மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

கட்டிங், வெட்டிங், ஒட்டிங்! ரிமோட் ரீட்டா, படம்: ஜெ.தான்யராஜு

சேனல் ஏரியாவுல, டிரெஸ்ஸிங் சென்ஸ்ல கலக்குற சில ஸ்டார்ஸைப் பார்ப்போமா?!

நீட் அண்ட் க்யூட் நீலிமா!

நீலிமாராணி வரவர அழகாயிட்டே போறாங்க‑. கூடவே, இண்டஸ்ட்ரியில அவங்க டிரெஸ்ஸிங்கை பாராட்டாதவங்களே இல்லை. இந்த ஃபேஷன் சிறப்பிதழ்ல அவங்க பேட்டி இல்லாமலா... மேடத்துக்கு ஒரு சல்யூட் வெச்சேன்.  

கேபிள் கலாட்டா!

''திடீர்னு புடவை, திடீர்னு ஜீன்ஸ் - டி ஷர்ட், சமயத்துல கலக்கலா ஒரு டிசைனர் வேர்னு எல்லா வெரைட்டியும் கலந்து கட்டுறீங்க, எல்லாத்துலயும் அம்சமாவும் இருக்கீங்களே..!''

''அதான் மேட்டரு. எனக்கு எது சூட் ஆகும்னு எனக்குத் தெரியும். எந்த இடத்துக்கு, எந்த டிரெஸ், என்ன கலர் ச்சூஸ் பண்ணினா யுனிக்கா இருக்கும்னும் தெரியும். அப்புறமென்ன... எங்க போனாலும் எல்லாரையும் திரும்பி பார்க்க வெச்சுடலாம்!''

''எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஏதாச்சும் டிப்ஸ்..?''

''எனக்கு பொதுவா பேஸ்டல் கலர்ஸ், இங்கிலீஷ் கலர்ஸ் புடிக்கும். ஆனா அதுக்காக எல்லா இடங்களுக்கும் எனக்குப் பிடிச்ச கலர்லதான் டிரெஸ் பண்ணிட்டுப் போகணும்னு நினைக்க மாட்டேன். பொது நிகழ்ச்சிகளுக்கு வைப்ரன்ட் கலர்ஸ், பிரைட் கலர்ஸ் ச்சூஸ் பண்ணுவேன். அப்போதான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் கிடைக்கும். அதேசமயம், ஒரு 200 பேர் கலந்துக்கிற ஃபங்ஷனா இருந்தாலும், எல்லாரும் எனக்குத் தெரிஞ்சவங்க, என்னைப் புரிஞ்சவங்கனு இருந்தா, வெஸ்டர்ன்லகூட கம்ஃபர்டபிளா இருப்பேன். சுபநிகழ்ச்சிகளுக்கு புடவை அல்லது டிசைனர் ஆடை என் சாய்ஸ்.

என்ன... டிப்ஸ் கேட்டா நான் ஃபாலோ பண்ற விஷயங்களை சொல்றேன்னு பார்க்குறீங்களா? இது எல்லாத்தையும் நீங்க ஃபாலோ பண்ணினா, அதான் சூப்பர் டிப்ஸ்!''

- கண்ணடிச்சு 'பை பை’ சொன்னாங்க நீலிமா!

ரைட்டு!

''மத்தவங்க ரிஜெக்ட் பண்றது, எனக்குப் பிடிக்கும்!''

''என்ன டிரெஸ் போட்டாலும் சும்மா பளிச்சுனு இருக்கீங்களே... அந்த ரகசியத்தை சொன்னா, நம்ம பசங்களும் ஃபாலோ பண்ணுவாங்கள்ல..!''

''அப்புறம் பொண்ணுங்கள்லாம் அவங்கள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டா...?''

- ஆரம்பத்துலயே அராத்து பண்ண ஆரம்பிச்சுட்டாரு, ராஜ் மியூசிக் சேனலின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்’, 'எக்ஸ் பேண்டு’ நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் பிரவீன்.

