Published:Updated:

Women, Work, Spaces: பெண் சமத்துவத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் நாடகம்!

நாடகம்
News
நாடகம்

The Mobile Girls Kootam என்ற அமைப்பினர் பணியிடங்கள், பொது இடங்களில் பெண்களின் வாழ்க்கை நிலையை சித்தரிக்கும் விதமாக, நாடகம் ஒன்றை சென்னை பெசன்ட் நகரில் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Published:Updated:

Women, Work, Spaces: பெண் சமத்துவத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் நாடகம்!

The Mobile Girls Kootam என்ற அமைப்பினர் பணியிடங்கள், பொது இடங்களில் பெண்களின் வாழ்க்கை நிலையை சித்தரிக்கும் விதமாக, நாடகம் ஒன்றை சென்னை பெசன்ட் நகரில் ஒருங்கிணைத்து நடத்தினர்.

நாடகம்
News
நாடகம்

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆயிரமாயிரம் கற்பிதங்கள் இந்தச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளன. பகுத்தறிவுடன் சிந்தித்துப் பார்த்தால், அவற்றில் எவ்வித அறிவியல்தன்மையும் நியாயங்களும் இல்லை என்பது விளங்கும். இத்தனை கற்பிதங்களுக்கு மத்தியில் ஒரு பெண் படித்து வேலைக்குச் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பல கதைகள் ஒளிந்திருக்கின்றன. அக்காவாகவும் அம்மாவாகவும் துணைவியாகவும் தங்கையாகவும் மட்டுமே இந்தச் சமூகத்தால் வளர்த்தெடுக்கப்படும் பெண்கள், அவர்களின் திறமையாலும் தனித்துவத்தாலும் பெரும்பாலான இடங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை.

ஒரு பெண்ணின் உடல் குறித்து ஆயிரம் கட்டுப்பாடுகள் போடும் சமூகம், அவளின் மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளவோ மதிக்கவோ செய்வதில்லை. பெண் மீதான கற்பிதங்களும் கட்டுப்பாடுகளும் உழைப்புச் சுரண்டல்களும் காலம் காலமாகத் தொடர்கின்றன. பெண் விடுதலைக்கான குரலும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. போராட்டங்கள், பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், ஊடகங்கள் வாயிலாக தொடர்ச்சியாக பெண் விடுதலைக்காக விதைத்துக் கொண்டே இருப்பதால், இன்று பெண் ஆளுமைகள் வெளிவருவதையும், பெண்கள் ஓரளவு முன்னேற்றம் அடைவதையும் பார்க்க முடிகிறது. ஆனால் இது போதுமானதல்ல, இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.

The mobile girls kootam நாடகம்
The mobile girls kootam நாடகம்

பெண் விடுதலை குறித்த சிந்தனைகளை, கலை வடிவில் மக்களிடம் கொண்டு செல்வது என்பது அந்த நோக்கத்திற்கு கூடுதல் வலுவைச் சேர்க்கும். அவ்வகையில், The mobile girls kootam என்ற அமைப்பினர் பணியிடங்கள், பொது இடங்களில் பெண்களின் வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கும் விதமாக, நாடகம் ஒன்றை சென்னை பெசன்ட் நகரில் ஒருங்கிணைத்து நடத்தினர்.

Women, Work, Spaces என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகம், நோக்கியா மொபைல்போன் தொழிற்சாலையில் வேலை பார்த்த கிராமத்துப் பெண்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலை திடீரென்று மூடப்பட்டதால் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைகுலைவதை, நாடகம் தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. அழுதுவடியும் கதைகளாக இல்லாமல், அனைவரையும் சிந்திக்க வைக்கும் கேள்விகளை எழுப்புவதாக நாடகம் அமைந்தது. டீக்கடை போன்ற பொது இடங்கள், ஆண்களை மையப்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியும், பெண்கள் உடல் மீதான சமூகப் பார்வையையும் சித்தரித்தது.

