மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

யாவருக்கும் பயமே!ரிமோட் ரீட்டா

 'நீங்க பயப்படும் விஷயங்கள் என்ன..?’ - சேனல் ஸ்டார்ஸ்கிட்ட கேட்போமா..?! ரெடி ஸ்டார்ட்!

பல்லிதான் எனக்கு வில்லி!

சன் டி.வி 'இளவரசி’ சீரியல்ல அநியாயத்துக்கு நல்லவனா இருந்து, இப்போ அந்தர் பல்டி அடிச்சு நடிச்சிட்டு இருக்கும் பரத்துக்கு ஒரு 'ஹாய்’ சொன்னேன்.

கேபிள் கலாட்டா

''என்ன ரீட்டா, என்ன விஷயம்?''

''என்ன பாஸ் மிரட்டறீங்க..?''

''அட நீ வேற... நான் ரொம்ப அமைதியான பையன் ரீட்டா. ஒழுங்கா பி.இ படிச்சிட்டிருந்தேன். நண்பன் ஒருத்தன் அசிஸ்டென்ட் டைரக்டராக முயற்சி பண்ணிட்டு இருந்தான். அவன்கிட்ட பைக் இல்லாததால, சான்ஸ் தேடப் போகும்போதெல்லாம் அவனை நான்தான் பைக்ல கூட்டிட்டுப் போவேன். அப்படிப் போகும்போது, நடிகர் சான்ஸ் தேடி வந்துடுச்சு.

'உயிர் ஓசை’னு ஒரு படத்துல ஹீரோ ரோல் பண்ணினேன். அடுத்து விஜய் சாரோட 'சிவகாசி’, ஜீவாவோட 'கச்சேரி ஆரம்பம்’னு திரைப்பயணம் தொடர்ந்தது. கலைஞர் டி.வி-யில, கே.பி சாரோட 'தேன்மொழியாள்’, சன் டி.வி-யில 'அரசி’, 'உறவுகள்’, 'இளவரசி’... இப்படி சீரியல், சினிமானு பேலன்ஸ்டா போயிட்டிருக்கேன்''னு நீண்ட விளக்கம் தந்த பரத்கிட்ட, அவரோட பயம் பத்திக் கேட்டேன்.

''எல்லாரும் என்னைப் பார்த்துதான் பயப்படறாங்க ரீட்டா...''

''சும்மா சமாளிக்காதீங்க பாஸ்...''

''சரி விடு, என்னோட இமேஜை டேமேஜ் ஆக்குறதுனு முடிவு பண்ணிட்ட. எனக்கும் ஒரு பயங்கர பயம் இருக்கு ரீட்டா. அது என்னமோ தெரியல, எனக்கு இந்த பல்லியைப் பார்த்தா அப்படி ஒரு பயம். அஞ்சாவது படிச்சிட்டிருந்தப்போ, வீட்டு படி ஏறிப் போயிட்டிருந்தேன். பார்த்தா, எனக்கு முன் படியில ஒரு பல்லி, பின் படியில ஒரு பல்லி, சைடு சுவர்ல ஒரு பல்லி...''

''அடியாள் கணக்கா வூடு கட்டிடுச்சுங்க போல!''

''அட, ஆமா ரீட்டா. பயத்துல நான் 'அம்மா’னு கத்தினதுல, பக்கத்து வீட்டு அம்மாஸ் எல்லாம்கூட பதறிப் போய் வந்துட்டாங்க. அந்த துன்பியல் சம்பவத்துல இருந்து, எனக்கு பல்லினா பயம்!''

ஏம்பா சீரியல் டைரக்டருங்களா, இந்தப் பச்சப் புள்ளய போய் பயங்கரமா காட்றீங்களே... எப்படிய்யா!

தல புடிக்கும்... மல புடிக்காது!

புதுயுகம் சேனலின் 'ஸ்டார்ஸ் டே அவுட்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அகல்யா, அஜித்தோட பரம விசிறியாம்!

''அப்படியா பேபி..?!''னு கேட்டா, ''ஓ... அது உனக்கும் தெரிஞ்சுடுச்சா..!''னு குஷியானாங்க அகல்யா.

''என் வீட்ல யாரும் மீடியா பக்கம் எட்டிப் பார்த்ததுகூடக் கிடையாது. அப்பா வெங்கடேசன், சொந்தமா கால் டாக்ஸி ஓட்டிட்டு இருக்காரு. அம்மா, அரசியல்ல இருக்காங்க. ஒரே ஒரு தங்கச்சி. நான் விஸ்.காம் முடிச்சதும், மீடியா பக்கம் வந்துட்டேன். எனக்கு ஒரு கனவு இருக்கு... என்னோட முதல் படத்துல 'தல’க்கு  தங்கச்சியா நடிக்கணும்; இல்ல இல்ல... வாழணும்!''னு 'தல’புராணம் பாடினவங்ககிட்ட,

''அஜித் பிறந்தநாளை நீ கொண்டாடுறதும் மீடியாவுல செம டாக்கா இருக்கே..?!''

''அதுவும் உனக்குத் தெரிஞ்சுடுச்சா! மே ஒண்ணு, 'தல’யோட பிறந்தநாள். என்னோட பிறந்த நாளை மறந்தாலும், இந்த நாளை மறக்கவே மாட்டேன். காலையிலயே எழுந்து, புது டிரெஸ் போட்டுட்டு, எல்லாருக்கும் சாக்லேட், ஸ்வீட்ஸ், ட்ரீட்னு வெச்சு ஜமாய்ச்சுடுவேன். இந்த வருஷம் 'தல’ போட்டோவை டி-ஷர்ட்ல பிரத்யேகமா பிரின்ட் செய்து வாங்கி, அதை போட்டுக்கிட்டு, ஒரே அலப்பறைதான்!''

