உணவு ஸ்பெஷல்
Published:Updated:

கிணறு வெட்டும் பெண்கள்!

உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது என்பதே தெரியாத தலைமுறைப் பெண்கள்தான் இப்போதிருப்பவர்கள். இப்படியிருக்க, கிணறு வெட்டுவதையே சில பெண்கள் தொழிலாகக்கொண்டிருந்தால்... ஆச்சர்யம்தானே! தேனி மாவட்டம், உப்பார்பட்டியில் கிணறு வெட்டிக்கொண்டிருந்த மஞ்சுளா, சுசீலா மற்றும் சாந்தியிடம் பேசியது, வித்தியாச அனுபவம்!

''அட, இதெல்லாம் சாதாரண விஷயமுங்க!'' என்று துடுக்கென ஆரம்பித்த கிரேன் ஆபரேட்டர் மஞ்சுளா, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கிரேனை நிறுத்திவிட்டு கீழிறங்கி வந்தவர், தோண்டிக் கிடந்த அந்தப் பெரிய கிணற்றை எட்டிப் பார்த்துவிட்டு, நம்மிடம் வந்தார். ''இது எங்கப்பாவோட சொந்தத் தொழிலு. எங்கப்பா காலத்துல எல்லாம் கிணறு வெட்டும்போது, அந்த மண்ணை வெளியேத்த 'கமலக்காலு’னு சொல்லுற மாடுகளைப் பயன்படுத்தினாங்க. இப்போ அந்த வேலையை இந்த கிரேன் ஜோரா செஞ்சுடுது. கிணத்துக்குள்ள ஆளுங்க வெட்டுற மண்ணை எல்லாம், கிரேன் மூலமா வெளிய எடுத்துக் கொட்டணும். முக்கியமான விஷயம்... அந்த மண்ணு மறுபடியும் கிணத்துல சரிஞ்சுடாம கரையில சேர்க்கணும், உள்ள இருக்கிற ஆளுங்களையும் பத்திரமா மேல கொண்டுட்டு வரணும். நம்மள நம்பி நாலு ஜீவன் கிணத்துக்குள்ள நின்னுட்டு இருக்கும்'' என்று அக்கறை ததும்புகிறது மஞ்சுளாவின் பேச்சில்.

கிணறு வெட்டும் பெண்கள்!

''இந்த கிரேனுல இருக்குற லிவரை வெச்சு மேலயும், கீழயும் ரோப்பை நகர்த்தலாம். இந்த வேலைகளை ஆண்கள் செஞ்சுதான் பார்த்திருப்பீங்க. பொழப்புனு வந்துட்டா ஆணென்ன, பொண்ணென்ன? சின்ன வயசுல வறுமையினால என்னைப் படிக்க வைக்கல. பதினோரு வயசு இருக்குறப்பவே நான் ஆபரேட்டரா உக்கார்ந்துட்டேன். ஆரம்பத்துல காய்ச்சுப்போய், வலியெடுத்த கைக்கு இப்போ எல்லாம் பழகிப் போச்சு!'' என்று சிரித்தவர், தங்கள் தொழில் பற்றிச் சொன்னார்.

''இந்த எடத்துல இன்ன அளவுல கிணறு வேணும்னு எங்ககிட்ட விவசாயி சொல்லிடுவாரு. முதல்ல நாங்க அந்த மண்ணு என்ன வகைனு பார்ப்போம். கரும்பாறையா இருந்தாலோ... இல்ல, ரங்கோலிங்கிற சுக்காங்கல் பாறையா இருந்தாலோ சிரமம்தான். கிணறு தோண்டினா கையில ரத்தம் வரும். மத்தபடி சாதாரண தோப்பு மண்ணா இருந்தா பிரச்னையில்ல. அதேமாதிரி கிணறு வெட்டுறப்ப தண்ணி வந்துருச்சுனா, வேலை செய்றது சிரமம். அந்தத் தண்ணியை வெளியேத்திட்டுதான் வேலையைத் தொடர முடியும்'' என்ற மஞ்சுளாவைத் தொடர்ந்தார், அவருடைய தங்கை சுசீலா.

கிணறு வெட்டும் பெண்கள்!

