உணவு ஸ்பெஷல்
Published:Updated:

தங்க மகள்கள்!

உ.சிவராமன்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என 64 பதக்கங்களோடு ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. இதில் ஆறு தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்திருப்பது பெண்கள். அவர்களின் மினி பயோடேட்டா!

வினேஷ் பகத் (மல்யுத்தம் - 48 கிலோ எடை பிரிவு): ஹரியானாவைச் சேர்ந்த இந்த 19 வயதுப் பெண், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்றவர். ''  'மல்யுத்தத்துக்குப் போறீங்களா..?’ என்று எங்கள் ஊர் ஆண்கள் செய்யும் கிண்டல்களை எல்லாம் கடந்து வந்தேன். இப்போது ஊரே தலையில் வைத்துக் கொண்டாடுகிறது'' என்று பெருமையோடு சொல்கிறார் வினேஷ்.

தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா செல்லப்பா (இரட்டையர் ஸ்குவாஷ்): சென்னையைச் சேர்ந்த இந்த ஜோடி, மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் விளையாட்டான ஸ்குவாஷில் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் தட்டியிருக்கிறார்கள். 23 வயதான தீபிகா பல்லிக்கல், உலக ஸ்குவாஷ் தரவரிசையில் பத்து இடங்களுக்குள் வந்தவர். 27 வயது ஜோஷ்னா செல்லப்பா, 19 வயதிலேயே நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்.

தங்க மகள்கள்!

சஞ்சிதா சானு (பெண்கள் பளுதூக்குதல் - 48 கிலோ எடை பிரிவு): ''தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை’' என்று குதூகலிக்கும் 20 வயது சஞ்சிதா சானு, மணிப்பூர்க்காரர். இவருக்கு கடும் போட்டியளித்த இவரின் தோழியான மிராபாய் சானுவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்திருக்கிறது.

ராகி சர்னோபட் (பெண்கள் துப்பாக்கி சுடுதல் - 25 மீட்டர் ஏர் ரைஃபிள் பிஸ்டல்): ''நமக்கு துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் பதக்கமும் உள்ளது, காமன்வெல்த் பதக்கமும் உள்ளது. நாம் முயற்சி எடுக்க வேண்டும்... அவ்வளவுதான்!'' என்று பாஸிட்டிவ் எனர்ஜியாகப் பேசுகிறார் இந்த 23 வயது மகாராஷ்டிர பெண்.

அபூர்வி சாண்டேலா (பெண்கள் துப்பாக்கி சுடுதல் - 10 மீட்டர் ஏர் ரைஃபிள்): ''அப்பா, மாமாவுடன் சேர்ந்து ஆறு வயதிலிருந்தே பயிற்சி செய்கிறேன்'' என்று சொல்லும் 21 வயதான இந்த ஜெய்ப்பூர் பெண்ணுக்கு, காமன்வெல்த் தங்கம்தான், உலகப் போட்டிகளில் கிடைத்திருக்கும் முதல் பதக்கம்.

பபிதா குமாரி (பெண்கள் மல்யுத்தம் - 55 கிலோ எடை பிரிவு - ஃப்ரீ ஸ்டைல்): இம்முறை இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்று, வேட்டையை ஆரம்பித்து வைத்தவர். 24 வயதாகும் பபிதா, விரலில் அடிபட்ட காரணத்தால் கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தவறவிட்டவர்.