நண்பேன்டி...!
'பொண்ணுங்க நட்பு எல்லாம் புஸ்வாணம் மாதிரி, நாங்கதான் எப்பவுமே மாஸ்!’ என்று பெருமை பேசும் கைஸுக்கு, 'நாங்க எல்லாம் விரல் சப்புற வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்!’ என்று பதில் சொல்லும் சென்னையைச் சேர்ந்த இணைபிரியா தோழிகளின் நத்திங் பட் ஸ்வீட் மொமென்ட்ஸ் நினைவுகள் இங்கே..!
சங்கீதாவும், வினிதாவும் 19 வருடங்களாக உயிர்த் தோழிகள்! ''நாங்க ஒண்ணாம் கிளாஸ் படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸானோம். ஆனா, அதுக்கு அப்புறம் நாங்க சேர்ந்து படிச்சதே இல்ல!'' என்று சுவாரஸ்ய இன்ட்ரோ கொடுத்த சங்கீதா, ''ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது என் பிறந்தநாளன்னிக்கு சூப்பரா ஒரு புது ஃபிராக் போட்டுட்டுப் போயிருந்தேன். இன்னிக்கு கிளாஸே நம்மைத்தான் வேடிக்கை பார்க்கும்னு நான் சந்தோஷமா போனா, அங்க ஒரு பொண்ணு என்னோட ஃப்ராக் மாதிரியே போட்டுக்கிட்டு, எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்துட்டு இருந்தா. அட, ஆமாங்க... அவளுக்கும் அன்னிக்குதான் பிறந்தநாளாம். அவதான் வினிதா. அதுவரைக்கும் கிளாஸ்மேட்ஸா இருந்த நாங்க, அதிலிருந்து 'ஸேம் பின்ச்’ சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்!'' என்று தங்கள் நட்பு மலர்ந்த தருணத்தை சங்கீதா சொல்ல, தொடர்ந்தார் வினிதா.

''இப்போ ரெண்டு பேருமே எம்.எஸ்ஸி., எலெக்ட்ரானிக் அண்ட் மீடியா 3-ம் வருஷம் படிக்கிறோம். நாங்க ஃப்ரெண்ட்ஸாகி 19 வருஷம் ஆகிருச்சு. ஆனாலும், ஸ்கூல் படிக்கும்போது எல்லா நோட்டுலயும் என் பெயரை இவ எழுதி வெச்சு, டீச்சர்கிட்ட திட்டு வாங்கித் தந்தது, எங்கப்பா வாங்கிட்டு வர்ற ஆஞ்சநேயர் கோயில் புளி சாதத்தை ரெண்டு பேரும் போட்டிப் போட்டு சாப்பிட்டது எல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு. மொத்தத்துல, நாங்க ரெண்டு பேரும் ச்சோ ச்வீட் சங்கி மங்கி!'' என்று சொன்ன வினிதாவை அணைத்துக்கொள்கிறார் சங்கீதா.

