உணவு ஸ்பெஷல்
Published:Updated:

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

ரிவர்ஸ் கியர் போடும் பிரபல செஃப்சா.வடிவரசு

''நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மறந்து, ஜங் ஃபுட்டுக்கும், ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் மாறிவிட்டோம் என்கிற புலம்பல் இப்போது அதிகமாகக் கேட்கிறது. ஆனால், பாரம்பரிய உணவுப் பழக்கம் என்ன என்பதை, அப்படிப் புலம்புபவர்களே முழுதாக அறிந்திருப்பதில்லை. புராண காலம், வரலாற்றுக் காலம், மன்னர் காலம் தொடங்கி தற்காலம் வரை, நம் மூதாதையர்கள் வகுத்துவைத்த உணவுப் பழக்கம் படிப்படியாக அடைந்து வந்துள்ள மாற்றங்களையும், இழந்து வந்துள்ள சிறப்புகளையும் பேசவேண்டியது அவசியம்!''

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

- ஆதங்கத்துடன் சொல்கிறார் உலகளவில் புகழ்பெற்றவரான தமிழகத்தைச் சேர்ந்த செஃப் சுல்தான் மொகைதீன்.

சமீபத்தில், மின்னல் வேக பயணமாக சென்னைக்கு வந்திருந்தபோது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மனம் விட்டு நீளமாகப் பேசியவரிடம் இருந்து வந்துவிழுந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமருந்தேதான்!

''உணவு, வெறும் உயிர்வாழத் தேவைப்படும் பொருளாக மட்டுமல்லாமல், ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய அருமருந்தாகவும் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய உணவு வகைகளோ, அப்படியே தலைகீழாக மாறி, நம்மை தனியாக மருந்துகளையும் சாப்பிட வைக்கின்றன. ஆரம்ப (புராண) காலங்களில் காட்டில் கிடைக்கும் பழங்கள், காய்கள், கிழங்குகள் போன்றவற்றை அப்படியே சாப்பிட்டார்கள். ராமாயணத்தில், ராமன் தன் மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் காட்டிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்தபோது, இயற்கை உணவு களை, இயற்கையான முறையில் சமைத்துச் சாப்பிட்டார்கள் என்பதற்கான குறிப்புகள் நம்மிடம் இருக்கின்றன. இதனால்தான் அக்கால மக்கள் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

வரலாற்றுக் காலத்தில் உணவு முறைகளில் பல மாற்றங்கள் உருவாகின. விதவிதமான உணவு வகைகள் உருவாகின. இருந்தாலும் இக்காலத்திலும் இயற்கை முறையிலான உணவுப் பழக்கங்களும் தொடர்ந்தன. உதாரணமாக, சேர மன்னன் ஆண்ட நாட்டில், இயற்கையானது செழுமையோடு சிரித்துக்கொண்டி ருந்தது. அங்கே வானளவு உயர்ந்த தென்னை மரங்கள் அதிகளவில் இருந்தன. அதிலிருந்து விழுகிற தேங்காயானது, கீழே உள்ள பலா மரத்தின் பழத்தின் மீது பட்டு, பழம் தெறிக்கும். பலா மரத்தின் கீழே உள்ள வாழை இலைகளில் பலாச் சுளைகள் வந்து விழ, வாழை இலை கிழியும்... இப்படிப்பட்ட இயற்கை எழில் பொங்கிய பூமி அது என்கின்றன சங்கப் பாடல்கள். அதனால் மக்களும் இயற்கை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை விரும்பி உண்டு ஆரோக்கியத்தோடு வாழ்ந்தனர். ஆனால், இன்றைக்கு அப்படியே ஆரோக்கியமாக வாழ்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

அந்நிய மன்னர்களின் படையெடுப்பால், நம் உணவு முறைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. எங்கெங்கோ இருந்து படையெடுத்து வந்த மன்னர்கள், நம் பாரம்பரிய உணவில் மாற்றங்களை உருவாக்கியதோடு, அவர்களின் உணவு முறைகளைப் பரப்பிவிட்டு, நம் உணவுகளைத் திருடிச் சென்று, தங்கள் நாட்டில் சில மாற்றங்களோடு புதிய வகை உணவுகளாக அறிமுகப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் இதை மக்கள் ஏற்கவில்லை. என்றாலும், ஒரு கட்டத்தில் பாரம்பரிய உணவுகளையே ஒதுக்கும் சூழல் உருவாகிவிட்டது.

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

தொடர்ந்து, உப்பு சேர்த்து, காரம் சேர்த்து என்று ஆரம்பித்தது, இன்று கலரிங் ஏஜென்ட்டுகள், பிரிசர்வேட்டிவ் என கண்ட கண்ட பொருட்களின் ஆதிக்க சமையல்தான் நம் இல்லங்களில் நிகழ்கிறது. இதைவிடக் கொடுமையாக, பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் என ஜங் ஃபுட்களின் வரவால், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொண்டிருக்கிறோம். அதேசமயம், வடஇந்திய உணவு முறைகள், பழமையோடு இணைந்தே பயணிக்கின்றன. சொல்லப்போனால், அவர்களின் பண்டைய உணவு முறைகளில் பல, நம் பாரம்பரிய உணவில் இருந்து உருவாக்கப்பட்டவைதான்'' என்று சொல்லி, நம் முன்னோர் வகுத்த உணவு முறைகளின் சிறப்பை, அவர்கள் வகுத்து வைத்த சில பழக்கங்களின் மூலம் புரியவைத்தார் சுல்தான் மொகைதீன்.

