உணவு ஸ்பெஷல்
Published:Updated:

“எங்க மாமியாருக்கு பர்த்டே..!”

கொண்டாடித் தீர்த்த மருமகள்கள்பிரேமா நாராயணன்

'டயட்டீஷியன்' ஷைனி சுரேந்திரனிடமிருந்து ஓர் அழைப்பு. ''எங்க மாமியாரோட அறுபதாவது பிறந்தநாள்... ஹோட்டல் ஹயாத்ல ஒரு சின்ன ஃபங்ஷன். நீங்க அவசியம் வரணும்!'' என்றார்.

''வழக்கமான பிறந்தநாள் பார்ட்டி இல்ல இது. என் மாமியாருக்கு சில இன்ப அதிர்ச்சிகளை நானும் என் ஓர்ப்படியும் (ஷைனி கணவரின் தம்பி மனைவி மோனா) தரப்போறோம். அதெல்லாம் அவங்களுக்கே தெரியாது!'' என்றபோது, அன்பும் உற்சாகமும் அவர் குரலில். மாமியார் மாலதி ஜெயசேகர் பற்றி அடிக்கடி சொல்லியிருக்கிறார் ஷைனி. புரிதலும் சிநேகமும் கொண்ட அழகான உறவு அது.

விழாவன்று மாலை... ஹோட்டலின் கீழ்த்தளத்தில் பார்ட்டி ஹால் வாசலில், 'ஹேப்பி பர்த்டே மாலீ...' (மாலதியின் செல்லப்பெயர்) என்ற வாசகங்களுடன், திரைப்படச் சுருளின் நடுவே சிரிப்பது போன்ற அவருடைய புகைப்படம் கொண்ட ஃப்ளெக்ஸ்கள் வரவேற்றன. நல்ல திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர் என்பதால், சிவாஜி, சாவித்திரி, கே.ஆர்.விஜயா, கமல், ரஜினி என கதாநாயக, நாயகிகளின் படங்களைக் கொண்டு ஹாலும், விழா மேடையும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

“எங்க மாமியாருக்கு பர்த்டே..!”

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்நிகழ்வில் அனைவரும் மாலதியிடம் ஆசிபெற்றனர். சிறிது நேரத்தில் அந்த வி.ஐ.பி-யை பார்த்ததும் மாலதிக்கு தாங்க முடியாத ஆச்சர்யம்! பின்னே... தான் தினமும் டி.வி-யில் பார்த்து பிரமிக்கும் அந்தப் பிரபலம், நேரிலேயே வருகிறார் என்றால்? அவர்... சுகி.சிவம். தினமும் 'இந்த நாள் இனிய நாள்’ பார்க்காமல் மாலதியின் நாளே நகராது எனுமளவுக்கு, விசிறி. ''என் பேச்சை தினமும் கேட்கும் ரசிகைக்காக, அவருடைய 60-வது பிறந்தநாளில் வந்து பேசி வாழ்த்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது, எந்த விருதிலும் கிடைக்காத மகிழ்ச்சி!'' என்று கூறி, நகைச்சுவை மிளிர தன் பாணியில் பேசினார் சுகி.சிவம்.

பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்கும் மாலதிக்கான அடுத்த ஆச்சர்யம், கவிஞர் பிறைசூடன். அவர் மேடையில் தோன்றி, வாழ்த்திப் பேசினார். டி.வி-யில் ஒளிபரப்பாகும் காமெடி

“எங்க மாமியாருக்கு பர்த்டே..!”

நிகழ்ச்சிகளின் ரசிகை மாலதி என்பதால், அடுத்ததாக மேடை ஏறினார் மாலதியின் 'ஃபேவரைட்’ காமெடியன் 'மதுரை’ முத்து. ''உங்க பிறந்த நாள் விழாவுல நானும் கலந்துக்கிட்டு, ஆசீர்வாதம் வாங்கினதுல எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம்!'' என்ற முத்து, அடுத்த சில நிமிடங்கள் வெடித்த நகைச்சுவை சரவெடிகளில் ஹால் அதிர்ந்தது.

