கவிஞர் பொன்மணி, ஓவியம் : ஸ்யாம்
எந்தச் செயலைத் தொடங்குவதாக இருந்தாலும், பூஜைஅறையில் ஸ்வாமிக்குக் கடிதம் எழுதிவிட்டு, அவர் பாதங்களில் வைத்துப் பிரார்த்தனை செய்து, அனுமதியும் ஆசீர்வாதமும் கேட்பது என் வழக்கமானது. இப்போது வெளியிட நினைத்த இரண்டாம் கவிதைத் தொகுதிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து, நிறைய தலைப்புகளை எழுதி ஸ்வாமி முன் வைத்தேன். கவிதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒரு கவிதையின் தலைப்பு... 'மீண்டும் சரஸ்வதி’. இதுவே திரும்பத் திரும்ப என் நினைவில் மின்னலடித்தது. ஸ்வாமியிடம் கேட்டேன்... இந்தத் தலைப்பை ஸ்வாமி தேர்ந்தெடுத்தது உண்மையானால் நல்லதொரு அடையாளம் காட்ட வேண்டும் என்று. புத்தகவேலை தொடங்கிவிட்டதால், கவிதைகளை முறையாக வரிசைப்படுத்தி வைக்கத் தொடங்கினேன்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, வீட்டின் அலுவலகப் பணியாளர் வந்து என்னிடம், 'அம்மா... ஒரு பெண் இரண்டு நாட்களாக உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்து போகிறது. அந்த நேரம் நீங்கள் வீட்டில் இல்லை. இப்போதும் அந்தப் பெண் வந்திருக்கிறது. கையில் பெரிய பை இருக்கிறது. உள்ளே அனுப்பலாமா?’ என்று கேட்டார். அனுப்பச் சொன்னேன்.

அவள் வந்தாள். மாநிறம் கொண்ட இளம்பெண். சிரித்த முகத்தோடு உள்ளே வந்து அமர்ந்தாள். எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவளும் இதற்கு முன் யாரோடோ இரண்டு வருடங்களுக்கு முன் இங்கே வந்து போனதாகச் சொன்னாள். அவள் பொம்மை செய்து, வீடுகளுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்பவள். 'என்ன வேணும் சொல்லம்மா’ என்று நான் கேட்க, 'ஒரு பொம்மையை கொண்டு வந்திருக்கேன்... அதை உங்ககிட்டதான் குடுக்கணும்னு தோணுச்சு... கட்டாயம் நீங்க வாங்கிக்கணும்’ என்று சின்னதொரு பொம்மையை எடுத்து என் கையில் தந்தாள். பார்த்தேன்... ஆனந்த அதிர்ச்சி! இரண்டு வருடங்களுக்கு முன் எப்போதோ வந்தவள், இப்போது திடீரென்று வந்து எப்படியாவது என்னிடம் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவலோடு தந்த பொம்மை என்ன என்கிறீர்கள்..? சரஸ்வதி! முகமெல்லாம் சிரிப்பாக மணிமாலையோடு, மாணிக்க வீணையோடு வந்த சரஸ்வதி!
வந்தவள் பொம்மை செய்பவளா? ஸ்வாமி அனுப்பிய தேவதையா? ஸ்வாமியா? 'மீண்டும் சரஸ்வதி’ என்ற தலைப்பு சரியானதே என்று அங்கீகரித்தால் நல்லதொரு அடையாளம் காட்டச்சொல்லி நான் கேட்டதற்கு, ஸ்வாமி நிகழ்த்திய அதிசயமே அது! மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது எனக்கு.
எனக்கு மட்டும் தெரியும்படியாக, ஸ்வாமி சத்ய சாயிபாபாவிற்குப் புத்தகத்தைக் காணிக்கையாக்கியிருந்தேன். மற்றவர்கள் ஏதேனும் சொல்லக்கூடும் என்ற எண்ணத்தில் மறைமுகமாக அர்ப்பணம் செய்திருந்தேன்.
'எப்போதும் என்னை வழிநடத்தி வரும் என் தெய்வத்தின் பொற்பாத கமலங்களுக்கு...’ என்று ஸ்வாமிக்குக் காணிக்கையாக்கி இருந்தேன். முன்னுரைக்குக் கீழே ஸ்வாமி பிறந்த நாளான நவம்பர் 23-ம் தேதியை எழுதி கையொப்பமிட்டிருந்தேன். ஸ்வாமியின் அனுக்கிரஹம் நிறைந்த ஒரு சாயி குடும்பத்திற்குச் சென்று, அங்கு வழிபாட்டறையில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியபின் அச்சுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி கவிதை அடங்கிய பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். வெகுசமீபமாக மணியோசை கேட்கவே திரும்பிப் பார்த்தேன். வீட்டிற்கு வெளியே வலது பக்கமாக வளர்ந்து நிற்கும் வேப்பமரத்திற்குச் சற்று தூரத்தில் மணியோசை எழுப்பியபடி கோயில் யானையொன்று வந்துகொண்டிருந்தது. அது மிக நல்ல சகுனமாக இருந்தது. முக்கியமான வேலையாய் வெளியே வந்ததும் யானையைப் பார்த்தது மகிழ்ச்சியாய் இருந்தது.
