விஜய்யும், சிம்ரனும்தான் என்னோட குரு!ரிமோட் ரீட்டா
''முறைப்படி சினிமா டான்ஸே கத்துக்காம, சும்மா ரப்பர் மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு ஆடுறயே, அந்த ரகசியத்தைச் சொல்றது...’னு விஜய் டி.வி-யின் 'ஜோடி நம்பர் ஒன்'' டான்ஸர், ஆனந்தியைக் கேட்டேன்.
''நான் கோயம்புத்தூர் பொண்ணுங்க. அம்மா ரேணுகா, கிளாஸிக்கல் டான்ஸ் டீச்சர். அதனால சின்ன

வயசுல இருந்தே எனக்கு டான்ஸ் தெரியும். ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுக்கறதுல, சமயத்துல எங்கம்மாவுக்கே குருவா மாறிடுவேன். அதனாலதான் இப்ப நான் ஆடுற நிகழ்ச்சிகளில் டான்ஸ் மட்டும் இல்லாம, என்னோட எக்ஸ்பிரஷன்களையும் எல்லாரும் ரசிக்கறாங்க. விஜய் சார், சிம்ரன் மேடத்தோட ஹிட் டான்ஸ் எல்லாத்தையும் டி.வி.டி-யில காப்பி பண்ணி ஆடிட்டே இருக்கறதுதான் என்னோட ஃபுல் டைம் வேலை. அதனால விஜய்யும், சிம்ரனும்தான் என்னோட சினிமா டைப் டான்ஸுக்கு குரு.''
''ஓ... அதான் சிம்ரன் மாதிரி இடுப்ப வெட்டி வெட்டி டான்ஸ் ஆடுறியா..?''
''ஒண்ணு தெரியுமா ரீட்டா... மீடியாவுக்கு வந்ததுக்கு அப்புறம், அவங்க என்னோட டான்ஸ் ஷோவை பார்த்துட்டு, நேர்ல கூப்பிட்டுப் பேசினாங்க. என்னை டான்ஸ் ஆடிக் காட்ட சொல்லிட்டு, 'உன்னோட ஹிப் டான்ஸுக்கு நான் ரசிகை!’னு சொன்னாங்க. சான்ஸே இல்ல... ஆனந்தி அவ்ளோ ஹேப்பி அக்காச்சி!''
''அது சரி, எப்படி மீடியா பக்கம்?''
''சின்ன வயசுல இருந்தே எல்லாரும், 'நீ அழகா இருக்கே... அழகா எக்ஸ்பிரஷன் கொடுக்குறே... பேசாம நடிக்கப் போலாமே!’னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே, நடிக்கிற ஆசை வந்துடுச்சு. விஜய் டி.வி-யோட 'கனா காணும் காலங்கள்’ ஆடிஷன்ல மேடம் ஸ்பாட் செலக்டட் தெரியும்ல! அப்டியே 'மானாட மயிலாட’, 'கார்த்திகை பெண்கள்’, அப்புறம் 'ஜோடி நம்பர் ஒன்’னு ஆனந்தியோட பயணம் போயிட்டே இருக்கு. இப்போ ஆர்யா ஹீரோவா நடிக்கிற 'மீகாமன்’ படத்துல ஒரு 'பப்ளி’ ரோல் பண்ணிட்டிருக்கேன்.''

''சூப்பர்! ஆமா, அநியாயத்துக்கு ஸ்லிம்மா இருக்கியே... ரகசியம் என்ன..?!''
''நோ டயட். இஷ்டம்போல சாக்லேட், ஐஸ்க்ரீம் எல்லாமே வெட்டுவேன். டைம் கிடைச்சா ஜிம் போவேன். மத்தபடி டான்ஸ் டான்ஸ் டான்ஸ்தான்.''
''வெரி குட். வர்ட்டா!''
பிரபல வில்லி பேசறாங்க!
