கவிபாடும் கண்களுக்கு..! இந்துலேகா.சி
கடந்த இதழ்களில், சம்மர் சருமப் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பேசிய பார்லர் - பாரம்பரியப் பகுதியில், இந்த இதழில் கண் பிரச்னைகளைப் பற்றியும், கண்களை அழகாக்குவதற்கான டிப்ஸ்களையும் பேசலாம்.
பார்லர்
''இன்று, பெரும்பாலான இளம் பெண்கள் மொபைலையும், அலுவலகம் செல்லும் பெண்கள் கம்ப்யூட்டரையும், இல்லத்தரசிகள் டி.வி-யையும் பார்த்துட்டே இருக்காங்க. இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இது கண்களோட அழகை மட்டுமில்ல... ஆயுளையும் கெடுத்துடும்'' என்று எச்சரிக்கும் 'க்ரீன் டிரெண்ட்ஸ், சீனியர் டிரெயினர் பத்மா, கண்கள் புத்துணர்ச்சி பெறுவதற்கான பார்லர் சிகிச்சை பற்றி சொல்கிறார்...
''கண்களுக்கான ரிலாக்ஸிங் ட்ரீட்மென்ட் ப்ளஸ் கண் கருவளையத்துக்கான சிகிச்சை என டூ இன் ஒன் பார்லர் சிகிச்சையான 'ஐ ட்ரீட்மென்ட்’ பற்றி இங்கே பார்ப்போம். இதில், முதல்ல கண்களை க்ளென்ஸிங் மூலமா சுத்தப்படுத்தி, ஒரு பேக் போட்டுவிடுவோம். அதை அலசிய பிறகு, மசாஜ் க்ரீம் கொண்டு கண்களுக்கு நல்லா மசாஜ் கொடுப்போம். இது முடிஞ்சதும், ஐ ஜெல் மூலம் மசாஜ் கொடுப்போம். மீண்டும் ஒரு பேக் போட்டு விடுவோம். இந்த ட்ரீட்மென்ட் காரணமா கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோட, கருவளையமும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுடும்'' எனும் பத்மா, கண் அலங்காரத்துக்கு டிப்ஸ் தந்தார்.

ஐபுரோ பாலட்: கண், புருவத்துக்கு என ஐபுரோ பாலட்கள் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கின்றன. இதில் மூன்று நிறங்கள் இருக்கும். இதில் உள்ள பிரஷ் மூலம், இந்த வண்ணங்களை தேவைக்கு ஏற்ப கலந்து, புருவ முடிகளின் மீது மட்டும் தடவலாம். இது புருவத்தை பளிச்சென்று காட்டும்.
ஐலாஷ்: மார்க்கெட்டில் பலவிதமான செயற்கை இமை முடிகள் கிடைக்கின்றன. இதனுடன் கொடுக்கப்படும் பசையின் உதவியால் இதை கண் இமைகளில் ஒட்டிக்கொண்டால், இமை முடிகள் நீண்டு, அடர்ந்து இருப்பது போன்ற அழகிய தோற்றத்தைக் கொடுக்கும். கவனம்... தரமான பிராண்ட் பார்த்து வாங்கவும்.
ஐ ஷேடோ: தரமான ஐ ஷேடோ உபயோகிப்பதால், கண்களில் அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம். ஐ ஷேடோக்களின் துகள்கள், கண்களின் உள்ளே போய், அலர்ஜி மற்றும் கட்டியை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, கண்களுக்கு ஐ ஷேடோ தடவும் முன்பாக, ஐ ப்ரைமர் தடவிவிட்டு அப்ளை செய்தால், கண் இமைகளை அலர்ஜியில் இருந்து காக்கலாம்.
பாரம்பரியம்
''கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்னு பார்க்கலாமா!'' என்று சொல்லும் 'கேர் அண்ட் க்யூர்’ அரோமா கிளினிக் நிர்வாகி கீதா அஷோக், ஒவ்வொரு பாகமாகப் பிரித்துப் பிரித்து விவரித்தார்.
கண், புருவம்: தலையில் பொடுகு இருந்தால், அது உதிரும்போது புருவமுடிகளின் இடையில் சிக்கிக்கொள்ளும். இதேபோல முக பவுடர், தூசு போன்றவையும் புருவங்களில் சிக்கிவிடும். இதைச் சுத்தம் செய்யாதபட்சத்தில், இயற்கையாக அடர்ந்த புருவம் உள்ளவர்களுக்குக்கூட நாளடைவில் முடிகள் உதிர்ந்து, புருவம் மெல்லியதாகிவிடும். இதைத் தவிர்க்க, தினமும் குளிக்கும்போது விரல் நகங்களால் புருவத்தை மென்மையாக சுரண்டிவிட்டு, பின் சோப்பு போட்டு அலசுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ஐபுரோ பென்சிலின் நுனி மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் இரவு, புருவ முடி வளர்ந்துள்ள திசையிலேயே, இந்த பென்சிலைக் கொண்டு அழுத்தமாக வரைந்து, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். ஐபுரோ பென்சிலில் உள்ள லனொலின் மற்றும் விளக்கெண்ணெய் இவை இரண்டும் இணைந்து, மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்கவும், உதிர்ந்த புருவ முடியை திரும்ப வளரவைக்கவும் உதவும்.
குறிப்பு: தினமும் புருவத்துக்கு ஐபுரோ பென்சில் போடும்போது, முடிகளில் மட்டும் இல்லாமல், சருமத்திலும் மை பட்டு, சருமத் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். இதற்கு காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் டிரான்ஸ்பரன்ட் மஸ்காராவை ஐபுரோவின் மேல் போட்டால், முடியைத் தவிர சருமத்தில் பட்டுள்ள மையை நீக்கிவிடும்.

இமை முடி: ஐஸ்க்ரீம் செய்யத் தேவைப்படும் ஜெலட்டினை (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டால், ஜெல் போல் மாறிவிடும். இதில் பத்து கிராம் எடுத்து, இதனுடன் விளக்கெண்ணெய் ஒரு பத்து கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் இந்தக் கலவையை காட்டனில் தொட்டு கண்களில் ஒற்றி எடுத்து, பத்து நிமிடங்கள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதை, தொடர்ந்து செய்தால், இமையில் முடிகள் வளர்வதுடன் கண்களும் பிரகாசமாக ஒளிரும்.
கண் இமைகளின் மேல்தோலில் கருமையும், சுருக்கமும் ஏற்படுவதைத் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐ மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருந்தால், இரவு அதை முழுமையா அலசிவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.
கருவளையம்: கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கறுப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.
கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்...
• சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.
• திக்கான க்ரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து... பிறகு, கழுவிவிடலாம்.
கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.
பளீரிடும்...