மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

லேடி அம்பி! ரிமோட் ரீட்டா

ளவேனில்... பேரே கவிதை மாதிரி இருக்கே, ஆளு எப்படினு போய் பார்த்தா, நிஜமாவே கவிதை எழுதுவாராம், ராஜ் டி.வி-யில வர்ற 'சொல்லத்தான் நினைக் கிறேன்’ நிகழ்ச்சி தொகுப்பாளர் இளவேனில்.

''என்ன இளா, நிகழ்ச்சியில எல்லாருக்கும் கருத்து சொல்லிட்டு, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா சிச்சுவேஷன் சாங் போடுறீங்க போல!''

''ஆமா ரீட்டா, காதலர்கள், தம்பதிகள்னு பலரும் தங்கள் உறவில் உள்ள பிரச்னைகளை என்னை நம்பி பகிரும்போது, அவங்க மேல அக்கறை எடுத்து கருத்து சொல்றது என்னோட பொறுப்பு. அதை எடுத்துக்கிறதும், எடுத்துக்காததும் அவங்க கையில. ஒரு முறை ஒரு காலர், 'என்னோட கணவர் தவறிட்டார், குழந்தைங்கள வெச்சுட்டு இந்த சமுதாயத்துல வாழறது ரொம்ப கஷ்டமா இருக்கு’னு வருத்தப்பட்டாங்க. அவங்களுக்கு கருத்து சொன்னதோட, என் நண்பர்களோட சேர்ந்து முடிஞ்ச ஒரு தொகையைக் கொடுத்தோம்.''

கேபிள் கலாட்டா!

''சூப்பர் ஜி! எல்லாரும் மீடியா பக்கம் வந்து, அடுத்து சினிமா அப்படி இப்படினு கலர்ஃபுல் கனவுகளோட இருப்பாங்க. நீங்க வித்தியாசமா சர்வீஸ் எல்லாம் பண்றீங்களே?''

''முதல்ல ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பான கோவை சரளாவின் 'சபாஷ் மீரா’ சீரியல்ல நடிச்சுட்டு இருந்தேன். அப்புறம் ராஜ் டி.வி. உண்மைய சொன்னா, நான் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவா வேலை பார்த்துட்டு இருந்தேன். அதை விட்டுட்டு நடிக்க வந்ததே, ஒரு அரசியல்வாதியாகத்தான். அதான் இப்பவே சமூக சேவை எல்லாம்.

சொந்த ஊரு, காஞ்சிபுரம் பக்கமிருக்கிற வெடல் கிராமம். பரம்பரையா விவசாயக் குடும்பம். முதன்முதலா, வெளிவேலைனு கிளம்பினது எங்க அப்பாதான். அவர், பேங்க் மேனஜர். எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் தமிழ்ல அதிக ஈடுபாடு. அதனால என்னோட அண்ணனுக்கு இளந்திரை, அக்காவுக்கு கனிமொழி, எனக்கு இளவேனில், தங்கச்சிக்கு கார்முகில்னு பேர் வெச்சாங்க. நான் எங்க போனாலும் என்னோட பேர் எனக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திடும். நம்ம பேருக்கு நாமளே மரியாதை கொடுக்கலைனா எப்படி? அதான் ஏதோ என்னால முடிஞ்சது, என் நிகழ்ச்சியில முழுக்க தமிழ்லயே பேசுறேன்.''

''அரசியல்வாதி கனவுல இருக்கிற உங்களுக்கு ஒரு டெஸ்ட்... உங்களுக்குப் பிடிச்ச பெண்கள் பத்தி சொல்லுங்க?''

''ஜெயலலிதா மேடத்தோட தன்னம்பிக்கை, நதியா மேடத்தோட இளமை, நயன்தாரா மேடத்தோட துணிவு... இந்த மூணு பேரையும் ரொம்பப் பிடிக்கும்.''

அரசியல்வாதிக்கான அத்தனை தகுதியும் உள்ள தானைத் தலைவா வாழ்க வாழ்க! வருங்கால... யப்பா... எனக்கெதுக்கு வம்பு... வுடு ஜூட்!

