உற்சாகம் தரும் ஒரு ரெஸ்டாரன்ட்கு.அஸ்வின், படங்கள்: க.பாலாஜி
''டேய், என்னடா... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல காபி கேட்டா... பால், டிகாக்ஷனை தனித்தனியா தந்து கலந்துக்கச் சொல்றான்'' என்று ஒரு படத்தில் காண்டாவார் கவுண்டமணி. அதைவிட செம காண்டானோம், 'ஃபுட்டாலஜி’ என்கிற பெயரில் சென்னை, அடையாறில் இயங்கும் ரெஸ்டாரன்ட் பற்றி நண்பர்கள் விவரித்தபோது!
'நாமே சமைத்து, சாப்பிட்டு வீடு திரும்ப வேண்டுமாம்! இதைத்தானே வீட்டுல பண்றோம், அதுக்கு எதுக்கு அங்க போகணும், இதுல என்ன சுவாரஸ்யம் கிடைக்கப் போகுது?’
- என்பது போன்ற எரிச்சல் கேள்விகளுடன் அங்கு ஒரு விசிட் சென்றோம். ஆனால், அங்கு நடந்ததை வேடிக்கை பார்க்கப் பார்க்க, செம கூல் ஆனோம்! நிறைய சுவாரஸ்யம், நகைச்சுவை, ரொமான்ஸ் அப்புறம் கொஞ்சம் சமையல் என்று... அது ஒரு வித்தியாச அனுபவம்! அன்று அங்கே வந்திருந்த ஐ.டி. ஊழியர்களை, 'இதுக்கு முன்ன சமைச்சிருக்கீங்களா..?’ என்ற கேள்வியோடு நிர்வாகத்தினர் வரவேற்க,
''நான் சூப்பரா சுடுதண்ணி வைப்பேன்'', ''நான் போடுற காபி சாப்பிட்டீங்கனா... அப்புறம் என்னை ஆயுசுக்கும் மறக்க மாட்டீங்க'' என்று அவர்கள் காமெடி பண்ண, ''இது போதும், மிச்சத்த நாங்க பார்த்துக்கிறோம்!'' என்று ஆரம்பித்தனர் கலாட்டாவை. அவர்களிடம் சின்னச் சின்ன மரத்துண்டுகளைத் தந்து, ''ஒரு துண்டின் மீது, இன்னொரு துண்டு வெச்சு அடுக்கணும். ரெண்டு நிமிஷத்துல எவ்வளவு அடுக்குவீங்க சொல்லுங்க..?'' என்று கேட்க, '15, 20' என குஷியானார்கள் பலரும். ''ஆனா, ஒரு கையாலதான் அடுக்கணும்'' என்றவுடன், சின்ன ஜெர்க்குடன் ரெடி ஆனவர்கள், ஐந்தைக்கூட தாண்டாமல் தள்ளாடினர்.

''நீங்க முதல்லயே ஒரு கை கண்டிஷனை சொல்லியிருந்தா, நாங்க 15, 20னு டார்கெட் சொல்லியிருக்க மாட்டோம்!'' என்று இவர்கள் பதற,
''இதுதான் உங்களுக்கு முதல் பாடம். எப்பவும் எதிர்பாராததையும் எதிர்பார்த்துட்டே இருக்கணும்!'' என்று சிரிக்கிறார்கள் நிர்வாகத்தினர்.