ஒரு சர்ப்ரைஸை ஜீரணிப்பதற்குள் முளைத்த அடுத்தடுத்த ஆச்சர்யங்களைக் கண்கள் விரியப் பார்த்து, சிரித்து, உணர்வுக் கலவையாக உட்கார்ந்திருந்தார் விழா நாயகி.

ஷைனியிடமும் அவர் ஓர்ப்படியிடமும் பேசினோம். ''ஒரு மாமியார் மாதிரியே எங்ககிட்ட இருக்கமாட்டாங்க. ரொம்ப ஃப்ரெண்ட்லி. என்ன பிரச்னைனாலும் அவங்ககிட்ட ஆலோசனை கேட்கலாம். 'இதுக்கா இவ்வளவு கவலைப்படறே... தூக்கிப் போடு!’னு ஈஸியா தீர்வு சொல்லுவாங்க. இவங்க, எங்களோட மாமியார் மட்டுமில்ல, இன்னொரு அம்மா!'' என்று நெகிழ்ந்தனர். சின்ன வயதில் தங்களுக்காகக் கஷ்டப்பட்ட அம்மாவுக்கு, தங்களால் முடிந்த அளவு சந்தோஷத்தையும் நிறைவையும் திகட்டத் திகட்டத் திருப்பித் தரும் முயற்சியில் வெற்றி பெற்ற பெருமிதம் மகன்களுக்கும், மருமக்களுக்கும்.

பரிசுகள் தவிர்க்கப்பட்ட இந்நிகழ்வில் அனைவரும் அள்ளிச் சென்றது... அன்பு, அன்பு, அன்பு மட்டும்தான்! இப்போது குடும்பங்களும் பிள்ளைகளும் போய்க்கொண் டிருக்கும் போக்கை மாற்றவும், முளைக்கும் பிரச்னைகளைத் தீர்க்கவும், அனைவருக்கு மான அத்தியாவசியத் தேவையும் அடிப் படைத் தேவையும் இதுதானே!

''நான் கொடுத்து வெச்சவ!''

ரவசமும் ஆச்சர்யமும் அகலாமல், சிரித்த முகத்தோடு அனைவரையும் வழியனுப்பிக்கொண்டிருந்த மாலதி, ''ஒரு தாய், தன்னோட பிள்ளைகளைக் கண் போலப் பார்த்துக்கிறது பெரிய விஷயமில்லை. பிள்ளைங்க அதே அன்போட தாயைப் பார்த்துக்கிறதுங்கிறது, இந்தக் காலத்தில் எத்தனை வீட்டில் நடக்குது? அந்த விதத்தில் நான் கொடுத்து வெச்சவ. நாம எப்படி மருமகள்கள்கிட்ட நடந்துக்குறோமோ, அவங்களும் அப்படியே நம்மகிட்ட நடந்துக்குவாங்க. இது சிம்பிள் லாஜிக். ஆனா, பலருக்கும் புரியல!'' என்றார்.

மாலதி ஜெயசேகர், பள்ளி இறுதி வரை படித்தவர். 19 வயதில் திருமணம். கணவர், இரு மகன்கள் என இனிமையான வாழ்க்கை. கல்யாணமான 10 வருடங்களில், கணவருக்கு உடல்நிலையில் பாதிப்பு! மூத்த பிள்ளைக்கு 18 வயதானபோது, கணவர் காலமாக, குடும்பப் பொறுப்பை தோள்களில் ஏற்றார். ஹிந்தி கற்றுச் சான்றிதழ் பெற்றவர் என்பதால், வீட்டிலேயே ஹிந்தி வகுப்புகள் எடுத்தார். ஹிந்தி டியூஷன், ஹிந்தி சான்றிதழ் வகுப்புகள் என 10 வருடங்கள் இடைவிடாது உழைத்தார். மகன்கள் இருவரும் படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, செட்டிலான பிறகுதான் மூச்சு விட்டார். இப்போது, வீடு, கார், அன்பான மருமகள்கள், பேரக் குழந்தைகள், சொந்தபந்தங்கள்... என நிறைவான வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது மாலதிக்கு!