சமையல் படிப்பு... செமையான வாய்ப்பு!
ஒரு நாள் டின்னருக்கு, இரண்டு வெரைட்டி டிஷ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது நமக்கு. தினமும் வெரைட்டி வெரைட்டியாக சமைப்பதையே தொழிலாகக்கொண்டிருக்கும் 'செஃப்’களுக்கு எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருக்கும்? ஒரு ரிலாக்ஸுக்காக, சென்னை, எஸ்.ஆர்.எம். கேட்டரிங் கல்லூரியில் 'ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ படிக்கும் மாணவர்களையும், 'சமையல் சக்கரவர்த்தி’ தாமுவையும் சந்திக்க வைத்தோம்.
''உலகுக்கு ருசியான உணவைக் கொடுக்கும் சமையல் துறையைத் தேர்ந்தெடுத்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 'நான் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கப் போறேன்’னு வீட்டுல சொன்னப்ப, யாருமே ஏத்துக்கல. நானும் என்னோட முடிவுல இருந்து கொஞ்சம் கூட பின்வாங்கல. கடைசியா, நான்தான் ஜெயிச் சேன். அப்போ நான், அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆரம்பத்துல ஆங்கிலம் தெரியாம தவிச்சதுல இருந்து, இன்னிக்கு வரைக்கும் எத்தனை தடங்கல், எத்தனை கஷ்டம்! அதையெல்லாம் பொருட்படுத்தாம அதே ஆர்வத்தோட உழைக்கிறேன். இதேபோல நீங்களும் உழைச்சா கண்டிப்பா என்னைவிட பெரிய ஆளா வருவீங்க'' என்று வாழ்த்திய செஃப் தாமுவை நோக்கி கேள்விகளை வீசினர் மாணவர்கள்.

''இந்த துறையில முக்கியமா கத்துக்க வேண்டியது... கத்துக்கக் கூடாதது?''
''படிக்கும்போதும், படிப்பு முடிச்சு வேலைக்குப் போன பிறகும் புதுசு புதுசா கத்துக்கிட்டே இருக்கணும். அப்போதான், உங்களோட திறமையும், ஆர்வமும் கூடிக்கிட்டே போகும். 'இது போதும்’னு எப்பவுமே ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. அப்படி வந்துட்டா... அதுக்கு மேல, உங்களால போகவே முடியாது. காலேஜ் படிக்கிறப்போ, 'கண்டிப்பா நம்மால ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியும்’னு தோணுச்சு. வேலைக்குப் போனதும் 'நல்ல செஃப்’னு பேரு வாங்கணும்னு நினைச்சேன். அப்புறம் ஆசிரியர், கல்லூரி முதல்வர் ஆகியாச்சு. இன்னமும் அடுத்த நிலைக்கு போகணும்னு நினைக்கிறேன். கண்டிப்பா போவேன். ஏன்னா, அதுக்கான முயற்சி என்கிட்ட எப்பவுமே இருக்கு. தொடர்ந்து 24 மணி நேரம், 30 நிமிடம், 15 நொடிகள் சமைச்சு உலக சாதனை செய்திருக்கேன். இப்படி உங்களாலகூட இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும்.''
''சமையலுக்கு படிப்பானு எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்களே?'’
''இந்தத் துறையைப் பத்தி தெரியாதவங்கதான் அப்படி பாப்பாங்க. இன்னிக்கு இந்தத் துறைக்கு இருக்குற வேலைவாய்ப்பு வேற எந்தத் துறைக்குமே இல்லை. வருஷத்துக்கு பல லட்சம் மாணவர்கள் பொறியியல் முடிக்கிறாங்க. எல்லாருக்கும் படிச்ச படிப்புக்கான வேலை கிடைக்கிறதில்ல. ஆனா, கேட்டரிங் துறை படிப்புக்கு, கப்பல் தொடங்கி ஏரோபிளேன் வரைக்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு.''
''இந்திய பாரம்பரிய உணவை யாரும் மதிக்கிறதில்லையே?'’
''யார் சொன்னது.? இன்னிக்கு இந்திய வகை உணவுக்கு உலக அளவுல பெரிய வரவேற்பு இருக்கு. வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடுற உணவா, இந்திய உணவு வகைகள் மாறிடுச்சு. இங்க இருக்கறவங்கதான் அதை மதிக்கிறதில்ல. எல்லாரும் பீட்ஸா, பர்கர்னு வெளிநாட்டு உணவுகளை சாப்பிடுறதை கௌரவமா நினைக்கிறாங்க. எத்தனை நாளைக்கு அவங்களால அதை சாப்பிட முடியும். மீண்டும் அம்மா சுடுற இட்லி, தோசை பக்கம்தானே வந்தாகணும்.
நம்ம ஊருல மண்பானையில சமைக்கிறது ஒண்ணே போதும்... நம்ம பாரம்பரிய சமையல் பெருமையைப் பேசறதுக்கு. இதுல நன்மை மட்டும்தான் இருக்குது. தீமைகளே இல்லை. உதாரணமா இதுல சமைக்கற உணவோட அளவுக்கு சுவை, தரம் மத்த எதுலயுமே வராது. முக்கியமான இன்னொரு விஷயம்... ஒரு மண் பானையைப் புதுசா வாங்கின உடனே அதுல சமைக்கக் கூடாது. நாலு நாளைக்கு அதை அரிசி கழுவின தண்ணியில ஊறவெச்சு, பிறகுதான் சமைக்கணும்'' என்ற தாமு,
''பொதுவா சமைக்கும்போது, நாம சமைக்கிறதை எல்லாரும் நல்லா சாப்பிடணும்னு நெனச்சு சமைக்கணும். கூடவே அதுல அன்பு, பாசம் எல்லாத்தையும் சேர்க்கணும். இதை மட்டும் ஒவ்வொரு முறையும் பின்பற்றிப் பாருங்க. கண்டிப்பா இந்த துறையில நல்ல ஒரு நிலைமைக்கு வருவீங்க'' என்று சொன்னார்.
தாமுவை கிச்சனுக்கு அழைத்துச் சென்று, தங்கள் கல்லூரியின் ஃபேவரைட் டிஷ்ஷான 'செட்டீஸ் கேரட் அண்டு சீஸ் கேக்’கை சமைத்துக் கொடுத்தனர் மாணவர்கள். ஆசையோடு சாப்பிட்டவர், 'கொஞ்சம் உப்பு கம்மியா இருக்கு... இருந்தாலும் சூப்பர்!’ என்று சொல்ல... மாணவர்களின் முகம் 'பூரி’ப்பானது.
- சா.வடிவரசு
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்