'பிள்ளையாரப்பா புத்தகம் நல்லபடியாய் வரட்டும்’ என்று நினைத்தபடி துதிக்கையில் காணிக்கை வைத்தேன். அந்த அழகிய கம்பீரமான யானை, துதிக்கையை நீட்டி என் தலை தொட்டு ஆசீர்வதித்தது. வீதியின் இடதுபக்கத்திலிருந்து என் அன்புத்தோழி வந்துகொண்டிருந்தார்; சந்தோஷமாயிருந்தது. அவரிடம் சொல்லிவிட்டு, சாயி குடும்பத்திற்குச் சென்றேன்.

எப்போதும் விபூதியும் அமிர்தமும் அட்சதையும் விழுந்துகொண்டிருக்கும் வீடு அது. ஸ்வாமியின் பிரத்யட்சம் அங்கு அதிகம். அவர்களிடம் பேசிவிட்டு பூஜையறையில் ஸ்வாமிக்குப் பூப்போட்டு அலங்கரித்து இனிப்பு வைத்து, கவிதைகளடங்கிய பையை ஸ்வாமி பாதங்களில் வைத்து வழிபட்டு வேண்டினேன். எண்பது வயதிற்கு மேலான முதிய பக்தையான அந்த வீட்டுப் பெண்மணி என்னுடன் அமர்ந்து நான் பாடுவதையும் வேண்டுவதையும் கவனித்துக்கொண்டிருந்தவர்... திடீரென்று பரவசத்தோடு, 'சாயிராம்’ என்று சத்தம் போட்டபடி கீழே விழுந்து கும்பிடத் தொடங்கினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'சாயீஸ்வரா... நாராயணா... சாயிராமா என்ன காட்சியடா அப்பா’ என்று மேலே பார்த்தபடி படபடவென்று கைகளை கன்னத்தில் போட்டபடி உரக்கப் பேசிக்கொண்டிருந்தார்.
பொறுக்கமுடியவில்லை எனக்கு. 'என்னம்மா... என்ன நடந்துக்கிட்டிருக்கு?’ என்று கேட்டேன்.
அவர் பதைத்தபடி பேசினார். 'பார் பார்... உன் எதிர்ல ஸ்வாமி வெள்ளை டிரெஸ்ல சிவப்பு ரோஜாமாலை போட்டுக்கிட்டு நிக்கறார்... உன்னை ஆசீர்வாதம், செய்யறார். நீ பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சதுமே வந்துட்டார். உனக்குத் தெரியலையா?’ என்று பரபரத்தார்.
பயத்தோடும் தவிப்போடும் எதிரே பார்த்தேன். என் கண்களுக்கு ஸ்வாமி தெரியவில்லை. புதிய நறுமணமொன்று காற்றில் பரவிக்கொண்டிருந்தது. ஸ்வாமி எங்கே இருக்கிறார் என்று புலப்படவில்லை. 'எங்கே நிற்கிறாரம்மா?’ என்று கேட்க, 'உனக்கு முன்னோடியேதான் நிக்கறார்... ஆசீர்வாதம் பண்றார்... நமஸ்காரம் பண்ணிகோம்மா’ என்று சொல்ல... பயம் கலந்த சந்தோஷத்தோடு முன்னே விழுந்து வணங்கினேன். சற்று நேரத்தில் ஸ்வாமி மறைந்துவிட்டதாகச் சொன்ன அந்த முதிய பக்தையின் கண்களில் நீர் ததும்பிக்கொண்டிருந்தது.
மின்சாரம் பாய்ந்தது போன்ற தெய்விக அதிர்வுகளை அனுபவித்தது மனம். ஸ்வாமியின் நேரடியான அருளாசியல்லவா அது! ஸ்வாமி படத்திலிருந்தும் ஒரு வண்ணரோஜா விழுந்தது. புத்தகத்திற்கான தெய்விக ஆசீர்வாதத்தை வாங்கிய மகிழ்ச்சியோடு பூவையும் கவிதைகளையும் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
அழைப்பிதழ்கள் தயாரானதுமே, முதல் அழைப்பிதழை ஸ்வாமிக்கு புட்டபர்த்திக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பினேன். வீட்டுப் பூஜையறையிலும் சில சாயி பக்தர்கள் வீட்டுப் பூஜையறையிலுமாக முதல் சில அழைப்பிதழ்களை வைத்தேன். ஸ்வாமி சங்கல்பத்தோடு நடக்கும் இந்த விழாவிற்கு ஸ்வாமி வந்திருந்து எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்திக்கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். எந்த விழாவாக வைபவமாக இருந்தாலும், அன்போடு பக்தர்கள் அழைத்தால்... ஸ்வாமி ஏதேனும் ஒருவிதத்தில் கட்டாயம் வருவார்... தன் வருகையை உணர்த்துவார். அப்படித்தான் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஸ்வாமி வந்தார்..!
ஜெய் சாயிராம்!
தொடரும்