உணவு ஸ்பெஷல்
Published:Updated:

ஏரோபிளேன் ஏஞ்சல்கள்! - அவள் 16

ஏரோபிளேன் ஏஞ்சல்கள்! - அவள் 16

'நேவிகேஷன், ரேடியோ கன்ட்ரோல், ஆல்டிடியுட், லேண்டிங்...' - இப்படி செம சீரியஸ் டிஸ்கஷனில் சுறுசுறுப்பாக இருந்தனர், எதிர்கால விமானிகளான புதுச்சேரி 'ஓரியன்ட் ஃபிளைட் ஸ்கூல்’ மாணவிகள் ஜ்யோத்சனா பாரதி, த்ரிஷ்லா மற்றும் மீரா உதயன்!

''ஊருல எவ்வளவோ படிப்பிருக்கு. ஆனா, 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்!’னு அழுது, அடம்பிடிச்சு, ஆர்ப்பாட்டம் பண்ணி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கேன். ஃபிளைட், பைலட்... இந்த ரெண்டுமே என்னோட சின்ன வயசுக் கனவு. அதனால, ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் இங்கே சேர்ந்துட்டேன். இப்போ டிகிரி ப்ளஸ் சி.பி.எல் (கமர்ஷியல் பைலட் லைசென்ஸ்) ரெண்டும் படிச்சுட்டு இருக்கேன், ஜாலியா பறந்திட்டிருக்கு வாழ்க்கை!'' என்று சிரிக்கும் த்ரிஷ்லா, (மகாவீரரின் அம்மாவின் பெயராம்) ராஜஸ்தானில் பிறந்தவர். வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ்நாடு என்பதால், கொஞ்சு தமிழில் விளையாடுகிறார்.  

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜ்யோத்சனா பாரதி, ''பைலட்னாலே தனி கெத்து, நல்ல சம்பளம், சொகுசு வாழ்க்கை. இதையெல்லாம் யோசிச்சுதான் இந்த ஏவியேஷன் துறையைத் தேர்ந்தெடுத்தேன்! கல்வியறிவுல பின்தங்கிய மாநிலம்ங்கிறதால, குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கக்கூடியது ஜார்கண்ட். ஆனா, அப்பா - அம்மா புண்ணியத்துல தப்பிச்சு இங்க வந்துட்டேன். படிச்சு முடிச்சு பைலட் ஆகி, ஊருக்குப் பெருமைத் தேடித் தர்றதோட... பெண் கல்வி குறித்து விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தணும்'' என்று பெருமூச்சு விடுகிறார்!

ஏரோபிளேன் ஏஞ்சல்கள்! - அவள் 16

இவர்களிருவருக்கும் சீனியரான மீரா உதயன், கேரள வரவு. இன்னும் சில மாதங்களில், கைகளில் பைலட் லைசென்ஸ் தவழப் போவதால் உற்சாகமாக, அதேசமயம் அடக்கமாகவும் இருக்கிறார். ''சவாலான பணியில இருக்கோம்ங்கிறதே பெரிய உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம்தானே! ஆரம்பத்துல இதைப் பற்றி வீட்டுல சொன்னப்போ, எதிர்ப்பு கடுமையா இருந்துச்சு. காரணம், எங்க பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தப்ப விபத்துல சிக்கிட்டாங்க. அதனாலயே வீட்டுல பயந்தாங்க. 'பொம்பளப் புள்ளைக்கு எதுக்கு இதெல்லாம்?’, 'இவ்வளவு பணம் செலவழிச்சுப் படிக்க வைக்கணுமா?’னு பல கேள்விகளை நிறைய பேர் கேட்டாங்க. ஆனா, அப்பா, அம்மாகிட்ட பேசி ஒருவழியா சமாதானம் செஞ்சு இங்க வந்தாச்சு. மூணு மாசத்துல லைசென்ஸ் வந்துடும்!'' என்று சொல்லும் மீரா,

''டிரெயினிங் முடிச்சு விமானத்தில் தனி ஆளா பறந்த நிமிஷங்கள், வாவ்! காக்பிட்ல என்னைத் தவிர வேறு யாருமில்ல. 300 மணி நேரம் பறந்து முடிச்சாச்சு. அதில் அதிக ட்ரிப்ஸ் கேரளாவுக்குதான். 2 மணி நேரத்துல இங்கிருந்து கேரளாவுக்குப் போயிடலாம். ஒருமுறை அப்படிப் பறக்கும்போது எதிர்பாராதவிதமா விமானத்துல கழுகு மோதி இறந்துடுச்சு. அதிலிருந்து பைலட்டுக்கான பொறுப்புகளைக் கூடுதலா உணர ஆரம்பிச்சுருக்கேன். இதுபோன்ற பதற்றமான சூழல்ல பொறுமையோட நிதானமா செயல்படணும்'' என்றார்.

உச்சு கொட்டிய த்ரிஷ்லா, ''இப்படித்தான் ஒருமுறை யு.எஸ் ஏர்வேஸ் ஃபிளைட் பறக்கும்போது எதிரே வந்த பறவைகள் மேல மோதி, இன்ஜின்கள் வேலை செய்யாமப் போயிடுச்சு. விமானி செஸ்லே சுல்லேன்பெர்கர், பதற்றப்படாம, ஹட்சன் ஆத்துல விமானத்தை தரையிறக்கி, 155 உயிர்களைக் காப்பாத்தி சாதனை படைச்சார்!'' என ஆச்சர்யம் விலகாமல் கூற,

''கடவுளே... எனக்கு அப்படியெல்லாம் எந்தச் சூழலும் கொடுத்துடாதே!'' என வேண்டிக் கொள்கிறார் பாரதி. நிறைவாக, தங்களின் எதிர்கால கனவுகளைப் பேசினர் இந்த எதிர்கால விமானிகள்.

ஏரோபிளேன் ஏஞ்சல்கள்! - அவள் 16

''ஜெட் ஏர்வேஸ்தான் என்னோட லட்சியம். அங்க வேலையில சேர்ந்துட்டா... வாழ்க்கை செட்டில்டு! கிடைக்கணுமே..!'' என ஏங்குறார் ஜ்யோத்சனா பாரதி.

''சேர்ந்தால் எமிரேட்ஸில்தான் சேருவேன்!'' என அழுத்தம் கொடுக்கும் த்ரிஷ்லா, ''மாச சம்பளம் 14 லட்சம். இன்னும் நிறைய அலவன்ஸ்லாம் இருக்கு. என்னுடைய முதல் மாச சம்பளத்தை வீட்டில் கொடுத்துட்டு, அப்படியே ரிட்டர்ன் வாங்கிடுவேன். ட்ரீட் வைக்க வேண்டாமா!'' என்று குதூகலிக்கிறார்.

மீராவுக்கு மேற்கொண்டு படிக்கத் திட்டமாம். ''இப்போதைக்கு கிடைக்கிற லைசென்ஸை வெச்சு சிங்கிள் என்ஜின் மட்டுமே ஓட்ட முடியும். இது போதாது. எம்.இ.ஆர்-னு அடுத்தகட்ட படிப்பு இருக்கு. அதுக்கு 15 லட்சம் செலவாகும். அதை முடிச்சாதான் பெரிய விமானங்கள் ஓட்ட முடியும். போயிங், ஏர்பஸ் அது மாதிரியான விமானங்கள் ஓட்ட அந்த லைசென்ஸ் தேவை'' என்கிறார் மீரா உதயன்.

படிங்க... பறங்க!

- நா.இள.அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்