மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

“ஐ ரியலி மிஸ் ஹிம்!”ரிமோட் ரீட்டா

கேபிள் கலாட்டா!

ஓடி விளையாடு மம்மி!

'புது யுகம்’ சேனல்ல அம்மாக்கள், குழந்தைகள் பங்குபெறும் 'ஓடி விளையாடு பாப்பா’, ஸாரி ஸாரி 'ஓடி விளையாடு மம்மி’ நிகழ்ச்சி, ஒவ்வொரு ஞாயிறும் சாயங்காலம் 6 மணிக்கு ஒளிபரப்பாகுது. நிகழ்ச்சியில் கலந்துக்கிறவங்க மட்டுமில்லாம, பார்க்கிறவங்களும் என்ஜாய் செய்யக்கூடிய கலகலப்பான இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளோட கலந்துக்கிறாங்க. பார்த்துட்டு எப்படி இருக்குனு ரீட்டாவுக்கு ஒரு லெட்டர் போடுங்களேன்!

பொண்ணுங்களுக்குப் பிடிச்ச மல்லிகைப்பூவையே நிகழ்ச்சியோட தலைப்பா வெச்சு, அவங்களுக்குப் பயனுள்ள தகவல்களை அள்ளித்தரும் ராஜ் மியூசிக்கின் 'மல்லிகை’ நிகழ்ச்சியை, ஒரு ஆந்திர மல்லெ பூவு, அதாங்க... ஆந்திர மல்லிப்பூ தொகுத்து வழங்குது. பேரு மௌனிகா. பொண்ணை நேர்ல பார்த்து ஒரு நமஸ்காரம் வெச்சேன்.

''நமஸ்காரம் ரீட்டா! மீக்கு தெலுகு தெலுஸா..?''

''அட நீ வேற... ஏதோ உங்கிட்ட பேசறதுக்காக நாலு வார்த்தை கத்துட்டு வந்தேம்மா...''

கேபிள் கலாட்டா!

''அப்படியா! ஐ மிஸ் ஆந்திரா... அதனாலதான் நீ பேசினதும் ரொம்ப ஆர்வமாயிட்டேன். சரி விடு, நீ கஷ்டப்பட வேணாம்... எனக்குத் தமிழ் நல்லாவே தெரியும்''னு சொன்னவங்களுக்கு, ஆந்திரா ஏக்கம் தீர்ந்தபாடில்லை.

''சித்தூர்தான் எனக்கு சொந்த ஊரு. என்ன கஷ்டம்னாலும், சந்தோஷம்னாலும் அங்க இருக்கிற விநாயகர் கோயிலுக்குத்தான் போவேன். எப்போடா அவரைப் பார்போம்னு ஆசையா இருக்கு. ஐ ரியலி மிஸ் ஹிம்! அப்புறம் சித்தூர் பால்கோவா, அப்பப்போ ஞாபகம் வந்துடுது. எல்லாத்துக்கும் மேல எங்க கங்கம்மா சாத்தராவை ரொம்பவே மிஸ் பண்றேன்.''

''அது யாரும்மா..?''

''கன்னத்துல போட்டுக்கோ, அது சாமி பேர் ரீட்டா. இங்க எப்படி ஆடி மாசம் கூழ் ஊத்தி அம்மனை கும்பிடறீங்களோ, அதுமாதிரி எங்க ஊர்ல மே மாசம் கங்கம்மா சாத்தரா நடக்கும். அதாவது கங்கம்மா திருவிழா. அது ஒரு ரோட்டுத் திருவிழா. டான்ஸ், டிரம்ஸ்னு செம ஜாலியா இருக்கும். பத்தாததுக்கு ரோடு முழுக்க வளையல் கடை, சாப்பாட்டுக்கடைனு ஒரே ஜாலிதான்! ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து போய் கடைக்காரர்கிட்ட பேரம் பேசி வாங்குற அனுபவம், சூப்பர்! யாரு குறைச்ச விலைக்கு வாங்கியிருக்கானு ஒரு போட்டியே நடக்கும்.''

கேபிள் கலாட்டா!

''அப்போ சென்னை பிடிக்கலையா..?''

''அப்படியெல்லாம் இல்லை ரீட்டா. இங்க பீச், கங்கோத்ரி லட்டு எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்னைக்கூட!''

இது ஆந்திரா ஐஸ்டா சாமி!

ஹர ஹர சிவ சிவ..!

பிரதோஷ வழிபாடு செய்ற சகோதரிகளுக்கு ஒரு பயனுள்ள தகவல். சங்கரா டி.வி-யில பிரதோஷ நாட்கள்ல பிரதோஷ பூஜையை மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்றாங்க. கோயிலுக்குப் போக சிரமப்படுற பெரியவங்க, வீட்டில் இருந்தே சிவனை சேவிக்க வழி செய்யும் இந்நிகழ்ச்சிக்கு, அவங்க சார்பா நன்றி!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

 150

இந்தியாவில் வறுமையா?

''டிஸ்கவரி தமிழ் சேனலில் இந்திய பாரம்பரிய உணவு வகை பற்றிய டாக்குமென்டரி படம் காட்டினர். இதில் ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியைக் காட்டி 'எங்கு பார்த்தாலும் வறுமை. இதுதான் இந்தியா’ என்று சொன்னது மனதைக் காயப்படுத்தியது. முன்னேறி வரும் தேசத்தின் உணவு வகைகளை விளக்கியவர்கள், முரண்பாடாக வறுமை என்று சொன்னது ஆங்கிலேயரின் அந்த ஆதிக்க புத்தியையே பிரதிபலித்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது'' என்று குமுறுகிறார் சென்னை கே.கே.நகரில்

இருந்து மல்லிகா அன்பழகன்.

'டயட்’ என்பது என்ன?

''சன் டி.வி செய்தியில், சிறப்புச் செய்தியாக... பெண்கள் உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையைக் குறைக்கவும் உடல் அழகைப் பாதுகாக்கவும் பல்வேறு தகவல்கள் டாக்டர்கள் மூலம் கூறப்பட்டன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நம்மில் பலர் டயட்டில் இருக்கிறோம் என்று கூறி சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறோம். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆதாரத்துடன் விளக்கினார்கள். இத்துடன் டயட் என்பது மூன்று வேளையும் சரியான நேரத்தில் அளவாக, சத்தான காய்கறிகள் என ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுவதுதான் என்று விளக்கப்பட்டது. இக்கால இளம்பெண்கள் காலை உணவை பெரும்பாலும் தவிர்ப்பதால் அவர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் சோர்வு ஏற்படுவதையும், எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மிகவும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி'' என்று மனதார பாராட்டுகிறார் சிதம்பரத்தில் இருந்து பி.கவிதா.

சூப்பர் விளம்பரம்!

''அது ஊட்டச்சத்து பான விளம்பரம். நீச்சல் பயிற்சியில் முந்தைய வீரரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் மகன் சொல்கிறான். அதற்கு, அவன் உன்னைவிட பெரியவன் என்கிறார் அப்பா. உடனே மகன், 'வயது என்னவாக இருந்தால் என்ன! மனதில் கொள்ளும் லட்சியம்தான் பெரிது’ என்கிறான். 'சாதனை செய்ய வயது முக்கியமல்ல, வெற்றி அடைய வேண்டும் என்ற உறுதிதான் முக்கியம்’ என்பதை அழுத்தமாக மனதில் பதிக்கும் அந்த விளம்பர வாசகம்... சூப்பர்'' என்கிறார் சென்னை போரூரில் இருந்து கே.ராகவி.