோன்றவில்லை. இதைவிட கலைநயத்துடன், கருத்துமிக்க விளம்பரங்கள் மூலமாக மக்களை ஈர்க்க முயற்சிக்கலாமே'' என்று அறிவுரை சொல்கிறார்... சென்னை கே.கே.நகரில் இருந்து அ.யாழினி பர்வதம்.

ஆவலைத் தூண்டும் மகாபாரதம்!

''சன் டி.வி-யில் வரும் மகாபாரதம்... காட்சி அமைப்புகள், கதாபாத்திரங்கள், கதை நேர்த்தி என பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது. பாஞ்சாலி, பஞ்ச பாண்டவர்களை மணந்ததையும் அழகாக விளக்கி உள்ளனர். சம்பவங்கள் கற்பனையாக இல்லாமல், நேரில் பார்ப்பது போல இருப்பது... ஆவலைத் தூண்டுகிறது'' என்று நெகிழ்கிறார் நாமக்கல்லில் இருந்து எம்.பாரதிமுருக நாதன்.