சன் மியூசிக்ல கலக்கிட்டு இருந்த பூஜா பாப்பாவைக் காணோமேனு வலைவீசித் தேடிப் பார்த்தா, மேடம் இப்போ ஜெயா டி.வி, 'சித்திரம் பேசுதடி’ ஷூட்டிங்ல பிஸி!

''என்னம்மா காம்பியரிங்ல இருந்து புரமோஷன் வாங்கிட்டு நடிக்கப் போயாச்சு போல!''

''ஆமா ரீட்டா! மல்டி மீடியா படிக்க கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டிருந்த இந்த கரூர் பொண்ணை, லோக்கல் கேபிள் சேனல்ல காம்பியரிங் செய்யக் கூப்பிட்டாங்க. வீட்லயும் க்ரீன் சிக்னல் காட்டினதால ஸ்கூல் முடிச்சதும் நேரா டி.வி-க்கு வந்தாச்சு. ஸ்கூல்ல எதிர்கால இலக்கு பத்தி டீச்சர் கேட்குறப்பல் லாம் டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ்னு பலரும் சொல்வாங்க. நான் மட்டும் மீடியானு சொல்வேன். சமீபத்தில் என் டீச்சரைப் பார்த்தப்போ, 'பூஜா, நீ மட்டும்தான் சொன்ன மாதிரி மீடியால இருக்கே. உன் செட்ல மத்த யாரும் அவங்க சொன்னதைச் செய்யலை!’னு சிரிச்சாங்க.

கேபிள் கலாட்டா!

500 பேர் கலந்துகிட்ட சன் டி.வி ஆடிஷன்ல, நான் ஒருத்தி மட்டும்தான் தேர்வானேன். அப்புறம் திருச்செல்வம் சார் கூப்பிட்டு, 'சித்திரம் பேசுதடி’ வாய்ப்பு தந்தார். ஒண்ணு தெரியுமா... கேமராவுக்கு வெளியில சுத்தமா மேக்கப் இல்லாமதான் இருப்பேன். என் ஹேண்ட் பேக்ல சீப்பு கூட இருக்காது. மீடியாவுக்கு வந்து ரெண்டு மாசம் கழிச்சுதான் முதல் முறையா ஐபுரோஸ் ஷேப் பண்ணினேன். அதுக்கு முன்ன எண்ணெய் வெச்சு வாரின தலை, சுடிதார், நெத்தியில திருநீறுனு லேடி அம்பியாதான் இருந்தேன். ஆனா, இப்போ பேருக்கு கூட ஒரு சுடிதார் எங்கிட்ட இல்ல. என் தங்கச்சியோட சுடிதார் ஒண்ணை அவகிட்ட கேட்டு எடுத்துட்டு வந்துட்டேன். மனசு ஒரு மாதிரி இருந்தா, அதை எடுத்து போட்டுட்டு, தலை பின்னி பூ வெச்சு, கோயிலுக்குப் போவேன். என் ஹாஸ்டல்மேட்ஸ் எல்லாம், 'பூஜாவா இது!’னு சிரிப்பாங்க.''

''ஒரே ஃபீலிங்ஸ் மழை. அதெல்லாம் இருக்கட்டும்... 'சித்திரம் பேசுதடி’ சீரியல்ல உங்க லவ்வர், வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், விடாம அவரை கல்யாணம் பண்ணிக்கிறீங்களே?''

''அதை, டைரக்டர்கிட்டதான் கேட்கணும்.''

''அப்போ ரியல் லைஃப்ல எப்படிப்பட்ட பார்ட்னரை எதிர்பார்க்கிறீங்க சொல்லுங்க.''

''நோட் பண்ணிக்கோ. ஓவல் ஷேப் முகம், கூர்மையான மூக்கு, 5.10 - 5.11 இன்ச் உயரம், என்னைவிட கொஞ்சம் கலர் கம்மியா இருக் கணும் (உஷார் பொண்ணு). காரோ, பைக்கோ எதுவானாலும் ரொம்ப சேஃபா ஓட்டணும். அவர் பேசுற ஒரு வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கணும். அவருக்கு நான் அடங்கிப் போகணும். அப்படினா... அவரு அந்தளவுக்கு பர்ஃபெக்ட்டா இருக்கணும்.''