''ஹலோ... பொண்ணுங்கள்லாம் டிரெஸ்ஸைப் பார்த்து டிஸ்டர்ப் ஆவாங்கனு யாரோ உங்களுக்கு ராங் இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க. சரி, அதை விடுங்க... உங்களோட டிரெஸ்ஸிங் யுனிக்கா இருக்குனு சேனல் ஏரியாவில் ஒரே பேச்சா இருக்கே?''

''நான் டிரெஸ் எடுக்கிற டெக்னிக் சொல்றேன் கேட்கறீங்களா? ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து ஷாப் பண்ணப் போகும்போது, அவனுங்க மட்டுமில்ல, அந்த செக்ஷன்ல நிக்கிறவங்க எல்லாரும் வேண்டாம்னு ரிஜெக்ட் பண்ற டிரெஸ்கள்ல இருந்து, எனக்குப் பிடிச்சதை எடுத்து மேட்ச் பண்ணிப்பேன். சமயத்துல அதை கட்டிங், வெட்டிங், ஒட்டிங் எல்லாம் பண்ணி ஃபங்கியா மாத்திடுவேன்!''

''ஏன் அப்படி?!''

''எல்லாரும் ஒரேமாதிரி டிரெஸ் போடறதுக்கு, எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணி ஷாப்பிங் போகணும். யாருகிட்ட வேணும்னாலும் காசு கொடுத்து டிரெஸ் வாங்கிட்டு வரச் சொல்லலாமே? என்னைப் பொறுத்தவரை எங்க போனாலும் நாம வித்தியாசமா தெரியணும். ரிஜெக்ட் ஆன பீஸை போட்டாலும், எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைக்கணும்.''

''அப்ப வருங்கால ஃபேஷன் டிசைனரா..?''

''சத்தமா சொல்லிடாதீங்க ரீட்டா... யாராச்சும் டிசைனர் காதுல விழுந்துடப் போகுது. நமக்கு சூட் ஆகறதைத்தான் போடணும்னு ஒரு கூட்டம், சூட் ஆகுதோ இல்லையோ... எதெல்லாம் புதுசா வருதோ அதையெல்லாம் வாங்கிப் போட ஒரு கூட்டம். இவங்களுக்கு நடுவுல... 'எதுவா இருந்தாலும் அதையெல்லாம் நமக்கு சூட் ஆகற மாதிரி மாத்திப் போடணும்'னு நிக்கற இந்த பிரவீனோட ஸ்டைலு, தனி ஸ்டைலு!''

ஸ்டைலு ஸ்டைலுதான்!

கேபிள் கலாட்டா!

நாலு சவரன் விலையில ஒரு டிரெஸ்!

விஜய் டி.வி 'ஆபீஸ்’ சீரியல்ல வர்ற வைஷாலி பொண்ணு, பார்க்க ஹைட் அண்ட் வெயிட்டா இருந்தாலும், முகத்தில் குழந்தை மாதிரி ஒரு பப்ளித்தனம் இருக்கும்!

''நீயும் அதையே சொல்லாத ரீட்டா... நான் காலேஜ் படிக்கிறேன்!''னு சிணுங்கினாங்க வைஷாலி!

''சரி காலேஜ் கேர்ள்... இந்த டிரெஸ் ரொம்ப நல்லாயிருக்கே... எங்க வாங்கின..?!''

''எல்லா டிரெஸ்ஸும் நான் சென்னையிலதான் வாங்குவேன் ரீட்டா. எனக்குப் பிடிச்சது, இந்த மாதிரி பார்ட்டி வேர் ஃப்ராக்தான். எனக்கும் என் அண்ணா பொண்ணுக்கும், யாரோட ஃப்ராக் நல்லாயிருக்குங்கிறதுல ஒரே போட்டியாதான் இருக்கும்!''

''வைஷு பேபி, உன்கிட்ட இருக்கிறதுல உனக்கு ரொம்பப் பிடிச்ச டிரெஸ் எது..?''