''இந்த வேலையில விவசாயிதான் எங்க முதலாளி. வேலை ஆரம்பிச்சதும் நாங்க தங்கிறதுக்கு மோட்டார் ரூமையோ... இல்ல, அவங்க வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்துல ஒரு எடத்தையோ விவசாயி கொடுப்பாரு. அதுல டென்ட் போட்டு தங்கி, வேலை பார்ப்போம். அவரு பார்த்து இத்தனை அடி ஆழம் போதும்னு சொல்றாரோ, அதோட கிளம்பிடுவோம். ஒரு நாளைக்கு எங்களுக்கு 500 ரூபா சம்பளம். வண்டி, கிரேனுக்கு தனியா ஒரு ஆள் சம்பளம். கிரேன் ஆபரேட் பண்றது, கிணத்துக்குள்ள இறங்கி வெட்டுறதுனு, ஆம்பளையாளுங்களுக்கு சமமா வேலை பார்ப்போம். 15 வருஷமா இந்த வேலை பார்த்துட்டு வர்றேன்!'' என்று சொல்லும் சுசீலாவின் சொந்த ஊர், ஈரோடு.

''ஊர் ஊரா இடம்பெயர்ந்துட்டே இருந்தாதான் எங்களுக்குப் பொழப்பு. அதனால சொந்த ஊருக்கு எப்பயாச்சும்தான் போவோம். என் வீட்டுக்காரரும் எங்கூட மம்பட்டி வேலைக்கு வந்துடுவாரு. எனக்கு மூணு பிள்ளைங்க. அவங்களை என் மாமியார்தான் பார்த்துக்கிறாங்க. மாசா மாசம் பணத்தை அனுப்பிடுவோம். ஆனா, இப்போவெல்லாம் நிறைய பேரு போர் போடுறதால, கிணறு வேலை குறைஞ்சு போச்சு. மாசத்துக்கு ரெண்டு கிணறு கிடைக்கிறதே பெரிசா இருக்கு. இந்த வேலை இல்லாதப்ப வேற வேலைக்கு போவோம். இல்லைன்னா, சொந்த ஊருக்கே போய் தறி ஓட்டுறது, காட்டுவேலை பார்க்கிறதுனு இருப்போம். எங்கள்ல பலருக்கு கல்யாணமே பொழப்புத் தேடிப் போற ஊருலதான் நடக்குது. ஏன், எங்கல்யாணத்தையே எடுத்துக்கோங்க...'' என்று வெட்கப்பட்ட சுசீலா,

''எங்க அம்மா, அப்பா கூட வேலைக்காக தேனி வந்தப்ப, இவரும் (கணவர் தண்டபாணி) அங்க வேலைக்காக வந்திருந்தாரு. ஒரே வேலைனதும் பார்த்துப் பேசி கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. எங்களுக்கு மூணு புள்ளைங்க. மூணு பேருமே வேலை பார்க்கிற ஊருகள்லதான் பொறந்தாங்க. மொத பையன் சின்னமனூர்லயும், ரெண்டாவது பையன் கர்நாடகாவுலயும், மூணாவது பையன் பாண்டிச்சேரியிலயும் பொறந்தாங்க. மூணுமே சொகப்பிரசவம். இப்படி ஊர் ஊராப் போயி, குடும்பத்தோட வேலை பார்த்தும், டீசல் செலவு, சாப்பாடு, துணிமணினு செலவெல்லாம் போக மாசத்துக்கு அஞ்சாயிரம் மிஞ்சுறதே பெரிய விஷயம். விவசாயிகளுக்கு உதவுற தொழில் செய்றோம்ங்கிறதுதான் இதுல எங்களுக்கு இருக்கிற பெரிய சந்தோஷம்''  என்று சொன்னதுடன், ''இதோ எங்க தொழில்ல படிச்ச பொண்ணும் இருக்கு!'' என்று, தன் கணவர் தண்டபாணியின் தங்கையான சாந்தியை அறிமுகப்படுத்தினார் சுசீலா.

''இப்பதான் ப்ளஸ் டூ முடிச்சேன். 920 மார்க் எடுத்தேன். கூலி வேலை பார்க்கற அப்பா, அம்மாவால மேற்கொண்டு படிக்க வைக்க முடியல. இந்த வேலைக்கு வந்துட்டேன். இப்பவே ஆபரேட்டர் வேலை வரைக்கும் கத்துக்கிட்டேன். இந்த வேலையில கவனம் ரொம்ப முக்கியம். நெலத்துக்கு மேல என்ன பிரச்னைனாலும் வரலாம்; ஆனா கிணத்துக்குள்ள இருக்கிறவங்களுக்கு அடிபட்டா, நம்மகிட்ட தொழில் சுத்தமில்லைனு சொல்லிடுவாங்க. 'நல்ல மார்க் வாங்கிட்டு, எதுக்கு இந்த வேலையை பார்க்கிறே?'னு சிலர் கேட்பாங்க. அதைஎல்லாம் நான் கண்டுக்கிறதில்ல. எந்த வேலையா இருந்தாலும் சுத்தமா செய்யணும்ங்கிறதுதான் முக்கியம்!'' என்கிறார் சாந்தி உறுதியுடன்.

சபாஷ் பெண்களே!