மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

முனீஸ்ராஜும்... முனீஸ்காந்தும்!ரிமோட் ரீட்டா

புதுயுகம் தொலைக்காட்சியில ஒரு வித்தியாசமான சீரியல்... அதுவும் சிம்ரன் சீரியல். இதோட ஸ்பெஷல்..? கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்காவுல செட்டிலாகிற பொண்ணுங்க பலரோட சோகத்தைப் பிரதிபலிக்கிறதுதான். ’அசோகவனம்’ங்கிற. அழகான டைட்டிலோட திங்கள் முதல் வெள்ளி வரை டெய்லி எட்டு மணிக்கு ஒளிபரப்பாகற இந்த சீரியலோட இன்னொரு ஸ்பெஷல்... அமெரிக்காவிலிருக்கும் நியூயார்க், நியூஜெர்ஸி, புரூக்ளின்னு நேரடியா போய் படம் பிடிச்சிருக்கிறதுதான்!

வொயிட் ஹவுஸ்ல ஒங்க சீரியல பாக்கறாங்களா?

கேபிள் கலாட்டா!

பெப்பர்ஸ் டி.வியில ’ரிதம்'னு ஒரு நிகழ்ச்சி. நீங்க நெனக்கறது ரொம்ப கரெக்ட்... இது ஒரு இசை நிகழ்ச்சியேதான். இந்தக் காலத்து காலேஜ் பசங்க எல்லாம் ஆளாளுக்கு மியூசிக் பேண்டு வெச்சிக்கிட்டு சும்மா கலக்கிட்டிருக்காங்க. இந்த மாதிரி மியூசிக் ட்ரூப்களோட திறமைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டும் விதத்துல மட்டுமில்லாம, பிரகாசமான எதிர்காலத்தையும் கண்ணுல காட்டுறாங்க. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி 10.30 மணிக்கு ஒளிபரப்புறாங்க. சும்மா சூப்பரா இருக்கு பாத்து என்ஜாய் பண்ணுங்க!

டண்டனக்கா... டணக்குனக்கா!

'வெள்ளித்திரை’ நடிகை நளினி மேடம், சின்னத்திரைக்கு வந்ததே பெரிய அலப்பறைதான். இங்கே காமெடி ரோல், வில்லி ரோல்னு கலக்கிட்டிருக்காங்க. கேமராவுக்கு முன்னதான்னு இல்லாம, சின்னத்திரையுலகத்தை நிஜமாவே கலக்கிட்டிருக்காங்க மேடம்ங்கிறதுதான் விசேஷமே! அட ஆமாங்க, சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்ல போட்டியிட்டு, தலைவி ஆகிட்டாங்க தெரியும்ல!

வாழ்த்துகள் மேடம்!

கேபிள் கலாட்டா!

ன் டி.வி ’நாதஸ்வரம்’ சீரியல் பாக்கும்போதெல்லாம், காமெடியில கலக்கும் சம்பந்தம் கேரக்டரை, எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கேனு தோணிட்டே இருக்குதானே!

”விருமாண்டி படம் பாத்திருந்தா... இப்படித்தான் தோணும். என்னோட அண்ணன் ஷண்முகப் பாண்டிதான், அந்தப் படத்துல வர்ற போலீஸ்கார பேய்க்காமன். என்னோட ஒரிஜினல் பேரு முனீஸ்ராஜ்.''

''அப்ப ’முண்டாசுப்பட்டி’ படத்துல வர்ற முனீஸ்காந்த் உங்க தம்பியா?''

”இந்த லந்துதானே வேணாம்ங்கிறது! எனக்கு சொந்த ஊரு ராமநாதபுரம். படிச்சு வளர்ந்ததெல்லாம் மதுரை. எம்.பி.ஏ புரொடக்‌ஷன்  இன்ஜினீயரிங் முடிச்ச நான், இப்போ பிஹெச்.டி பண்ணிட்டிருக்கேன். காலேஜ்ல இருந்தே ஸ்டேஜ் டிராமா பண்ணுவேன். பேப்பர்ல வந்த விளம்பரத்த பார்த்து, சீரியல் காமெடி ஆக்டர் ஆடிஷனுக்கு போனேன். செலக்ட் ஆயிட்டேன்.

