கறுத்த முகம் களையாக மாறணுமா..?இந்துலேகா.சி
பார்லர் - பாரம்பரியம் பகுதியில், இதுவரை கேசம் மற்றும் சரும வகைகள், அவற்றைப் பராமரிக்கும் வழிமுறைகள் பற்றி எல்லாம் விரிவாகப் பார்த்தோம். இனி, வெயிலில் முகம் கறுத்தல், முகப்பரு, ரேஷஸ் (அலர்ஜியால் வரும் திட்டுக்கள்), மங்கு இதுபோன்ற சருமத்தின் பொதுவான பிரச்னைகளையும், தீர்வுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.
பார்லர்
''கோடையில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்கவும், வெயிலில் சருமம் கறுக்காமல் இருக்கவும், பொலிவைக் கொடுக்கவும் பார்லரில் முக்கியமான சில சிகிச்சைகளை செய்கிறோம்'' என்று சொல்லும் 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ சீனியர் டிரெயினர் பத்மா, அவற்றை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.
ஹேர் ஸ்பா: இது, வெயிலால் கேசம் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும் அருமையானதொரு சிகிச்சை. முதலில் பிரத்யேக ஷாம்பு போட்டு கேசத்தை அலசுவோம். முடியின் தன்மைக்கேற்ற ஹேர் க்ரீம் மற்றும் கான்சென்ட்ரேட் இரண்டையும் ஒன்றாகக் கலந்து 'ஸ்கால்ப்’ பகுதியிலும், க்ரீமை மட்டும் எடுத்து கேசத்திலும் தடவி, கழுத்து, முதுகு மற்றும் கை முழுவதும் மசாஜ் கொடுப்போம். அடுத்து, தலைக்கு நீராவி கொடுத்து, கேசத்தை அலசிவிடுவோம்.
ஆயில் மசாஜ்: அவரவரின் கேசத்தன்மைக்கேற்ற எண்ணெய் அல்லது மின்ட் ஆயில் விட்டு, தலைக்கு மசாஜ் கொடுப்போம். இந்த சிகிச்சையிலும் உடல் சூடு தணிந்து, குளிர்ச்சிபெறும்.
பிரைட் அண்ட் ஷைன்: ஃபிரெஷ்ஷான காய்கறிகளின் தோலைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃபேஷியல், வெயிலால் கறுத்த சருமத்தை பழைய நிறத்துக்கு கொண்டு வரும்.
ஃபேர் ப்ளூம்: ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, அதிமதுரம் போன்ற பழங்கள் மற்றும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் இந்த ஃபேஷியலில், கூடுதலாக டி - டேன் மாஸ்க் உள்ளதால், கறுத்த முகத்தை நிறமாக்குவதோடு, வெயிலால் மறுபடியும் முகம் கறுக்காமல் பாதுகாக்கும்.
வொயிட் ஸ்பார்கிள்: இந்த ஃபேஷியலில் ப்ளீச்சிங் மாஸ்க் மற்றும் பீல் ஆஃப் மாஸ்க் ரெண்டுமே உள்ளதால், ப்ளீச் செய்யாமலேயே இழந்த சரும நிறத்தை மீட்கலாம்.

பாரம்பரியம்
''கோடையில்தான் நம்ம உடலில் உள்ள கழிவெல்லாம் வெளியேறும். அதனால, உடம்பைப் பொறுத்தவரைக்கும் இது ரொம்ப நல்ல சீஸன். ஆனா, வெயிலின் உச்சத்தால உடலின் நீர்ச்சத்து அதிகளவு வெளியேறுவதால சில பிரச்னைகளும் ஏற்படும்'' என்று சொல்லும் 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக்கின் நிர்வாகி கீதா அஷோக், வெயிலினால் ஏற்படும் பிரச்னைகளையும் தீர்வுகளையும் வரிசையாக பட்டியலிட்டார்.
வெயிலினால் கறுத்த முகம்: சூரியனின் புறஊதா கதிர்கள், நம் சருமத்தில் ஊடுருவுவதால், நிறமியை உற்பத்திச் செய்யும் மெலனினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் முகம் கறுக்கிறது. இதனைத் தவிர்க்க, வெயிலில் சென்று வந்தவுடன் தக்காளிச் சாற்றுடன் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் கழித்து கழுவவும். அல்லது மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும் கேலமைன் ஐ.பி லோஷனை, தினமும் இரவில் முகத்தில் அப்ளை செய்து, பத்து நிமிடம் கழித்து கழுவவும். இந்த இரண்டுமே, அன்றைய கறுமையை அன்றே போக்கி, இயல்பான நிறத்தை தக்கவைக்கும்.