''எங்களை பலரும் கேட்கிற கேள்வி... 'நீங்க ட்வின்ஸா..’ என்பதுதான்!’'
- பார்மஸி 4-ம் ஆண்டு படிக்கும் சாய் அஸ்வினிக்கும், பி.டி.எஸ். 4-ம் ஆண்டு படிக்கும் பிரக்யாவுக்கும் முகத்தில் அத்தனை சந்தோஷம்! ''ஆனா... அக்கா - தங்கச்சிங்ககூட எங்களை மாதிரி க்ளோஸா இருக்க முடியுமாங்கிறது சந்தேகம்தான்!'' என்று ஆரம்பித்தார் பிரக்யா. ''அஸ்வினி மாதிரி எல்லா விஷயத்திலும் பர்ஃபெக்டா இருக்கிற ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் இவளை 'மிஸ். பர்ஃபெக்ட்’னுதான் கூப்பிடுவோம்!'' என்று பிரக்யா சர்டிஃபிகேட் கொடுக்க, சாய் அஸ்வினியோ, செல்ல சிணுங்கலுடன், ''இவளை நம்பாதீங்கப்பா... பார்க்கத்தான் த்ரிஷா மாதிரி இருப்பா, ஆனா பண்றதெல்லாம் நயன்தாரா வேலை!'' என்றார் கண்ணடித்து. ''ஏய்... நீ கொடுத்த டயரி மில்க் சாக்லேட்டுக்கு நான் உன்னைப் பத்தி எவ்வளவு உயர்வா சொன்னேன். ஆனா, எங்கிட்ட சாக்லேட்டையும் வாங்கிட்டு, இப்படி ஏமாத்திட்டியேடி!'' என்று பிரக்யா கலாட்டாவாகக் கலாய்த்தார்.
''எல்.கே.ஜி-யில இருந்து ஒரே ஸ்கூல், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ-ல ஒரே குரூப், இப்போ ஒரே காலேஜ்... அவ்ளோ ஸ்ட்ராங் எங்க ஃப்ரெண்ட்ஷிப். வாழ்க்கையில உறவுகளில் இருந்து டீச்சர், மேலதிகாரி வரைக்கும் எல்லாமே கடவுள் கொடுக்கிறது. ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான் நாமளா தேர்ந்தெடுக்கிறது. அந்த வகையில என் வாழ்க்கையிலயே நான் செஞ்ச உருப்படியான விஷயம், இவளை என் ஃப்ரெண்டா தேர்ந்தெடுத்ததுதான்!'' என்று நிறுத்திய அஸ்வினி, ''அப்டினு சொன்னேன்னு வேணா எழுதிக்கோங்க. என்ன பண்றது... ஒரு சாக்லேட் லஞ்சம் வாங்கிட்டேனே!'' என்று சொல்ல, பிரக்யா அவரை விரட்ட... அது ஜாலி கோலி எபிசோட்!
பிரிக்க முடியாதது... ஃப்ரெண்ட்ஸும், மொக்கையும் போல!

''சாருன்னா எனக்கு உசுரு!'' என்று மிலி சொல்ல, ''மிலினா எனக்கு உச்ச்சுரு!'' என்கிறார் சாருமதி.
''நீங்க நினைக்கிற மாதிரி நாங்க கிளாஸ் மேட்ஸ் கிடையாது. இவ தம்பியோட கிளாஸ்மேட் தான் நான்...'' என்று மிலி சொல்ல, 'அப்புறம் எப்டீங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆனீங்க..?’ என்றால், ''ஆமா... எப்படி இப்படி ஆனோம்!'' என்று இருவரும் சேர்ந்து நம்மிடம் கேட்கின்றனர்.
''20 வருஷமா நாங்க ஒரே வீட்டில் குடியிருக்கோம். நாங்க மேல் போர்ஷன், இவங்க கீழ் போர்ஷன். அதனால எங்க ரெண்டு குடும்பமும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்... நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இந்த ஏரியாவுல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தாத இடமும் இல்ல, எங்கள ரோட்டுல திட்டாதவங்க யாரும் இல்ல. நாங்க எல்லாம் அப்போவே அப்படி!'' என்று தாங்கள் அசிங்கப்பட்டதை எல்லாம் அவிழ்த்துவிடும் சாரு, இப்போது பி.எஸ்ஸி., மேத்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்; மிலி பி.எஸ்ஸி., மேத்ஸ் பர்ஸ்ட் இயர் படிக்கிறார்.
''நோட் பண்ணிக்கோங்க... நாங்க பாட்டியானாலும் எங்க ஃப்ரெண்ட்ஷிப் மூழ்காத ஷிப்பாதான் இருக்கும்!'' என்று இந்த 20 வருடங்களில் தாங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் உற்சாகமாகக் நமக்குக் காட்ட ஆரம்பித்தார்கள் சாருவும், மிலியும்!
- க.தனலட்சுமி
படங்கள்: ச.ஹர்ஷினி, கு.பாலசந்தர்