உணவு ஸ்பெஷல்
Published:Updated:

ஆறவில்லை... தீயினால் சுட்ட புண்!

ம.பிரியதர்ஷினி, ஹ.இராமகிருஷ்ணன், படங்கள்: தி.கௌதீஸ் 

''தீக்காயம்பட்டவங்களுக்கு அந்த வடு உடம்புல இருக்கிறது பெரிய பிரச்னைங்கிறது எனக்கு நல்லா புரியும். நான் டாக்டராகி, இப்படி பாதிக்கப்பட்டவங்களுக்கு அதோட வடு வெளியில தெரியாதபடி மாத்துவேன்...''

- 94 குழந்தைகளைப் பலிவாங்கிய கும்பகோணம், ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் சிக்கி, உடல் முழுக்க அதன் வடுக்கள் சுமந்தபடி தற்போது பதினோராவது படித்துக்கொண்டிருக்கும் கௌசல்யா, சம்பவம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்தபோதிலும், அதன் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. இவரைப் போலவே நூலிழையில் உயிர்பிழைத்த குழந்தைகள், இன்று வளர்ந்துவிட்டார்கள். ஆனாலும், நெருப்பின் வடுக்களும், மனக்காயங்களும் மறையவில்லை அனைவருக்குமே!

ஆறவில்லை... தீயினால் சுட்ட புண்!

தற்போது கும்பகோணம், பாணாதுறை ஹையர் செகண்டரி பள்ளியில் படிக்கிறார் கௌசல்யா. ''அப்ப ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூல்ல என் அக்கா அஞ்சாவது, நான் மூணாவது, தங்கச்சி ஒண்ணாவதும் படிச்சிட்டிருந்தோம். ஸ்கூல் மாடியில கீத்து மாத்தினாங்க. அதுல மீந்து போன கீத்தை அடுப்பங்கரையில வெச்சுருந்தாங்க. அடுப்பங்கரை மேல் ஃப்ளோர்ல இருந்தது. நாங்க கிரவுண்ட் ஃப்ளோர். ஆயாம்மா அடுப்புல அரிசி பானையை வெச்சுட்டு, பக்கத்துல இருந்த கோயிலுக்குப் போயிட்டாங்க. தீ சட்டுனு கீத்துல பட்டதுதான் இத்தனை கொடுமைக்கும் காரணம். வெளியில ஓட முடியாதபடி கிரில் கேட் மூடியிருக்க, பென்ச்சுக்கு கீழ ஒளிஞ்ச என் மேலயும் தீ பிடிச்சிடுச்சு. அலறின என்னையும், இன்னும் பல குழந்தைகளையும், ஸ்கூல் பின்னாடி வேலை பார்த்துட்டிருந்த கொத்தனார்தான், ஸ்கூல் பில்டிங்கை உடைச்சுகிட்டு வந்து காப்பாத்தினார். வலது முழங்கை வரை எரிஞ்சுபோக, வலது கால், இடது கை, தலைனு எல்லா இடத்திலேயும் காயம். சென்னை, அப்போலோ மருத்துவமனையில சிகிச்சை எடுத்ததுல ஓரளவு குணமாச்சு. ஆனா, ரெண்டு வருஷ படிப்பு போச்சு. காலேஜ் போயிருக்க வேண்டிய நான், ப்ளஸ் ஒன்தான் படிக்கிறேன். இப்பவும் என்னால ஈஸியா எழுத முடியறதில்ல'' என்று வேதனையில் விம்மும் கௌசல்யாவுக்கு,

''இப்ப படிக்கிற ஸ்கூல்ல என்னை, என் தோற்றத்தை யாரும் கிண்டல் பண்ணாத மாதிரி ஸ்கூல் மிஸ் நல்லா பார்த்துக்கிறாங்க'' என்பதுதான் மிகப்பெரிய ஆறுதல்!

விபத்தில் தங்கையைப் பறிகொடுத்த மதுமிதா, ''அப்போ அஞ்சாவது படிச்சிட்டு இருந்தேன். தங்கச்சி சுஷ்மிதா மூணாவது படிச்சுட்டு இருந்தா. தினமும் ஸ்கூலுக்கு நடந்து கூட்டிட்டு போகும்போது, 'நான் படிச்சு பெரியாளா வந்து, கார் வாங்கி, உன்னைக் கூட்டிட்டுப் போவேனே’னு அம்மாகிட்ட சொல்லிட்டே வருவா. ஆனா, எங்ககிட்ட இருந்து அவளைப் பறிச்சிடுச்சு தீ. ரெண்டு வருஷத்துல அப்பாவும் இறந்துட்டாங்க. வீட்டுல சிரிப்பு சத்தமே இல்லாம போச்சு. வலியில எப்படியெல்லாம் கத்தியிருப்பா, தப்பிக்க நினைச்சு எப்படியெல்லாம் துடிச்சுருப்பா தங்கச்சினு நினைச்சுட்டா... இப்பவும் சாப்பாடு, தூக்கம் எல்லாம் போயிடும்?'' எனும் மதுமிதாவின் குரலில் விரக்தி.

ஒவ்வொரு ஆண்டும் அந்த கரிய தினத்தில் மறைந்த பிஞ்சுகளுக்கு அஞ்சலி செலுத்த, பள்ளியின் முன் கூடுகிறார்கள் மக்கள். இந்த நாளை 'குழந்தைகள் பாதுகாப்பு தின’மாக உள்ளூர் விடுமுறையுடன் அறிவிக்க வேண்டும் என்பது, பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் கோரிக்கை. 'இனி எந்தப் பெற்றோருக்கும் இந்தக் கொடுமை வரக்கூடாது' என்பதை நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகவாவது இதை அரசு நிறைவேற்ற வேண்டும்!

''இது நீதியில்லை... அநீதி!''

ந்தக் கொடும் விபத்து நடந்தது... ஜூலை 14, 2004-ல். இதோ... அதோ என்று பத்தாண்டுகள் உருண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.

மாவட்ட கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், பள்ளி ஆசிரியர்கள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள் உள்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, பள்ளி தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியர், சாந்தலட்சுமி, சத்துணவு அமைப¢பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி உள்ளிட்ட எட்டு பேருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை, இன்ஜினீயர் ஜெயச்சந்திரனுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை என விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களின் கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை. ''10 ஆண்டுகளாகக் காத்திருந்த எங்களுக்குக் கிடைத்திருக்கும் அநீதி இது. எங்க பிள்ளைங்களோட சாபம் அந்த டீச்சர்களை சும்மா விடாது. அந்த டீச்சருங்க பள்ளிக்கூடத்தைப் பூட்டினதாலதான் எங்க பிள்ளைங்க கரிக்கட்டையானாங்க. அவங்களுக்குத் தண்டனை கொடுக்கணும். அதேபோல, கடமையைச் செய்யத் தவறின அதிகாரிகளும் தண்டிக்கப்படணும். அப்பத்தான் நாளைக்கு யாரும் தப்பு பண்ண பயப்படுவாங்க'' என்று கொதிக்கிறார்கள் அந்தப் பெற்றோர்!