மங்கு: தொடர்ந்து பல நாட்களாக வெயிலில் அலைந்து, சருமத்தையும் கவனிக்காமல் விட்டால், சருமம் கறுத்து, அது மங்காக மாறிவிடும். இதற்கு வீட்டு வைத்தியத்தில் தீர்வில்லை, மருத்துவரை அணுகவேண்டும்.
வியர்க்குரு: கோடையில் அதிகளவு வெளியேறும் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து குறைவதால், உடல் சூடாகும். சூடு பொறுக்காமல் சருமத்தில் ஏற்படும் சிறுசிறு பொரிகள்தான் வியர்க்குரு. இதை கவனிக்காமல் விட்டாலோ, சொறிந்தாலோ நிரந்தர கரும்புள்ளிகள் தோன்றும். வியர்க்குருவைக் குறைக்க, நுங்கின் மேல் தோலை அவற்றின் மீது தேய்க்கலாம். பத்து மில்லி தேங்காய்ப்பாலில், ஒரு ஸ்பூன் கசகசாவை ஊறவைத்து அரைத்து, அந்த பேஸ்ட்டை பூசலாம். ஐந்து சின்ன வெங்காயத்தின் சாறெடுத்து, அதில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா மாவு போட்டால் நுரைத்து வரும். அந்த நுரை அடங்கும் முன் கலவையை வியர்க்குருவின் மேல் தேய்த்தால், இரண்டு மணி நேரத்தில் வியர்க்குரு பொரிந்துவிடும். இரண்டு, மூன்று நாட்களில் வியர்க்குரு வந்த சுவடே இருக்காது.
சன் பர்ன்: சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் சருமம் சிவந்துவிடும். இதைச் சரிசெய்யாவிட்டால், மங்கு ஏற்பட்டு முகத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும். எனவே, வெள்ளரி, தர்பூசணி அல்லது பூசணி இவற்றில் ஏதாவது ஒன்றின் விதையை, சுத்தமான பன்னீரில் ஊறவைத்து, விழுதாக அரைத்து, இதனுடன் இரண்டு சொட்டுகள் லேவண்டர் ஆயில் கலந்து, சன் பர்ன் ஆன இடங்களில் தடவி, அரைமணி நேரம் கழித்து கழுவவும்.
அக்கி மற்றும் அம்மை: கோடை பிரச்னைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது, அக்கி மற்றும் அம்மை. கோடை காரணமாக உடலின் நீர்ச்சத்து வெளியேற்றம், கூடவே அதிக தண்ணீர், பழங்கள் எடுக்காமல் இருப்பது, எண்ணெய் காரம் அதிகம் சேர்த்துக்கொள்வது... இவற்றால் உடல் மேலும் சூடாகி, அம்மை மற்றும் அக்கி ஏற்படுகிறது.
இவை இரண்டுமே உடல் முழுவதும் பரவி வலி ஏற்படுத்தக் கூடியவை. இதற்கு, நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் காவிக்கல்லை வாங்கி, சொரசொரப்பான தரையில் சந்தனம் போல் இழைக்கவும். அதோடு செஞ்சந்தனம் (ரெட் சாண்டல்) சேர்த்து, சூட்டுக் கொப்பளம், அக்கி, அம்மை இவற்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, மூன்று மணி நேரம் கழித்துக் கழுவவும். கழுவும்போது தேய்த்துக் கழுவாமல், மருந்துக் கடையில் கிடைக்கக் கூடிய பேண்டேஜ் துணியை, ஐஸ் வாட்டரில் நனைத்து, ஒத்தடம் கொடுப்பது போல் தொட்டு தொட்டு எடுக்கவும். இல்லையெனில் கொப்புளங்கள் உடைந்து, அதிகமாகப் பரவும். தினமும் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை இதை செய்து வந்தால், வியாதியின் வீரியத்தைப் பொறுத்து 3 - 5 நாட்களில் குணமாகும்; கரும்புள்ளிகளோ, தழும்புகளோ வராது.
அம்மைத் தழும்புகள் மறைய: அம்மை நோய் போய்விட்டாலும், சிலருக்கு கரும்புள்ளிகள் மற்றும் தழும்பு இருக்கும். சோளமாவு கால் டீஸ்பூன், பட்டையின் பொடி ஒரு சிட்டிகை, ஜாதிக்காய் பொடி ஒரு சிட்டிகை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது மோர் விட்டு, பேஸ்ட் போல் குழைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து 30 நாட்களுக்கு தவறாமல் செய்தாலேபோதும், தழும்புகள் தடம் தெரியாமல் போகும்.
பளீரிடும்...