கேபிள் கலாட்டா

''சரி சரி... அகல்யாவுக்கு எதைப் பார்த்தா பயம்..?!''

''பயமா? எனக்கா? நோ சான்ஸ். ஆனா, கொஞ்சம் காதைக் கொடு... மலைக்கு மட்டும் பயம் எனக்கு. அதில் டிராவல் பண்ணி போகும்போது, உயிரை கையில பிடிச்சிட்டே இருக்கணும். அதனால, கோடி ரூபா கொடுத்தாலும் ஹில் ஸ்டேஷன் போகமாட்டேன்!''

அப்பாடா, பதில் கிடைச்சிருச்சு... வுடு ஜுட்!

பயமோ பயம்!

விஜய் டி.வி 'ஆபீஸ்’ சீரியல்ல 'மஞ்சு’வா வரும் சாய் ரதியாவை பார்க்கணும் பார்க்கணும்னு நினைச்சு, அன்னிக்குப் பார்த்துட்டேன்.

''என்னம்மா கண்ணு, பார்க்கிறவங்களை எல்லாம் கலாய்ச்சு எடுக்கறியாமே?

கேபிள் கலாட்டா

''அதெல்லாம் சீரியல்ல மட்டும்தான் ரீட்டா. நெஜத்துல எல்லாரும் என்னைத்தான் ரவுண்டு கட்டி கலாய்ப்பாங்க.''

''அட, அவ்ளோ அப்பாவியா நீ..! அப்ப நிச்சயமா எதுக்காச்சும் பயப்படுவியே... அது என்னனு சொல்லு பார்க்கலாம்''னு மேட்டருக்கு வந்தேன்.

''சின்ன வயசுல ரவுண்டு கட்டி பேய்க்கதை பேசினதால வந்த வினை... எதைப் பார்த்தாலும் பயம் எனக்கு. மொட்டை மாடியில இருந்து எட்டிப் பார்க்கப் பயப்படுவேன். குடும்பத்தோட ஊருக்குப் போனா, எங்க வீட்ல எல்லாரும் ஜாலியா குளத்துல இறங்கிக் குளிப்பாங்க. நான் மட்டும் கரையில உட்கார்ந்து கப்புல மொண்டு குளிப்பேன். குளமும் பயம் எனக்கு.

டூ வீலர் ஓட்டுவேன். ஆனால், எதிர்ல லாரி, பஸ்ஸுனு வந்தா, உடனே வண்டியை ஓரமா நிப்பாட்டிருவேன். பெரிய வண்டினா அவ்ளோ பயம்! என் ஹஸ்பண்ட் 'யாமிருக்க பயமே’ படத்துக்கு கூட்டிட்டுப் போனாரு. கையால முகத்தை மூடிட்டு, படமே பார்க்கல. டிக்கெட் காசு வேஸ்ட்டுனு ஒரே திட்டு. அப்புறம்...''னு கமா போட்டுட்டே போனாங்க ரதியா.

யம்மா... உன் பயம் 'தெனாலி’ கமலை மிஞ்சிடும்போல. ஆள விடும்மா!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

 150

சிறுவர் யோகா... அருமை!

''சுட்டி டி.வி-யில் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'ஓம் யோகா’ நிகழ்ச்சியில், ஒவ்வொரு யோகா பயிற்சியையும் எவ்வாறு செய்வது... அதனால் என்னென்ன பயன் என்று சிறுவர்களை வைத்தே செய்துகாட்டுகிறார்கள். சிறுவர்களே யோகா செய்வதால், வீட்டில் உள்ள சிறுவர்களும் ஆர்வமாக பார்த்து, யோகா கற்றுக்கொள்கிறார்கள். இது, பயனுள்ளதாக உள்ளது'' என்று நன்றி பாராட்டுகிறார் சென்னை, போரூரில் இருந்து கே.ஜெயலட்சுமி.

தலைவிரிகோல தொகுப்பாளினிகள்!

''தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் வரும் சமையல் வல்லுநர்கள் (செஃப்), தங்களின் தலைமுடியை மறைத்து குல்லாய் அணிந்துதான் வருகிறார்கள். ஆனால், உடனிருந்து சமையலை விவரிக்கும் தொகுப்பாளினிகளோ... தலைவிரிகோலமாக நிற்பதும், ஸ்டைலாக அடிக்கடி தலைமுடியை ஒதுக்கிவிட்டபடி பேசுவதுமாக இருக்கிறார்கள். உணவில் முடி விழாமல் இருப்பதற்காகத்தான் செஃப் குல்லாய் அணிந்திருக்கிறார் என்பதைக்கூட உணராமல், இவர்கள் தலைவிரிகோலமாக நிற்பதைப் பார்க்கும்போது, பற்றிக்கொண்டு வருகிறது'' என்று வருத்தப்படுகிறார் ஈரோடில் இருந்து எஸ்.வளர்மதி.

மனதை உருக்கிய சிறுவன்!

''சமீபத்தில் விஜய் டி.வி-யில் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4’ பார்த்தேன். அதில் செந்தில்குமரன் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன் பாடல் பாடிய விதம், நடுவர்கள் சித்ரா, மனோ, மால்குடி சுபா ஆகியோரை மட்டுமல்ல... பார்வையாளர்கள் அனைவரின் மனதையும் உருக்கிவிட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்'' என்று உருகிப் பேசுகிறார் கிருஷ்ணகிரியில் இருந்து பத்மாவதி.