''இந்த கண்டிஷன்களைப் படிச்சுட்டு பசங்க எல்லாம் அலறி அடிச்சி ஓடிருவாங்களே...''

''நோ பிராப்ளம். எனக்குதான் ஏற்கனவே அப்படி ஒருத்தரைப் பார்த்தாச்சே..!''

''என்னது..?!''

''அவரும் மீடியாதான். வீட்ல பேசியாச்சு. ரெண்டு பேரும் தீவிரமா லவ் பண்ணிட்டிருக் கோம். கூடிய சீக்கிரம்...''

டும் டும் டும்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

 150

அநாகரிகத்தை முன்மொழியாதீர்கள்!

''முதுகையும், வயிற்றையும் காட்டும் வெங்காயச் சருகு சேலை கட்டிய மனைவி 'எப்படியிருக்கு..?’ என்று கேட்க, 'ஆபீஸ் பார்ட்டிக்கு அபத்தம்’ என்று கணவர் முணுமுணுக் கிறார். 'அவன் கிடக்கிறான்... அப்பா மாதிரியே பழமைவாதி. நீ இப்பத்தான் 'ஹாட்’டா இருக்கே!’ என்று பாராட்டுகிறார் மாமியார். தவிர்க்க வேண்டிய விஷயத்தை ஒரு மூதாட்டியே  அங்கீகரிப்பதாக தொலைக்காட்சியில் இடம்பெற்ற அந்த (பீட்ஸா) விளம்பரத்தில் காட்டப்படுவது.... அநாகரிகத்தை, நாகரிகமாக முன்மொழிவதுபோல் உள்ளது. பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன... அவற்றையெல்லாம் விளம்பரங்கள் கற்றுத்தரலாமே!'' என்று ஆதங்கப்படுகிறார் சென்னை, கே.கே.நகரில் இருந்து மல்லிகா அன்பழகன்.

உடனடி தேவை... உத்வேகம்!

''சுதந்திர தினத்தின்போது கலைஞர் தொலைக்காட்சியில் லியோனி தலைமையிலான பட்டிமன்றம் பார்த்தேன். 'கொஞ்சம் படித்தவர்கள் வேலைக்காக ஊரை விட்டே வெளியேறுகின்றனர். அதிகம் படித்தவர்கள் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர்’ என்று அங்கே பேசப்பட்டது என் மனதை சுட்டது. அதிக ஊதியத்துக்காக ஊரை விட்டும், நாட்டை விட்டும் வெளியேறுபவர்கள்... 'நம் ஊரும், நாடும் உயர வேண்டும்’ என்று உத்வேகம் கொண்டால், அப்துல்கலாம் சொன்னது போல, நம் நாடு வல்லரசாகும்'' என்று பொது நல வேண்டுகோள் விடுக்கிறார் தஞ்சை, காகிதப்பட்டறையில் இருந்து கலா.

மலைக்கவைத்த மனிதநேயம்!

விஜய் டி.வி-யின் 'நீயா... நானா?’ நிகழ்ச்சியில் 17.8.14 அன்று ஒளிபரப்பப்பட்ட  பகுதி காண்பவர்களை உருகவைத்ததது. அதில், மருத்துவக் கண்காணிப்பின் குறைவால் பார்வை இழந்த குழந்தையின் தாய் நடந்தவற்றைக்கூறி, தன் குழந்தைக்கு ஒரு கண்ணிலாவது பார்வை கிடைக்க வழிசெய்யும்படி கேட்டுக்கொண்டார். அப்போது டாக்டர் ராஜ்குமார், குழந்தைக்கு கண் பார்வையை வரவழைக்க முடியுமா என்று முயன்று பார்ப்பதாக  சொன்னார். இது தவிர அதற்கான மருத்துவச் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தன்னால் ஆன உதவிகளை செய்வதாகவும் வாக்கு கொடுத்தார். இதுதவிர இன்னும் சில மருத்துவர்களும் உதவி செய்வதாகக் கூறியுள்ளனர். இதுவல்லவோ மனிதநேயம்!'' என்று நெகிழ்கிறார் சென்னை, ஆலந்தூரில் இருந்து பிரேமலா ஸ்டீபன்.