மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

ஆல் இன் ஆல் அழகு ராணி! ரிமோட் ரீட்டா

ஐ.டி கம்பெனியில வேலை, சனி, ஞாயிறு சேனல் ஷூட்டிங், இது தவிர சினிமா, விளம்பரப் படங்கள்னு சும்மா ரங்கராட்டினம் மாதிரி சுத்திட்டிருக்கிற திவ்யாவை ரொம்ப நாளா ஃபாலோ செஞ்சு... ஒரு வழியா புடிச்சுட்டேன்!

''என்ன ரீட்டா, இப்படி மூச்சு வாங்குது?''

''இவ்ளோ நாளா ஃபாலோ பண்றனே, அதான். அப்புறம் லைஃப் எப்படிப் போகுது?''

''பிரமாதமா ரீட்டா! நான் படிச்சு வளர்ந்தது எல்லாம் ஆந்திரா. இப்போ சென்னையில ஐ.டி கம்பெனியில வேலை பார்க்கிறேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், 'நீ மாடலிங் பண்ணலாமே!’ ஏத்திவிட, எனக்கும் ஆசை வந்துடுச்சு. ஒரு மாடல் கோ-ஆர்டினேட்டர்கிட்ட என்னோட போட்டோவை கொடுத்து வெச்சேன். முதல்ல போத்தீஸ் விளம்பரத்துக்குக் கூப்பிட்டாங்க. அப்படியே லலிதா ஜுவல்லரி, ஜுவல் ஒன்... இப்படி புடவை, நகை கடைகள்னு மாறி மாறி நிறைய விளம்பரங்கள் நடிச்சுட்டிருக்கேன். அடுத்ததா, 'சரவணன் மீனாட்சி’ சீரியல் வாய்ப்பு வந்துச்சு. நல்ல ரீச். இன்னொரு விஷயம், ஒரு தமிழ்ப் படம், தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். இப்போ விக்ரம் சார் ஹீரோவா நடிக்கிற படத்துல நடிச்சிட்டிருக்கேன்!''

- ஏக் தம்ல பேசி முடிச்ச திவ்யாகிட்ட,

''வேலைக்கும் போயிட்டே மீடியாவுலயும் கலக்கிறயே, வீட்ல என்ன சொல்றாங்க?''

''அதையெல்லாம் நான் தெளிவா பேலன்ஸ் பண்ணிக்கிறதால, நோ பிராப்ளம். அப்புறம்... எங்க வீட்டுல இப்போ ரெண்டு பேரு நடிக்கிறோமே''னு சொன்னதும் ஆர்வமாகி, 'யாரு, உங்க தங்கச்சியா?’னு கேட்டேன்.

''எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு ரீட்டா. நான் நடிக்கிறதா சொன்னது, எங்கம்மாவை. நான் நடிச்ச தெலுங்குப் படத்துல எனக்கு அம்மாவா, நடிச்சிருக்காங்க. இப்போ வெளிவந்த 'திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்துலயும், ஷங்கர் சாரோட 'ஐ’ படத்துலயும், விக்ரமன் சாரோட படத்துலயும் நடிச்சிட்டிருக்காங்க...''

அட, வாரிசு நடிகை!

கேபிள் கலாட்டா!

லவ் குரு!

ராஜ் மியூசிக் சேனலின் செல்லப் பொண்ணு ஜீவிதா, இப்ப லவ்வர்ஸுக்கும் செல்லப் பொண்ணு ஆயிட்டாங்களாம். விஷயம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கேனு ஷூட்டிங் ஸ்பாட்ல ஜீவிதாவுக்கு சல்யூட் வெச்சு மேட்டரை கறக்க ஆரம்பிச்சேன்.

''ஜீவி, லவ் குருவா ஆயிட்ட போல?''

''நீ வேற ரீட்டா! இதை பெருசா கிளப்பிவிட்டுடாதே. ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு ஆசைப்பட்ட பொண்ணை, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க வெச்சுட்டாங்க. அட்லீஸ்ட் காம்பியர் ஆனாலாவது விதவிதமா டிரெஸ் பண்ணலாம்னு டி.வி பக்கம் வந்தேன். ராஜ் டி.வி ஆடிஷன்ல ஸ்பாட் செலக்ட் ஆன சந்தோஷம் அடங்கறதுக்குள்ள, 'மீடியா பார்ட் டைம்தான். ஃபுல் டைம் கிடையாது’னு வீட்டுல ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டாங்க. ஒரு பக்கம் காம்பியரிங், ஒரு பக்கம் கம்ப்யூட் டர் சயின்ஸ்னு மாறிமாறி உழைச்சு, போன மாசம்தான் படிப்பை முடிச்சு, நல்ல வேலையிலயும் சேர்ந்துட்டேன். இன்னொரு பக்கம் காம்பியரிங்கும் தொடரும்''னு கதை சொன்ன ஜீவிதாகிட்ட,

''அதெல்லாம் சரிதான், நான் கேட்ட லவ் குரு மேட்டர்?''

''அதானே பார்த்தேன்... வந்த வேலை முடியாம இடத்தை காலி பண்ண மாட்டியே! ராஜ் மியூசிக்ல 'என் மனமே’ நிகழ்ச்சி, காதலர்களுக்கான ஸ்பெஷல் ஷோ. லவ்வர்ஸ் கால் பண்ணி அவங்க எப்படி லவ் பிரபோஸ் பண்ணினாங்க என்பதில் ஆரம்பிச்சு எல்லா விஷயங்களையும் பகிர்ந்துப்பாங்க. ஒரு ஷோல, 'நீங்கதான் என்னோட குலவிளக்கு, உங்க நிகழ்ச்சியாலதான் எனக்கு கேர்ள் ஃப்ரெண்டு கிடைச்சுருக்கா’னு ஆரம்பிச்சு எனக்கு தீபாராதனை காட்டாத குறையா ஒருத்தர் பேச, அதிலிருந்து என் நட்பு வட்டார பயபுள்ளைங்க, 'அட அட... என்ன ஒரு சேவை!’னு கலாய்ச்சு, 'லவ் குரு’னு பெட் நேம் வெச்சுட்டாங்க. இதுதான் விஷயம். வேலை முடிஞ்சதா... இடத்தைக் காலி பண்ணு''னு செல்லமா அதட்டினாங்க ஜீவிதா.

சேவை தொடரட்டும் குரு!

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

 150

பயனற்ற... பயனுள்ள நிகழ்ச்சி!

''ஜீ தமிழ் டி.வி-யில் காலை 5 மணிக்கு சர்ச்சை நாயகன் பாபா ராம்தேவ் யோகா சொல்கிறார். நிகழ்ச்சி முழுவதும் ஹிந்தியிலேயே இருக்கிறது. அதை தமிழில் 'டப்’ செய்தால் என்ன? எத்தனை பேருக்கு ஹிந்தி தெரியும்? குறைந்தபட்சம் தமிழில் விளக்கத்தையாவது எழுத்துக்களாக வெளியிடலாமே. மொழிப் பிரச்னையால் ஒரு பயனுள்ள நிகழ்ச்சி, பயனற்றுப்போகிறது. டி.வி. நிர்வாகம் சிந்திக்க வேண்டும்'' என ஆதங்கப்படுகிறார் திருச்சி அரவக்குறிச்சிப்பட்டியில் இருந்து அமுதா அசோக்ராஜா.

மனதை உருக்கிய வாலி!

''பொதிகை தொலைக்காட்சியில் 'வாலிப வாலி’ எனும் நிகழ்ச்சி பார்த்தேன்... அருமையாக இருந்தது. 'எம்.எஸ்.விஸ்வநாதனை சந்திக்கும் வரை சாப்பிட சாப்பாடு இல்லை. அவரை சந்தித்தபிறகு சாப்பிட நேரமில்லை’ என்று வாலி கூறியது, மனதை உருக்கியது. பல பழைய திரைப்படப் பாடல்களின் வைர வரிகளை அவர் சரளமாகக் கூறியது மனதுக்கு இதமாக இருந்தது. என்றும் அவர் நினைவு நம் மனதில் பசுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொதிகை தொலைக்காட்சிக்குப் பாராட்டுகள்'' என்று மனதார வாழ்த்துகிறார் கிருஷ்ணகிரியில் இருந்து வி.கலைச்செல்வி.

உயிருடன் விளையாடுவதா?

''ஞாயிறுதோறும் சன் டி.வி-யில் பகல் 12 மணிக்கு 'தில்...தில்...தில்...’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்கேற்பவர்களுக்கு மிக ஆபத்தான போட்டிகள் வைக்கின்றனர். இதைப் பார்க்கும்போது நமக்கு நெஞ்சு பதைபதைக்கிறது. 'கரணம் தப்பினால் மரணம்’ என்பதுபோல் உள்ளது. உயிருடன் விளையாடும் இதுபோன்ற நிகழ்ச்சியெல்லாம் தேவைதானா?'' என்று கேள்விக்கணை தொடுக்கிறார் சென்னை போரூரில் இருந்து கே.சௌம்யா.