''நான் ஏழாவது படிக்கும்போது, இருபதாயிரம் ரூபாய்க்கு ஒரு காக்ரா சோளி வாங்கிக் கொடுத்தாரு எங்க அண்ணா. இப்பவும் அது எனக்கு சைஸ் கரெக்ட்டா இருக்கு. அப்போ தங்கமே ஒரு சவரன் ஐயாயிரம் ரூபாய்க்குதான் வித்துச்சு. என் சித்தி நான் அந்த சோளியைப் போடும்போதெல்லாம், '4 சவரன் தங்க விலையில டிரெஸ் போட்டிருக்கியே!’னு புலம்பித் தள்ளிடுவாங்க. இன்னிவரைக்கும் பத்திரமா வெச்சிருக்கேன். இந்த காக்ரா சோளியும், என் பாட்டியோட எட்டு கல்லு கம்மலும் என்னோட ஆல்டைம் சென்டிமென்ட் டிரெஸ் அண்ட் அக்ஸசரி!''

அண்ணா நீ வாழ்க!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

 150

கவனம் தேவை!

''சேனல்கள் பலவும் போட்டிப் போட்டுக்கொண்டு தம்பதியரை வைத்து ரியாலிட்டி ஷோக்கள் நடத்துகின்றன. டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக சினிமா காட்சிகள்போல தம்பதிகள் நெருக்கமாக, ஒட்டி உரசி இருப்பதுபோன்ற காட்சிகளை அமைக்கிறார்கள். இதுபோன்ற காட்சிகளைத் திருமணமாகாத மகன், மகள்களுடன் பார்க்கும்போது சங்கடத்தில் நெளிய வேண்டியிருக்கிறது. இதெல்லாம் தேவைதானா?'' என்று சாட்டை வீசுகிறார் மதுரையில் இருந்து விஜயலட்சுமி.

சொந்த செலவில் சூனியம்!

''கடந்த 17-ம் தேதி இரவு சன் செய்திகள் சிறப்புப் பார்வையில், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஜங்ஃபுட் உணவு வகைகள், சிப்ஸ் போன்றவற்றால் 18 வயதுக்குள் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகள், மறதி, சர்க்கரை வியாதி, மூளைச்சிதைவு போன்றவை ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியதைக் கேட்டதும் 'பகீர்’ என்றிருந்தது. நிகழ்ச்சியில், 'உடலுக்குக் கெடுதல் என்று தெரிகிறது... ஆனாலும் என்ன செய்வது? குழந்தைகள் கேட்கிறார்களே! அதனால்தான் வாங்கித் தர வேண்டி உள்ளது' என்று ஒரு பெண் பேட்டிக் கொடுத்தது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் இவர்களைஎல்லாம் யார் திருத்துவது?'' என்று ஏக்கம் பொங்கக் கேட்கிறார் சிதம்பரத்தில் இருந்து கவிதா பாலாஜிகணேஷ்.

அறியலூர்... திருச்சிராப்பல்லி!

''ஜீ தமிழ் டி.வி-யில் தனலட்சுமி - குபேர டாலர்கள் பற்றிய விளம்பரத்தில், டாலர்கள் கிடைக்கும் ஊர்களின் பெயர்களை பட்டியலிட்டார்கள். 'அரியலூர்' என்பதற்கு 'அறியலூர்' என்று ஆரம்பித்தவர்கள்... திருச்சிராப்பல்லி, திண்டிக்கல், விருதுனகர், திருனெல்வேலி, தன்ஞாவூர் என்று தப்புத் தப்பாக எழுதியிருந்தார்கள். பல ஆயிரங்கள் செலவு செய்து விளம்பரத்தை எடுப்பவர்களுக்கு, பிழையின்றி தமிழ் எழுதத் தெரிந்த ஒருவரும் கிடைக்கவில்லையோ?'' என்று வருந்துகிறார் செகந்திராபாத்தில் இருந்து வெ.சியாமளா ரமணி.