உணவு ஸ்பெஷல்
Published:Updated:

'டிசைனரம்மா!’

சரண்யா பொன்வண்ணனின் இன்னொரு முகம் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: பொன்.காசிராஜன்

தமிழ் சினிமாக்களின் தற்போதைய 'அக்மார்க்’ அம்மா, சரண்யா பொன்வண்ணன். கேமராவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தாலும், சென்னை, விருகம்பாக்கத்தில், சமீபத்தில் 'சாஃப்ட்' (ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி) என்ற பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்திருப்பவரை, வகுப்புக்கு இடையில் சந்தித்தோம்.

''என்ன திடீர்னு கையில் கத்தரியோட கிளம்பிட்டீங்க..?'’ என்றால்,

''என்னை ஒரு நடிகையாதானே உங்களுக்குத் தெரியும்..? ஆனா, நான் ஒரு நல்ல டெய்லர், கிரியேட்டிவான டிசைனர்!'' என்று அந்த டிரேட்மார்க் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார் சரண்யா.

''என் அம்மா சரோஜினி ராஜ், ஒரு டெய்லர். அதோட புத்தகம், டி.வி-னு தேடித்தேடி டிசைனிங்லயும் ஆர்வமா இருப்பாங்க. வீட்டில் ரெண்டு தையல் மெஷின்கள் இருக்கும். ஸ்டிச்சிங், எம்ப்ராய்டரி, அப்ளிக் வொர்க்னு எப்பவும் அம்மாவுக்கு அந்த மெஷின்கள்தான் பொழுதுபோக்கு. 'பழைய துணியில் ஏதாவது தைச்சுப் பழகு’னு என்னையும் சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா, நான் அதை கண்டுக்கவே மாட்டேன். திடீர்னு அம்மா தவறிப்போக, அந்த இழப்பை தாங்க முடியாம உள்ளுக்குள்ளயே அழுதிட்டிருந்தேன். ஒருநாள் அவங்க தைக்கிறதுக்காக வெட்டிப் போட்டிருந்த துணிகளால மூடியிருந்த அவங்களோட தையல் மெஷினைப் பார்த்தப்போ, ஓடிப்போய் அதைக் கட்டிப்பிடிச்சு அழுதுட்டேன். அம்மா இருந்து சொன்னப்போ கத்துக்காத டெய்லரிங்கை, அப்போ கத்துக்கணும்னு ஆசையா, ஏக்கமா, கண்ணீரா இருந்துச்சு'' என்பவர், அப்போது சினிமாவிலும் பிஸி.  

'டிசைனரம்மா!’

''கீழ்ப்பாக்கம், கெல்லீஸ் கோத்தாரி அகாடமியில சேர்ந்தேன். அங்க சுகந்தி அய்யாசாமி, கோகிலானு ரெண்டு டீச்சர்ஸ். ஒரு வருஷப் படிப்பான அந்த டிப்ளோமா கோர்ஸில் அவுட்ஸ்டாண்டிங் மாணவியா தேர்ச்சி பெற்றேன். அதேசமயம்தான் 'கருத்தம்மா’ படம் ரிலீஸ். ரெட்டை சந்தோஷம் எனக்கு. சொன்னா நம்புவீங்களானு தெரியாது... அதிலிருந்து கிட்டத்தட்ட 20 வருஷமா எனக்கு, என் ரெண்டு பொண்ணுங்களுக்கு, என் வீட்டுக்காரருக்குனு எங்க வீட்டுல எல்லாருக்கும் நான்தான் டெய்லர், காஸ்ட்யூம் டிசைனர். காலையில 9 மணியில இருந்து சாயங்காலம் 6 மணிக்குள்ள சர்வ சாதாரணமா என்னால ஐந்து சல்வாரை தைச்சிட முடியும். எங்க வீட்டுல தையல் மெஷின் சத்தம் கேட்டுட்டேதான் இருக்கும்.

ஷூட்டிங் ஸ்பாட்லகூட நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேரவனுக்குள்ள பேட்டர்ன் கட்டிங், எம்ப்ராய்டரி வொர்க் எல்லாம் செய்து, பேக்ல எடுத்து வெச்சுப்பேன். வீட்டுக்குப் போனதும் தைக்க ஆரம்பிச்சுடுவேன். கேரவனுக்கு வந்து பார்க்கிற டிசைனர்ஸ் எல்லாம், 'மேடம், எங்களுக்கு வேலையில்லாம பண்ணிடுவீங்க போல!’னு சிரிப்பாங்க. சினிமாவிலும் நிறைய பிரபலங்களுக்கு டிசைனிங் செய்து கொடுத்திருக்கேன். ராதிகா, தன் பொண்ணு ரயானோட மூணாவது பிறந்தநாளுக்காக ஒரு மேக்ஸி தைச்சுக் கொடுக்கச் சொன்னாங்க. இதுக்காக, அவளை 'பசும்பொன்’ பட ஷூட்டிங் நடந்த இடத்துக்கே கூட்டிட்டு வந்து, மெஷர்மென்ட் கொடுத்தாங்க. அந்த டிரெஸ் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ரொம்பப் பிடிச்சுருந்துச்சு. இன்னும் பல ஸ்டார் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு டிசைனிங் செய்து கொடுத்திருக்கேன்.

அவார்டு வாங்கற நிகழ்ச்சி ஒண்ணுல கலந்துக்க வேண்டியிருந்துச்சு. ஷூட்டிங் பரபரப்பால அந்த ஃபங்ஷனுக்கு கட்டிட்டுப் போக எடுத்து வெச்ச சேலைக்கு, பிளவுஸ் தைக்க முடியல. சாயங்காலம் நாலு மணிக்கு உட்கார்ந்து படபடனு தைக்க ஆரம்பிச்சுட்டிருக்கும்போது, 'இதுதான் இன்னிக்கு ஈவ்னிங் டிரெஸ்ஸா?'னு ஆச்சர்யப்பட்டு பாராட்டினார் என் கணவர். எனக்கு அவார்டு கிடைச்ச அத்தனை நிகழ்ச்சி களுக்கும் நானே டிசைன் பண்ண டிரெஸ்ஸைத்தான் போட்டுட்டு போவேன்.

என் பொண்ணுங்களுக்கு நான் டிசைன் செய்ற ஆடைகளைப் பார்த்துட்டு, நிறைய பேர் வந்து அவங்களுக்கும் கேட்டாங்க. 'ஐயையோ... அதுக்கெல்லாம் நேரமே இல்லீங்க’னு சொன்னப்போ, 'டிசைனிங் பண்ணிக் கொடுக்கத்தான் நேரமில்ல... ஆனா, கத்துக் கொடுக்கலாமே?’னு அதுல சிலர் கேட்டாங்க. பழக்கத்துக்காக ரெண்டு பேருக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அது அப்படியே வளர்ந்து, இப்போ இந்த ஃபேஷன் டெக்னாலஜி ஸ்கூல் அளவுக்கு வந்துடுச்சு. கார்மென்ட் பிசினஸ் செய்றவங்க, பொட்டீக் வெச்சுருக்கிறவங்கனு நிறைய பேர் இங்க பயிற்சிக்கு வர்றாங்க.

எங்க அம்மா இப்போ என்னைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்கள்ல..?'' என்று கேட்கும்போது கண்கள் மின்னுகிறது இந்த கோடம்பாக்க 'அம்மா’வுக்கு!