சினிமா
Published:Updated:

ஆத்துப்பாக்கத்தின் - சுதந்திர தினம் ஆகஸ்ட் 20!

ஆத்துப்பாக்கத்தின் - சுதந்திர தினம் ஆகஸ்ட் 20!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆத்துப்பாக்கத்தின் - சுதந்திர தினம் ஆகஸ்ட் 20!

நூறு நாள் வேலை நடக்குது... ஒரு எட்டு அங்க போய் பார்த்துட்டு வந்திடறேன்” என்று விடைபெற்றார்.

தீண்டாமை ஒழியாமல் தேசம் சுதந்திரம் பெற்றதாய் அர்த்தமில்லை. அதை ஒரு சுதந்திர தினத்திலேயே இந்தத் தேசம் அழுத்தமாகத் தெரிந்துகொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஊராட்சித் தலைவரை, பட்டியல் இனத்தவர் என்பதற்காக அந்த இருக்கையில்கூட அமரவிடாமல்் துரத்தியிருக்கிறார்கள். தேசியக்கொடியேற்றும் அவரது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே ஒட்டுமொத்தமாகக் குழுமி அவருக்கான உரிமைகளை மீட்டுத்தர வேண்டிய நிலை.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இருக்கிறது ஆத்துப்பாக்கம் ஊராட்சி. ஜனநாயகத்துக்கே அவமானம் இழைக்கும் இந்த நிகழ்வு குறித்துக் கேள்விப்பட்டு, செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டு சிறைவைக்கப்பட, இந்த அவலம் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

நாங்கள் அந்தக் கிராமத்துக்குள் நுழைந்தபோது காலை 8 மணி. அரசு வாகனங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் அமிர்தத்தை மீண்டும் கொடியேற்றச் செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊருக்கு மையத்தில் இருக்கிற ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சித் தலைவரின் பெயரைக்கூட இதுவரை எழுதவில்லை. ஜனநாயகத்தின் நெஞ்சில் ஏறி சாதியம் அழுத்தியதற்கான அடையாளம் அது. இப்போதுதான் அவசர அவசரமாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆத்துப்பாக்கத்தின் - சுதந்திர தினம் ஆகஸ்ட் 20!

சரசரவென அரசு வாகனங்கள் அணிவகுத்து வந்து நிற்க, எந்த அலுவலகத்தில் அமர அனுமதி மறுக்கப்பட்டதோ, அந்த அலுவலகத்திற்குள் ஆட்சியர் மகேