உணவு ஸ்பெஷல்
Published:Updated:

காய்கறிகளை இஷ்டம்போல சாப்பிடலாமா?

சா.வடிவரசு

'காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதுதான் உடல்நலத்துக்கு நல்லது' என்றே அனைவரும் வலியுறுத்திக் கொண்டுள்ளனர். இது உண்மையும்கூட. அதற்காக வெறும் காய்கறி, பழங்கள் என்று இஷ்டம்போல சாப்பிடலாமா?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ உணவியல் துறை விரிவுரையாளர் குந்தலா ரவி, ''இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை குழந்தைகளும், இளைஞர்களும் தினமும் 300 கிராம் காய்கறிகள், 100 கிராம் பழங்களைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்; கர்ப்பிணிப் பெண்கள்... 400 கிராம் மற்றும் 150 கிராம் என்ற அளவில் சாப்பிட வேண்டும்; மற்றவர்கள் தங்களின் உடலில் சர்க்கரை உள்ளிட்ட நோய்களைப் பொறுத்து, இளைஞர்களுக்குச் சொல்லப்பட்ட அளவுக்கு சாப்பிடலாம் என்று வலியுறுத்துகிறது. இது சராசரி அளவு... இதிலிருந்து கொஞ்சம் கூடலாம், குறையலாம். ஆனால், காய்கறிதானே... பழம்தானே என்று இஷ்டம்போல தொடர்ந்து சாப்பிடுவது வேறுவிதமான பிரச்னை களைக் கொண்டுவரும்'' என்று எச்சரித்தவர், எப்படி சாப்பிடுவது என்பது குறித்து விளக்கினார்.

காய்கறிகளை இஷ்டம்போல சாப்பிடலாமா?

''காய்கறிகளைப் பொறுத்தவரை கீரை, கிழங்கு, மற்றவை என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தினமும் 100 கிராம் காய்கறிகள் வீதம் சாப்பிடலாம். அதாவது, ஏதேனும் ஒரு கீரை, ஏதேனும் ஒரு கிழங்கு, மற்ற வகை காய்கறிகளில் ஏதேனும் ஒன்று என தலா 100 கிராம் வீதம் சாப்பிட்டால்... மொத்தம் 300 கிராம் வந்துவிடும். இந்த அளவுக்கு

காய்கறிகளை இஷ்டம்போல சாப்பிடலாமா?

சாப்பிட வசதியில்லாதவர்கள், கீரை மற்றும் கிழங்கு அல்லது காய்கறி என ஏதாவது இரண்டு வகையில் 200 கிராம் அளவுக்குச் சாப்பிடலாம். சீஸனுக்கு ஏற்றவாறு மலிவு விலை காயுடன், அதிக விலையுள்ள காய் என கலந்து வாங்கிச் சாப்பிடலாம். காய்கறியை அப்படியே சமைத்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. சட்னி, ஜூஸ், சூப் என எந்த ரூபத்திலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அளவுக்குள் இருப்பது நல்லது. ஒரே மாதிரியான கீரை மற்றும் காய்களை தினமும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பழங்களைப் பொறுத்தவரை ஒரே பழத்தை தினமும் சாப்பிடுவதைவிட, முடிந்தவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாகச் சாப்பிடலாம். ஜூஸைவிட, பழத்துண்டுகளாக சாப்பிடுவது நல்லது. அப்படியே சாப்பிடக்கூடிய ஆப்பிள் போன்ற பழங்களில் வெளிப்புற பளபளப்புக்காக மெழுகுப்பூச்சு மற்றும் ரசாயனங்களின் தாக்குதல் இருக்க வாய்ப்பிருப்பதால், தோல் சீவி சாப்பிடுவதுதான் நல்லது. அல்லது 5 நிமிடம் சுடுநீரில் போட்டு எடுத்து சாப்பிடலாம்'' என்று சொன்னார் குந்தலா ரவி.