உணவு ஸ்பெஷல்
Published:Updated:

“கைப்பக்குவம் இருந்தா... கைநிறைய காசு!”

இணையத்தில் கலக்கும் இல்லத்தரசிவே.கிருஷ்ணவேணி, படங்கள்: எல்.ராஜேந்திரன்

''எனக்கு சமையலில் ரொம்ப ஆர்வம். எல்லா ஊர் சமையல் மட்டுமில்ல, எல்லா ஸ்டேட் சமையலும் என் கிச்சனில் மணக்கும். இந்த ரெசிப்பிகளை இணையத்தில் பகிரச் சொல்லி, என் பையன் எனக்காக 'போஜனா ரெசிப்பீஸ்’ங்கிற பிளாக் ஆரம்பிச்சு தந்தப்போ, 'கம்ப்யூட்டர்ல யாருடா சமையல் பத்திஎல்லாம் படிக்கப் போறாங்க?’னு தயங்கினேன். ஆரம்பிச்ச ஆறே மாசத்துல 1500-க்கும் மேல ஃபாலோயர்ஸ். ஆச்சர்யப்பட்டுப் போனேன்!''

- திருநெல்வேலி, பாலபாக்கிய நகர் சுபாஷினி வெங்கடேஷ§க்கு குரலில் வழிந்தது சந்தோஷம்.

'போஜனா ரெசிப்பீஸ்’ என்ற தன் பிளாக்கில் ரெசிப்பிகள், அதற்கான புகைப்படங்கள், சமையல் சந்தேகங்கள் தொடர்பான கேள்வி - பதில்கள், கிச்சன் டிப்ஸ்கள் என கலக்கிவரும் சுபாஷினி, ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியை.

“கைப்பக்குவம் இருந்தா... கைநிறைய காசு!”

''எங்கம்மா, மாசத்துல ரெண்டு ஞாயிறோட சமையலை, எங்கப்பா கையில கொடுத்துடுவாங்க. அப்போ, துணைக்கு எங்களை வெச்சுக்கிட்டு, கதை பேசிக்கிட்டு, கடகடனு சமையலை முடிச்சுடுவாரு அப்பா. அப்படிதான் சமையல்ல ஆர்வம் ஆரம்பிச்சுது. ப்ளஸ் ஒன் படிக்கிறப்பவே சமையல்ல ஏ டு இஸட் தெரிஞ்சுக்கிட்டேன். குடும்பத்துல அப்பா பக்கம் முழுக்க முழுக்க கேரளா. அம்மா பக்கம் தஞ்சாவூர். அதனால சின்ன வயசுல இருந்தே ரெண்டு பக்க சமையலையும் கத்துக்க வாய்ப்பு கிடைச்சுது. தவிர, அப்பா கூடப் பிறந்த அஞ்சு அத்தைங்களும் ஒவ்வொரு மாநிலத்துல இருக்காங்க. லீவுல இங்க ஒண்ணா கூடும்போது கர்நாடகா, குஜராத்னு அவங்கவங்க சமையலை ஆசையா சமைச்சுப் பரிமாறுவாங்க. அந்த ரெசிப்பிகளை எல்லாம் அவங்ககிட்ட எழுதி வாங்கிட்டு, லீவு முடிஞ்சதும் வீட்டுல செய்து பார்த்துடுவேன்.

கல்யாணத்துக்கு அப்புறம், ரெண்டு நாத்தனார், அவங்க பசங்க எல்லாம் என் சமையலை இஷ்டமா பாராட்டுவாங்க. அந்த ஊக்கத்தில்தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். என் பையன் கௌசிக் சென்னையில படிச்சுட்டு இருந்தப்போதான், 'உங்களோட ஸ்பெஷல் ரெசிப்பிகளை பலரோடவும் பகிர்ந்துக்க ஒரு பிளாக் ஆரம்பிச்சுத் தர்றேன்... ஜமாய்ங்க!’னு ஆரம்பிச்சுக் கொடுத்தான். அது இன்னும் பிஸி ஆக்கிடுச்சு.

“கைப்பக்குவம் இருந்தா... கைநிறைய காசு!”

வழக்கமான ரெசிப்பி, டிப்ஸ்னு இல்லாம, பிரத்யேகமா இயங்கணும்னு ஆசைப்பட்டேன். 99 வயதில் இறந்துபோன என் பாட்டிகிட்ட, கடைசி காலத்துல கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட உணவு வகைகள், சமையல் சூட்சுமங்களை போஸ்ட் செய்தேன். சொல்லப் போனா, பாட்டி சொல்லிக்கொடுத்த 'கொட்டு ரசம்’தான், என் பிளாக்ல அதிக லைக் வாங்கின டிஷ். இப்படி பாரம்பரிய உணவுகளோட, என் தம்பி மனைவி சத்யஸ்ரீயின் பங்களிப்பையும் சேர்த்து லேட்டஸ்ட் ரெசிப்பிகளும் கொடுக்க ஆரம்பிச்சேன். தென் ஆப்பிரிக்கா, மாலத்தீவு, ஸ்ரீலங்கானு பல நாடுகளுக்கும் போய் வந்திருக்கிற சத்யஸ்ரீ, அந்த ரெசிப்பி விவரங்களை எல்லாம் கேட்டு வாங்கிட்டு வருவாங்க. ரெண்டு பேரும் செய்து பார்த்துட்டு, புகைப்படங்களோட போஸ்ட் செய்வோம்.

ஆரம்பத்தில் எலுமிச்சை ரசம் செய்து போஸ்ட் பண்ணினப்போ, அவ்வளவு லைக்ஸ், கமென்ட்ஸ்! என்னதான் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்னு வந்தாலும், மண் மணக்கும் பாரம்பரிய உணவுகளைத் தேடுற கூட்டம் இணையத்திலும் இருக்குனு புரிஞ்சது. 'தோசை ஊற்றும்போது தோசைக்கல் ரொம்ப சூடா இருக்கணுமா?’னு ஒரு தோழி ஒரு தடவை கேட்டாங்க. சமையலின் அடிப்படைகூட தெரியாத இந்த தலைமுறை பெண்கள் மேல ஆச்சர்யம் ஏற்பட்டாலும், அக்கறையும் வந்துச்சு. அதனாலதான் அவங்களுக்காகவே, கேள்வி - பதில் பகுதியும் ஆரம்பிச்சேன்.

தெரிந்த சமையல் கலையை முதலீடா வெச்சே உயரலாம்ங்கிறதுக்கு நானும் ஒரு உதாரணம். பெரிய அளவில்தான் கேட்டரிங் செய்யணும்னு இல்ல. சபரிமலை சமயத்தில் 20 பேருக்கு, 40 பேருக்குனு ஆர்டர் பிடிச்சு செய்து கொடுக்கிறதுனு ஆரம்பிச்சு நிறைய செய்துட்டிருக்கேன். உங்களுக்கு தெரிந்த, தனிமையில் இருக்கும் வயதானவர்களை அணுகி தின சாப்பாட்டுக்கு ஆர்டர் வாங்குறதுனு சின்ன அளவில் ஆரம்பிச்சு புதுசு புதுசா யோசிச்சு நீங்களும் செய்யலாம். செய்றத நிறைவா செய்தா, இதுவே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும்!''

- சின்னப் புன்னகையுடன் விடைகொடுக்கிறார்... சுபாஷினி.