'அட, இந்தத் தத்துவத்தை எதுக்கு நம்மகிட்ட சொல்றாங்க?’ என்று வந்தவர்கள் விழிக்க, அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிடமும் ஒரு ஜாடியை நீட்டி, அதிலிருந்து ஒரு பேப்பர் எடுக்கச் சொல்கிறார்கள். அதில் இத்தாலியன், மெக்ஸிகன், தாய் என வெவ்வேறு நாட்டு உணவுகள் இடம்பெற்றிருக்க, ''இதைத்தான் நீங்க சமைக்கணும்'' என்றதும், கொஞ்சம்போல சமைக்கத் தெரிந்தவர்களும் குழம்ப, பிறகுதான் அவர்களுக்குப் புரிகிறது... எதிர்பாராததையும் ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்பதற்கான காரணம்!
'கபிள்ஸ் ஈவன்ட்' என்கிற பெயரில் ஒரு நாள் நிகழ்வு. மொத்தம் ஆறு ஜோடிகள். முதலில் மனைவிகளிடம் மிகவும் பிடித்த உணவு எது என்று எழுதி வாங்கப்படுகிறது. பிறகு, அதில் எந்த உணவை யார் சொன்னார்கள் என்று கணவன்மார்களை கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். பிறகு, அதே உணவை மனைவிக்காக, கணவனைச் சமைக்கச் சொல்கிறார்கள். அடுத்து, மனைவிகளின் கண்கள் கட்டப்படுகின்றன. சமைக்கத் தேவையான பொருட்கள், சில அடி தூரம் தள்ளி வைக்கப்படுகிறது. மனைவி கேட்கும் பொருட்களைக் கணவன் எடுத்துவர வேண்டும். ''பருப்பு எடுத்துட்டு வா!'', ''உப்பு எடுத்துட்டு வா!'' என்று மனைவி அதட்ட, ''அது எப்பிடிம்மா இருக்கும்..!'' என்று கணவன் கொஞ்ச, ''டேய், இதுகூட தெரியாத உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு!'' என்று மனைவி சிரிக்க, இருவர் முகத்திலும் காதல் வழிகிறது!
அடுத்து, கிட்ஸ் டே! மூன்று வயதிலேயே இங்கே சமையல் கற்க வருகிறார்கள் மொட்டுகள். ஐந்து வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அம்மாவுடனும், அதற்கு மேல் இருப்பவர்கள் நண்பர்களோடு சேர்ந்து வந்தும் கொண்டாடுகிறார்கள். அப்படி இங்கு வரும் குட்டீஸ்களின் அம்மாக்கள், ''அவ காய் எதுவுமே சாப்பிட மாட்டா. ஆனா, இங்க வந்து அவளே சமைக்கிறதுனால எல்லாம் சாப்பிடுறா'', ''நேத்து அவ இங்க கத்துகிட்டதை எனக்கும் கத்துக்கொடுத்தா... ரொம்ப நல்லாயிருந்துச்சு'' என்று சிலாக்கிறார்கள். கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணும், மணவாளனும் சேர்ந்து வரும் டிரெண்ட், டபுள் சுவாரஸ்யம்! இவர்களுக்கும் விதம்விதமான டெஸ்ட்டுகள் வைக்கப்படுகின்றன. இருவருமே பரஸ்பரம் புரிந்துகொள்கிறார்கள், பாசம் காட்டுகிறார்கள், சமைக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
இப்படி கலக்கிக்கொண்டிருக்கும் 'ஃபுட்டாலஜி’ ரெஸ்டாரன்ட்டின் உரிமையாளர்கள் ஸ்ரீ - அருண் தம்பதியிடம் பேசினோம்.

''போன வருஷம்தான் அமெரிக்காவுல இருந்து வந்தோம். இந்த ஸ்டைல் ரெஸ்டாரன்ட் அமெரிக்காவுல செம பாப்புலர். 'ஃபுட்டாலஜி’னா உணவுகள் பற்றிய படிப்பு. அதையே இதுக்கு பேரா வெச்சுட்டோம். சமைக்கிறது ரொம்ப நல்ல விஷயம். எங்க குடும்பத்துல எல்லாருக்கும் சமைக்கத் தெரியும். எங்க பசங்களுக்கு பத்து வயசுகூட ஆகல, ஆனா, சூப்பரா சமைப்பாங்க. சொல்லப்போனா, அவங்க சமைக்க ஆசைப்படுறதை, ஆர்வப்படுறதை பார்த்துதான் 'கிட்ஸ் டே’ பிளான் பண்ணினோம். ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்ச நாலு மாசத்துல இவ்வளவு ரெஸ்பான்ஸ், கஸ்டமர்ஸ் கிடைப்பாங்கனு எதிர்பார்க்கல. இப்பகூட ஒரு தாத்தா, 'அன்மேரிட் கபிள்ஸுக்குப் பண்றதை எனக்கும் என் வொய்ஃப்புக்கும் பண்ண முடியுமா?’னு கேக்குறார். தமிழ் சினிமாவோட பிரபல ஹீரோ, ஹீரோயின்ஸ்லாம் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸோட வந்துட்டுப் போறாங்க. இங்க வந்துட்டுப் போறவங்க எல்லாரும், இதை நிச்சயமா வீட்டுலயும் பண்ணிப் பார்ப்போம்னு சொல்லிட்டுப் போவாங்க'' என்ற ஸ்ரீ,
''இப்போவெல்லாம் வீட்டுல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறதில்ல. எங்க வீட்டுல நாங்கெல்லாம் பத்து, பதினைஞ்சு பேர் சேர்ந்து சாப்பிடுவோம். அவ்வளவு அழகா, ஜாலியா இருக்கும். ஒண்ணா சாப்பிடுறதே அவ்வளவு பெரிய சந்தோஷம்னா, ஒண்ணா சமைக்கிறதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க!''
- கண்கள் மின்ன முடித்தார் ஸ்ரீ.