உணவு ஸ்பெஷல்
Published:Updated:

‘கைதி கிச்சன்’

ந.கீர்த்தனா, படங்கள்: ப.சரவணகுமார்

வாடிக்கையாளர்களை வெரைட்டியான உணவுகள் மூலம் மட்டுமல்லாமல், வித்தியாசமான உள் கட்டமைப்புகள் மூலமும் கவர்ந்து வருகின்றன, பல ரெஸ்டாரன்ட்டுகள். பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகள் கொண்ட அந்த தீம் ரெஸ்டாரன்ட்டுகள், சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது பெருகிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சென்னை, மயிலாப்பூரில் உள்ள 'கைதி கிச்சன்’.

முழுக்க முழுக்க சிறை போன்ற அமைப்பில் உள்ள இந்த ரெஸ்டாரன்ட்டின் வாசல், வேலூர் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவகத்தில், செல்லுக்குள் அமர்ந்துதான் உண்ண வேண்டும். போலீஸ் உடை அணிந்தவர்தான் ஆர்டர் எடுப்பார். உணவு பரிமாறுபவர், கைதி உடையில் இருப்பார். ஆங்காங்கே கைவிலங்குகள், துப்பாக்கிகள் என்று அசத்தியுள்ளனர்.

ரெஸ்டாரன்ட்டின் நிர்வாகி ஆதித்யா ஹர்லால்காவிடம் பேசினோம்.

''படிப்பு முடிந்தவுடன் அப்பாவின் தொழிலை தொடர்வதில் விருப்பம் இல்லை. உணவுத் துறையில் எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதில் உருவானதுதான் இந்த தீம் ரெஸ்டாரன்ட். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று இந்தியா முழுக்கத் தேடியதில், கொல்கத்தாவில் இந்த 'கைதி கிச்சனை’ப் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது. சென்னைக்கு புதுமையாக இருக்கும் என்று தோன்றியதால், அதன் கிளையை சென்னையில் ஆரம்பித்துவிட்டேன்.

‘கைதி கிச்சன்’

இது முழுக்க சைவ உணவகம். சைவத்தில் இத்தனை வெரைட்டிகளா என்று ஆச்சர்யப்பட வைப்பதுதான் எங்களின் தனித்தன்மை. எங்கள் உணவகத்தில் மெக்ஸிகன், மங்கோலியன், பர்மீஸ், தந்தூரி, சைனீஸ், இத்தாலியன், நார்த் இந்தியன் என அனைத்து வகை உணவுகளும் உண்டு. லிட்டி சொக்கா, பர்மீஸ் கௌசுவே, மங்கோலியன் சூப், க்ரீக் காட்டேஜ் சீஸ் சத்தே, தந்தூரி ஸ்மோக்கி பார்பிக்யு இவைஎல்லாம் எங்களின் ஸ்பெஷல் அயிட்டங்கள். வாடிக்கையாளர்கள் இவற்றை எல்லாம் வாய்விட்டுப் பாராட்டிச் செல்வதுடன், ஜெயில் செல்லில் புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மதியத்தைவிட, இரவு நேரங்களில்தான் களை கட்டுகிறது கூட்டம். தவிர, பார்ட்டிகளுக்கு, பேன்க்வெட் ஹால் மற்றும் கார்ப்பரேட் லன்ச் ஆகியவற்றையும் செய்துகொடுக்கிறோம்'' என்ற ஆதித்யா ஹர்லால்கா நிறைவாக,

''எங்கள் ரெசிப்பி அனைத்தும் கொல்கத்தா, 'கைதி கிச்சனு’டையது. இங்கு வேலை செய்யும் செஃப்கள், உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் நிர்வாகமும் கொல்கத்தா நிர்வாகமும் ஒன்றாக சேர்ந்துதான் வேலை செய்கிறோம். அவர்களுக்குத் தோன்றும் ஐடியாவை எங்களுக்குச் சொல்வார்கள், நாங்களும் பரிமாறிக்கொள்வோம்'' என்றார்.

ஒருமுறை 'கைதி’யாகிப் பார்க்கலாமா!