உணவு ஸ்பெஷல்
Published:Updated:

ஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்!

உடன்பிறப்புகளின் அசத்தல் வெற்றிஉ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

முளைகட்டிய பயறுகள், சிறுதானிய உணவு வகைகள், காய்கறி சூப் என இப்போது இந்த பாரம்பரிய உணவுகள்தான் ஹிட். புதிய நோய்களின் வரவால் மீண்டும் பழமையை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டனர் மக்கள். கம்பு, தினை உள்ளிட்ட சிறுதானியங்களின் பெருமையைச் சுத்தமாக மறந்துவிட்ட நகர்ப்புற மக்களிடமும் இதுகுறித்த விழிப்பு உணர்வு, இதற்கான வரவேற்பு பெருகி வருவது, நற்செய்தி!

இந்த வகையில், தேனியில், சிறுதானிய உணவுகள் மூலம் மக்களை ஆரோக்கியத்தை நோக்கி நகர்த்தி வரும் 'மாருதி ரெஸ்டாரன்ட்’ உரிமையாளர்களும் உடன்பிறப்புகளுமான சுரேஷ் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோரிடம் பேசினோம்.

'எங்களுக்கு இந்த சிறுதானிய சிந்தனை வந்ததுக்கு முதற் காரணமே, விகடன்தான்!'' என்று உற்சாகமாகப் பேச்சை ஆரம்பித்தார் சுரேஷ். ''அட, ஆமாங்க! 'பசுமை விகடன்' இதழ்ல சிறுதானியங்களின் சிறப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நம்மாழ்வாரின் கட்டுரைகளும், ஆனந்த விகடன்ல வெளிவந்த 'ஆறாம் திணை’ தொடரும்தான் எங்களோட இந்த முயற்சிக்கு பிள்ளையார் சுழி'' என்றவர், அந்த வாசிப்பு, உணவகமாக உருவெடுத்த கதையைச் சொன்னார்.

ஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்!

''ஆரம்பத்துல பேக்கரி மட்டும்தான் நடத்திட்டு வந்தோம். கொஞ்சம் காலூன்றுனதுக்கு அப்புறம் ரெஸ்டாரன்ட் கொண்டு வந்தோம். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சாங்க. கஸ்டமர்கள்கிட்ட வாங்குற பணத்துக்கு உணவோட சேர்த்து ஆரோக்கியத்தையும் கொடுக்கணும்னு நினைச்சோம். அதுக்காக எடுத்தவொடனேயே சிறுதானிய உணவுகளைத் தனியா பரிமாறல. வழக்கமா கெ£டுக்கிற மதிய சாப்பாட்டுடன், பாரம்பரிய உணவு ஒண்ணையும் இலவச இணைப்பா கொடுக்க ஆரம்பிச்சோம். உதாரணமா... கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, வெல்லம் கலந்த ஜூஸ். 'அட, நல்லாஇருக்கே!’னு சாப்பிடுறவங்களுக்கு, அதோட மருத்துவக் குணங்களைச் சொல்லுவோம். இந்த யுக்திக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. புதிய வகை உணவா இருந்தாலும், அது ருசியா இருந்துட்டா நிச்சயம் 'கிளிக்’ ஆயிடும்தானே..! அதனால எங்க இலவச இணைப்பு உணவில் அறுசுவைகளையும் அறிமுகப்படுத்தினோம். இதோட எங்க போராட்டம் முடியல...'' என்று சிரித்த சுரேஷ், தொடர்ந்தார்.

ஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்!