''அந்தக் கால உணவு முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை என அனைத்தும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே வகுக்கப்பட்டன. உதாரணமாக, தலை வாழை இலை சாப்பாடு. வாழை இலையின் பச்சை நிறப் பசுமை, சாப்பிட அமர்பவர்களின் பசியைத் தூண்டும் தன்மையுடையது என்பதே, நம் முன்னோர் வாழை இலையில் பசியாறக் காரணம்.

அக்கால உணவு முறையில் சேவலை (ஆண்) மட்டுமே உணவாக்கினார்கள். காரணம், அதில் உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்கள் சரியான அளவில் இருப்பதோடு, கோழிகளை (பெண்) சாப்பிடுவதால் அவ்வினம் அழியக்கூடாது என்ற அக்கறை'' என்று ஆச்சர்ய தகவல்களைக் கொட்டிய சுல்தான்,

''உலகம் முழுக்கச் சென்று சமைக்கும் என் அனுபவத்தில், நம் நாட்டில்தான் நம் பாரம்பரிய உணவுக்கு மரியாதை இல்லை. வெளி நாடுகளில் நம் உணவுகளைக் கொண்டாடு கிறார்கள். ருசியை மட்டுமல்ல, ஆரோக் கியத்தையும் சேர்த்து தரும் நம் பழைமை உணவுகளை நோக்கி மாற்றுங்கள் உங்கள் சமையலறையை!'' என்று அக்கறையோடு சொன்னார்.

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

ஸ்பூன் சாப்பாட்டைத் தவிருங்கள்!

ஸ்பூனில் சாப்பிடுவது வெளிநாட்டு பழக்கம். கையால் சாப்பிடும்போது, உணவைத் தொட்டதும், மூளைக்கு தகவல் சென்று, அந்த உணவுக்கு ஏற்றாற்போல் உடலை மூளை தயார் செய்யும். இதனால் உணவானது எவ்வித சிக்கலும் இல்லாமல் சரிவர ஜீரணமாகும். இதனால்தான், 'ஊட்டிவிட்டால், உடலில் ஒட்டாது' என்று பாட்டிகள் சொல்வார்கள். இன்னொருவர் ஊட்டிவிடும்போது, அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவதை நாம் உணர முடியும். ஆனால், தன் கையால் சாப்பிடும்போது அளவாகச் சாப்பிட முடியும். கூடுதல் சுவையுடன் இருக்கும். நன்கு ரசித்தும் சாப்பிட முடியும்.

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

சுவைகள் ஏழு!

''என்னைப் பொறுத்தவரை சுவை ஆறு அல்ல, ஏழு! அந்த ஏழாவது சுவை, சமைப்பவரின் கைப்பக்குவம்!'' என்று சிரிக்கும் செஃப் சுல்தான் மொகைதீன், கோயம்புத்தூர்காரர். சென்னை, பார்க் ஷெரட்டன் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் பணிபுரிந்த இவர்... சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து வரலாற்று உணவு முறைகளைப் பற்றி 1998-ம் ஆண்டு ஓர் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை யாரும் மேற்கொள்ளாத அந்த முயற்சிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. தற்போது டெல்லியில் உள்ள பிரபல நிறுவனமான 'குவாலிட்டி குரூப்’பில் பணிபுரிந்து வரும் இவர், எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினிகாந்த் வரை நம்மூர் பிரபலங்களுக்கும்... மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேன் தொடங்கி, நம்முடைய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை ஏகப்பட்ட தேசியத் தலைவர்களுக்கும் விருந்து படைத்து பாராட்டைப் பெற்றவர்.

சாப்பிடும் முறை... நேரம்!

இன்றைய தொழில்நுட்ப உலகில் நினைத்த நேரத்தில் கிடைத்ததைச் சாப்பிடும் அவலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதுவே பலவிதமான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

காலை உணவு 7-9 மணிக்குள். பிறகு, 3 அல்லது 4 மணி நேர இடைவெளிவிட்டு மதிய உணவு. பிறகு, இதே இடைவெளி கொடுத்து மாலை நேர ஸ்நாக்ஸ் (சுண்டல் உள்ளிட்டவை). பிறகு, இதே இடைவெளி கொடுத்து இரவு உணவு. இரவு உணவு மற்றும் காலை உணவுக்கு 12 மணி நேர இடைவெளி (Breakfast). இப்படி சாப்பிடும்போதுதான் உடலானது அடுத்தடுத்த வேலைகளைச் சரிவர செய்வதற்கு தகுந்தாற்போல் தயாராக இருக்கும்.

சாப்பாட்டில் சந்தனம்!

சந்தனக் கட்டையை ஒரு நாளைக்கு முன்னரே தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தி புலாவ் உள்ளிட்டவற்றை சமைத்துச் சாப்பிட்டார்கள் முன்னோர். இது நோய்களை நெருங்கவிடாமல் செய்வதோடு, உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

வேப்பம்பூ, வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து, பஞ்சாமிர்தம் போன்று கலந்து, கோயிலில் பிரசாதமாகக் கொடுப்பது முந்தைய வழக்கம். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, மக்கள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தார்கள்.

பீட்ஸா டு பழங்கஞ்சி..!

சுண்டைக்காய் நம் நாட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக முன்பு இருந்தது. இதில் விதம்விதமான உணவுகளை சமைத்துச் சாப்பிட்ட முன்னோர், உடல்பருமன் தொடங்கி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் நெருங்காமல் வாழ்ந்தனர். இன்றைக்குக் கிட்டத்தட்ட சுண்டைக்காயை நம்மவர்கள் மறந்தேவிட்டனர். ஆனால், வெளிநாடுகளில் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, நன்றாகப் பயன்படுத்துகிறார்கள்.