பெண்களுக்கு ஏற்படும் வலிகளை பொருட்படுத்தாத குடும்ப அமைப்புமுறை, பெண் முதன்முதலில் பருவமடையும் போது அவளை உட்கார வைத்து மஞ்சள் நீராட்டு விழா என்று கொண்டாடுகிறது. அடுத்தடுத்து வரும் மாதவிடாய் காலங்களில் எல்லாம், அவள் நவீன தீண்டாமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். பெண்ணுடைய அத்தியாவசிய பொருளான சானிட்டரி நாப்கின்களை இன்னமும் வெளியே தெரியாதபடி செய்தித்தாளில் சுருட்டிக் கொடுக்கும் கடை உரிமையாளர்கள் பலர், ஆணுறைகளை வெளிப்படையாக கொடுக்கத் தயங்குவதில்லை. இதுபோன்ற பிற்போக்குத்தனங்களை, நாடகம் வன்மையாக கண்டித்துள்ளது.

நாடகத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரமான கல்பனா, துணிச்சல் நிறைந்த பெண்ணாக, தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருந்தார். பெண்களின் அடிமைநிலைக்கான காரணங்களை கல்பனா விவரித்தார். அவலங்களால் கூனிக்குருகி புழு போல் வாழும் பெண்கள், எழுச்சியுற்ற புதியதொரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அந்தக் கதாபாத்திரம் அமைந்திருந்தது.

Women, Work, Spaces  நாடகம்
Women, Work, Spaces நாடகம்

லட்சுமி என்னும் கதாபாத்திரம், குடும்ப கலாசாரத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர். சமூகம், குடும்பம் விரும்பும் பெண்ணாக இருந்தாலும், பெண் மீதான ஆடை கட்டுப்பாடுகளும் கற்பிதங்களும் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தின. அபிநயா என்ற கதாபாத்திரம், `பெண்கள் கவிதைகள் எழுதியதை பெயர் குறிப்பிடாமல், ஔவை என்ற பெயராலும் பழைமையான பெண் கவிஞர்களை சமூகம் திட்டமிட்டு மறைக்கிறது’ என்று கூறி நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறார்.

நாடகம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தவில்லை; எந்தவித ஆடை அலங்காரங்கள் இல்லை. ஆனால் பெண்களின் வாழ்க்கையை யதார்த்த பாணியில் விளக்கியது, பாராட்டுக்குரியது. நாடகத்தை பார்க்கும்போது காரசாரமான விவாதங்களும் இயல்பான உணர்வுகளையும் தெளிவாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாக, பார்வையாளர்கள் அவர்கள் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை நாடகக்கலைஞர்கள் ஏற்படுத்தினர்.

நோக்கியா தொழிற்சாலை திடீரென மூடியதாக செய்தி வந்ததும், பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்ததை உணர்த்தியது. தொடரும் மொபைல்போன் அழைப்புகளுக்கு மத்தியில், அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருந்த பெண்கள், ஒரு டீக்கடை தொடங்கலாமா என்று பேசத் தொடங்குகின்றனர். அந்த டீக்கடைக்கான உரையாடலில் பிரியாணியும் பங்கேற்கிறது. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே பெண்களுக்கான டீக்கடையாக இருக்க வேண்டும். அங்கு பெண் தனக்கு பிடித்த உடையை அணியலாம்; அவள் விருப்பப்படி உட்காரலாம்; பல மணி நேரம் நண்பர்களுடன் கதையாடலாம்.

Women, Work, Spaces  நாடகம்
Women, Work, Spaces நாடகம்

டீக்கடையில், ஸ்பீக்கர் வைத்து சமூக கட்டமைப்பால் சிக்கித் தவிக்கும் பெண்களின் கதைகளை ஒளிபரப்பலாம் என்றெல்லாம் அவர்களின் சிந்தனை தொடர்கிறது. இறுதியில் பாலின சமத்துவம் வலியுறுத்தியும், எழுச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கோஷத்துடனும் நாடகம் நிறைவு பெறுகிறது.

பெண்களுக்கான சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்த, இதுபோன்ற நாடகங்கள் காலத்தின் தேவை.