''எம்.பி.ஏ முடிச்சுட்டு வேலைக்குப் போயிட்டிருக்கும் பையனுக்கும், பி.எஸ்ஸி முடிச்சுட்டு வேலை பார்த்துட்டிருக்கும் பொண்ணுக்கும் அம்மானு சொன்னா... நம்பவே முடியலை!''னு கௌதமி மேடத்துக்கிட்ட சொன்னா,
''என்ன ரீட்டா வந்ததும், வராததுமா இவ்ளோ பெரிய ஐஸ் கட்டிய தலையில வெச்சா நான் தாங்குவேனா?!''னு சிரிச்சாங்க.
''அட, நெஜமாதான் சொல்றேன். நீங்க எப்போ ஃபீல்டுக்கு வந்தீங்க..?''
''எனக்கு ப்ளஸ் டூ முடிச்சதும் கல்யாணம் ஆயிடுச்சு ரீட்டா. வி.எஸ்.ராகவன் சார் ட்ரூப்ல என்னோட அப்பா, நடிச்சிட்டு இருந்தாரு. எனக்கு கல்யாணம் ஆகியிருந்த நிலையில. அப்பாவை ஒரு கேரக்டருக்கு நடிக்க கேக்குறதுக்காக வந்தவங்க, என்னைப் பார்த்துட்டு, 'ஒரு தமிழ் புரொபசர் கேரக்டர் இருக்கு... நடிக்கறியா?’னு கேட்டாங்க. 'சரி’னு சொன்னேன். என்னோட முதல் சீரியல் டி.டி-யில வெளியான பொன்விலங்கு''னு சொன்ன கௌதமிகிட்ட,
''சிரிப்புக்கு நடுவுலதான் கொஞ்சம் கொஞ்சம் பேசுறீங்க... ஆனா மேடம் மேக்ஸிமம் வில்லி ரோல்தான் பண்றீங்க போல?''னு கேட்டேன்.

''அட, ஆமா ரீட்டா... எல்லாரும் இதையேதான் கேக்குறாங்க. 'ஆச்சி இன்டர்நேஷனல்’, 'நிம்மதி உங்கள் சாய்ஸ்’, 'மாயாவி மாரீசன்’, 'ஆலயம்’னு நிறைய சீரியல்கள் பண்ணியிருந்தாலும், 'திருமதி செல்வம்’ - 'பாக்கியம்’னாதான் எல்லோருக்கும் பளிச்சுனு என்னைத் தெரியும். அதுதான் வில்லி கேரக்டரோட பவர். இந்த வருஷம் '2BHK’ ஸ்டேஜ் டிராமால சிறந்த நடிகைக்கான அவார்டு வாங்கிஇருக்கேன். இப்போ சன் டி.வி-யில 'பொன்னூஞ்சல்’ போயிட்டிருக்கு. எந்த ரோலா இருந்தாலும் நான் நல்லா செய்வேன் ரீட்டா!''
''சரி, எப்படி இவ்ளோ இளமையா இருக்கீங்க..?!''
''நிஜமா கேட்கிறியா, கலாய்க்கிறியானே தெரியல போ! சரி சொல்றேன்... டெய்லி க்ரீன் டீ, அப்புறம் ஏதாச்சும் பழம், நேரம் கிடைக்கும்போது ஜிம், ரொம்ப புடிச்ச உணவை லிமிட்டாதான் சாப்பிடணும்ங்கிற சுயகட்டுப்பாடு, ஐஸ்க்ரீமுக்கு தடா... இதையெல்லாம் ஃபாலோ பண்றேன். மத்தபடி, எப்பவும் சிரிச்சு சந்தோஷமா இருந்தாலே ஆரோக்கியமா இருக்கலாம்!''
வில்லி சொன்ன லவ்லி டிப்ஸ்!

