உணவு ஸ்பெஷல்
Published:Updated:

“வலது காலை எடுத்து வெச்சு வாங்க..!”

மீடியாவுக்கு அழைக்கும் தேவதர்ஷினிசா.வடிவரசு, படம்: கே.ராஜசேகரன்

சீரியல், சினிமா என்று பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை தேவதர்ஷினியிடம், எப்போதுமே குறைந்ததில்லை... உற்சாக ஊற்று.

''அம்மா, அப்பா ரெண்டு பேருமே வேறவேற ஊர்ல இருந்து வந்து சென்னையில செட்டில் ஆனவங்க. பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே சென்னையில்தான். அதனால நான் அக்மார்க் முத்திரை குத்தாத சென்னைப் பொண்ணு!'' என்று கலகலவெனச் சிரித்தவர், கடந்த கால வாழ்க்கைக்குள் புகுந்தார்.

''எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க எல்லாருமே கல்வித் துறையில அதிக ஈடுபாடு கொண்டவங்க. எங்கப்பா, சைதாப்பேட்டையில இருக்கிற கல்வியியல் கல்லூரி முதல்வரா இருந்தவரு. எங்கம்மா, பள்ளித் தலைமை ஆசிரியையா இருந்தவங்க. அக்கா, கல்லூரி பேராசிரியையா இருந்தவங்க. அதனால நானும் ஒரு படிப்ஸாதான் இருந்தேன். எத்திராஜ் காலேஜ்ல பி.காம் படிச்சப்போ ஒரு நாள்கூட லீவ் போடாத சின்ஸியர் மாணவி. என்.சி.சி, என்.எஸ்.எஸ், ஸ்போர்ட்ஸ்ல எல்லாம் சேர்ந்தா கிளாஸ் கட் ஆகிடுமோனு அந்தப் பக்கம் தலை வெச்சும் படுக்கமாட்டேன். இப்போ புரியுதா, நான் எவ்ளோ படிப்பாளினு!'' என்றவர், மீடியாவுக்கு வந்த டர்னிங் பாயின்ட் சொன்னார்.

“வலது காலை எடுத்து வெச்சு வாங்க..!”

''காலேஜ்ல ஃபைனல் இயர் படிச்சப்போ, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துட்டு இருந்தேன். இப்போ போலவே அப்போவும் துறுதுறுதான் என்னோட ப்ளஸ். அதிலும் டியூஷன்ல குழந்தைகள்கிட்ட டபுள் டோஸ் கலகலப்பா இருப்பேன். அதைப் பார்த்த என் அப்பாவோட ஃப்ரெண்ட், 'எப்பவும் ரசிக்கிற மாதிரி பேசுறியே... நீ ஏன் டி.வி-யில ஆங்கரிங் பண்ணக் கூடாது’னு என் வாழ்க்கையோட அந்த முக்கியமான கேள்வியைக் கேட்டு, என்னை அப்ப இருந்த ஜெஜெ டி-வி-யில் சேர்த்துவிட்டார்.

விளையாட்டுத்தனமா ஆரம்பிச்ச அந்த புரொஃபஷன், போகப் போக ரொம்பப் பிடிச்சிருந்தது. தொடர்ந்து சன் டி.வி, பொதிகை டி.வி-னு பயணிச்சிட்டிருந்த எனக்கு, பம்பர் பிரைஸா கிடைச்சுது சன் டி.வி-யில் ஒளிபரப்பான பாலச்சந்தர் சாரோட 'மர்ம தேசம்’ சீரியல். அதிலிருந்து தேவதர்ஷினி தமிழ்நாடு முழுக்க பாப்புலர். நான் நடிகையானதைக் கேள்விப்பட்ட என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'எப்பப் பார்த்தாலும் படிப்பு படிப்புனு இருப்பியே... நீ எப்படி மீடியாவுல!’னு ஷாக் ஆயிட்டாங்க. எனக்கு வந்த வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டதால சீரியல்ல மட்டுமில்லாம, சினிமா வரை கிராஃப் போட்டாச்சு. எனக்குப் பின்ன வந்த எத்தனையோ பெண்கள் இந்த மீடியா கடல்ல காணாமல் போயிட்டாலும், 17 வருஷமா நிலைச்சிருக்க முடியுதுனா, இந்த புரொஃபஷன் மேல எனக்கிருக்கிற அர்ப்பணிப்புதான் காரணம்'' என்ற தேவதர்ஷினி,

''எனக்கு சைக்காலஜி படிக்கணும்னு ஆசை. சீரியல், சினிமானு பரபரப்பா இருந்தாலும், பகுதி நேரப் படிப்பா போன வருஷம் அதையும் முடிச்சுட்டேன். இதுல எம்.ஃபில்., பிஹெச்.டி படிக்கணும். நிச்சயம் படிப்பேன்'' என்றதோடு... மீடியாவுக்கு பெண்களை வரவேற்கவும் செய்கிறார் இந்த சீனியர்.

''இப்போ எல்லா துறைகளைப் போல மீடியா துறையும் வெளிப்படையானதா, திறமைக்கு மதிப்பளிக்கக் கூடியதா, சமூகத்தில் மரியாதை பெற்றுத் தரக்கூடியதா இருக்கு. அதனால, 'அவங்க சொல்றாங்க, இவங்க என்ன சொல்வாங்க’ என்ற தயக்கத்தை எல்லாம் விட்டுட்டு, உங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரும் களமா நினைச்சு வலதுகாலை எடுத்து வைங்க. நீண்ட, நிறைவான பயணத்துக்கு வாழ்த்துகள்!'' என்று புன்னகைத்தார் தேவதர்ஷினி.