பழனிக்கு பாத யாத்திரை போற ஆள் நான். பாத யாத்திரையை முடிக்கிற நேரத்துல, அதாவது கோயில நெருங்கிற சமயத்துல எல்லாரோட நடை ஸ்டைல் தாறுமாறா மாறிடும். ஒரு மாதிரி டயர்டாகி பெண்டு போட்டு நடப்பாங்க. அதை அப்படியே டைரக்டர்கிட்ட இமிடேட் பண்ணிக் காட்டினதும், 'இதுதான் இனி உன் பாடி லேங்குவேஜ்’னு ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. இப்ப ஊரே என் நடையைப் பார்த்து லந்து கட்டுது'' என்று சொல்லும் முனீஸ்ராஜ், சினிமாவிலும் நடிக்கிறார். 'இந்தியா  பாகிஸ்தான்’ படத்தில் காமெடியன் ரோல் கிடைத்திருக்கிறதாம்!

ஆல் தி பெஸ்ட் முனீஸ்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ150

தார்மீகக் கடமை!

''கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி பார்த்தேன். அதில், நடுவர்களில் ஒருவரான இயக்குநர் வஸந்த் பேசுகையில், 'திரைப்படங்களில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதாக காட்டப்படும் பெண், தற்கொலையை நாடுவது போல சித்திரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. பாலியல் பலாத்காரம் என்பது ஒரு விபத்து மட்டுமே. அதற்குப் பின் அவள் வாழவே லாயக்கில்லாதவள் என்று காட்சியமைப்பது, ஆணாதிக்க மனப்பான்மையின் உச்சகட்டம். இது போன்ற காட்சிகளை, இனி யாரும் எடுக்க வேண்டாம். சமூகத்துக்கு நல்லதை எடுத்துச் சொல்வது இயக்குநர்களின் தார்மீகக் கடமை’ என்றார். அவரின் சமூகப் பொறுப்பு உணர்வுக்கு ஒரு ராயல் சல்யூட் போடலாம்' என்று மெய்சிலிர்க்கிறார் ஈரோட்டில் இருந்து எஸ்.விஜயலஷ்மி.

என்னுடைய ரத்தம்!

''சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று, சாலமன் பாப்பையா தலைமையில் 'காந்தியின் வழியில் வெற்றி பெறமுடியுமா... முடியாதா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

'போராட்டத்தில் சிந்துவது எதிரியின் ரத்தமாக இருக்கக் கூடாது... என்னுடைய ரத்தமாக இருக்க வேண்டும்’ என காந்தி சொன்ன கருத்தை, மேடையில் ராஜா சொன்னதைக் கேட்டதும் மகாத்மாவை நினைத்து வியந்துபோனேன்'' என்று உணர்ச்சித் ததும்புகிறார், தஞ்சாவூர், காகிதப்பட்டறையில் இருந்து கலா.

பெண்ணினத்துக்கு மகுடம்!

''ஜீ தமிழ் டி.வியில் ஞாயிறு இரவு வரும் 'நில் கவனி சொல்’ நன்றாக இருக்கிறது. காம்பியர் சகா, பந்தா இல்லாமல் பேசுவது யதார்த்தமாக உள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில், 'ஜான்சி ராணிக்கு முன்பே, தமிழகத்தில் வேலு நாச்சியார் என்ற பெண், தனது 16 வயதிலேயே அனைத்துத் திறமைகளையும் பெற்றுத் திகழ்ந்தார்’ என்று, தமிழ்ப் பெண் பற்றி பேசியது, பெண்ணினத்துக்கு மகுடம் சூட்டும் புதிய தகவலாக இருந்தது. இதுபோன்ற பயனுள்ள தகவல்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை' என்று கோரிக்கை வைக்கிறார் திருநெல்வேலியில் இருந்து ஆர்.ஜெயலட்சுமி.