''ஆரம்ப முயற்சிகள் தெம்பு கொடுக்க, சிறுதானிய உணவுகளைத் தனியாவே அறிமுகப்படுத்த ஆயத்தமானோம். இங்க வர்ற பெரும்பாலான மக்கள் உழைப்பாளிகள், கிராமத்துப் பழக்கம் சார்ந்த மக்கள். மதிய சாப்பாட்டுக்கு பிறகு அடுத்து இரவுதான் அவங்களோட சாப்பாடு. அதனால உணவோட அளவு அவங்களுக்கு அதிகமா இருக்கணும், ருசி திருப்தியா இருக்கணும். அதனால ரெண்டு, மூணு வகை உணவுகளை ஒன்றா சேர்த்து 'காம்போ’வா கொடுத்தோம். உதாரணமா, தினைப்பொங்கல் (இனிப்பு), வரகு அரிசி பிரியாணி (காரம்), சாமை லெமன் சாதம் (புளிப்பு), குதிரைவாலி தயிர் சாதம் (உவர்ப்பு), பாகற்காய் இனிப்பு பச்சடி (கசப்பு), வாழைப்பூ அல்லது நெல்லிக்காய் துவையல் (துவர்ப்பு) இப்படி அறுசுவையையும் 'காம்போ’வா, அதேசமயம் தரம் நிறைஞ்சதா கொடுத்தோம். நல்ல வரவேற்பு!'' என்றார், ரெஸ்டாரன்ட்டில் நிரம்பியிருந்த டேபிள்களை ரசித்தவாறு! தொடர்ந்த ஜெய்சங்கர், ''நல்ல உணவைத் தரணும்னா... தரமான பொருட்களை வாங்கணும். நாங்க பெரும்பாலும் தானியங்களை நேரடியா மில்லுல போய் வாங்கிடறோம். போன மாசம் ஒரு கஸ்டமர் தன்னோட வீட்டு விசேஷத்துக்காக வழக்கமான மதிய உணவு வகைகளை ஆர்டர் கொடுக்க வந்தார். அவர்கிட்ட, 'சிறுதானிய உணவுகளுக்கு நாங்க கியாரன்டி, நம்பி வாங்கிப் பாருங்க’னு வலியுறுத்தினோம். அவரும் சம்மதிச்சார். விசேஷம் முடிஞ்ச பிறகு போன் பண்ணினவர், 'சூப்பர் ஐடியா சார்! எல்லாரும் விரும்பிச் சாப்பிட்டாங்க. உணவு மாதிரியே ஃபங்ஷனும் சிறப்பா முடிஞ்சுது!’னு சந்தோஷமா சொன்னார். இதுதான் எங்களுக்கு கிடைக்கிற பெரிய திருப்தி!

ஹிட் அடிக்கும் சிறுதானிய உணவுகள்!

மதிய உணவு மட்டுமில்லாம சாயந்திரம் கோதுமை பரோட்டா, பாசிப்பருப்பு அடை, ராகி இடியாப்பம்னு கொடுத்துட்டு வர்றோம். இன்னும் 50 வகையான பாரம்பரிய உணவு வகை ரெசிப்பிகள் கைவசம் வெச்சிருக்கோம். இப்ப கொடுத்திட்டு இருக்கிற உணவு மக்களுக்கு சலிச்சிடுறதுக்கு முன்ன, வேற ரெசிப்பிகளை அறிமுகப்படுத்திடுவோம்'' என்றார் ஜெய்சங்கர்.

''ஒண்ணு தெரியுமா... அதிகமா சிறுதானியங்கள் ஏற்றுமதி செய்யுற நாடு, இந்தியா. அதேசமயம், சிறுதானியங்களைக் குறைவா பயன்படுத்துற நாடும், இந்தியாதான். எவ்வளவு முரண்பாடு பாருங்க..! இதை மாத்த வேண்டிய பொறுப்பு நம்ம எல்லார் கையிலயும் இருக்கு!'' என்கிற ஜெயசங்கர் படித்திருப்பது பி.ஏ சோஷியாலஜி. சுரேஷ் பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர்.

''என் தம்பி ஜெயசங்கரோட மனைவி ரமாபிரபாவும், என் மனைவி வினோதினியும்தான் எங்க பிசினஸ் வெற்றிகரமாக பயணிக்கிறதுக்கு பின்புலமா இருக்கிறவங்க. அவங்களும் எங்க கூட வந்து சிறுதானியங்களைத் தரமானதா, சுத்தமானதா பார்த்து பார்த்து வாங்குற அக்கறையிலதான் எங்க கடையோட சுவையும் அடங்கியிருக்கு'' என்கிறார் சுரேஷ், பெருமிதத்துடன்.