புது நிகழ்ச்சிகள்
எந்நேரமும் தமிழ் ஒலிக்கும் மக்கள் டி.வி-யில் இப்போது தமிழ் பேசும் இந்தி சீரியல்களும் வந்து கொண்டிருக்கின்றன. மாமியார் - மருமகள் உறவைப் பற்றி மகிழ்ச்சி, துக்கம், நகைச்சுவை, விறுவிறுப்பு இப்படி எல்லாம் கலந்து சொல்லும் 'நீலாம்பரி’ சீரியல் வார நாட் களில் இரவு 8.30 மணிக்கும், மெல்லிய உணர்வுபூர்வமான காதலைச் சொல்லும் 'நீதானே என் பொன் வசந்தம்’ சீரியல் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
தமிழ்நாடு முழுக்க உலா வந்து சில வீடுகளுக்குள் சென்று, பிரபல ஹோட்டலின் செஃப், அந்த குடும்பத்தினருடன் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்து, சமைத்து ருசிப்பது போன்ற ஒரு நிகழ்ச்சி, 'உங்கள் கிச்சன் எங்கள் செஃப்’ எனும் பெயரில் 'புதுயுகம்’ சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 1.30 முதல் 2.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. பன்னாட்டு சமையல் குறிப்புகளையும் சேர்த்தே அளிப்பதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.
வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ரசனையான... ரகளையான!
''சமீபகாலமாக வந்துகொண்டிருக்கும் டி.வி. விளம்பரத்தில்... 'தொட்டுக் கொள்ளவா, உன்னைத் தொட்டுக் கொள்ளவா’ என்ற ரிதமிக்கான வரிகளோடு ரொமான்ஸான கணவன் - மனைவியை காட்டுகிறார்கள். உடனே, 'என்னை எப்படி வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளுங்கள்' என ஊறுகாயைக் காட்டுவார்கள். செம ரசனையான, ரகளையான விளம்பரம்'' என்று ரசித்துச் சொல்கிறார் போரூரில் இருந்து சாய்தர்ஷிணி.
லஞ்சத்தை எதிர்க்கும் 'தெய்வ மகள்’!
''சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தெய்வ மகள்’ தொடரின் நாயகி சத்யா, சமீபத்திய எபிசோட் ஒன்றில், லஞ்சத்துக்கு எதிராக பேசிய வசனங்கள் அத்தனை உயர்வாக இருந்தன. 'சம்பளத்தைவிட அதிகமாக கணவன் பணம் கொண்டுவந்தால், அது எப்படி வந்தது என்று ஒவ்வொரு வீட்டிலும் மனைவி கேட்க வேண்டும். நீ தவறான வழியில் கொண்டு வரும் பணத்தில் ஒரு முழம் பூ கூட வாங்க மாட்டேன் என்று சொல்ல வேண்டும். லஞ்சம் வாங்கினால் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை தரப்படுகிறது. வீடு, வாசல் போன்ற சொத்துக்கள் பெண்கள் பெயரில் லஞ்சப் பணத்தில் வாங்கும்போது அவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும்’ என்று லஞ்சத்துக்கு எதிராக சத்யா போர்க்கொடி தூக்கும் காட்சி அருமை! சீரியல் என்றாலே அழுகைதான் என்கிற பரவலான கருத்தை உடைக்கும்படி இருந்தது'' என்று மனம் திறந்து பாராட்டுகிறார் அரூரில் இருந்து வசந்தி மதிவாணன்.
மெருகு குறையாத தொடர்!
''பொதிகை தொலைக்காட்சியில், 'ஆலயம்’ என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. 30 வருடங்களுக்கு முன்பு, ஒளிபரப்பான தொடர் இப்போது மீண்டும் ஒளிபரப்பாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்பும்கூட... தொடரின், மெருகு குறையவில்லை! இரட்டைக் காப்பியங்களான சிலம்பையும் (சிலப்பதிகாரம்), மேகலையையும் (மணிமேகலை) இணைத்து, அதியற்புதமாக தந்தது அருமை. அழகிய பூக்கள் நிறைந்த நந்தவனத்தில் நிலவொளியில், தென்றலை துணைக்கு அழைத்துக்கொண்டு உலவுவது போன்ற உணர்வைத் தருகின்றது அந்த 25 நிமிடங்கள்...'' என்று சிலாகிக்கிறார் ஆலந்தூரில் இருந்து ஜே.சி.ஜெரினாகாந்த்.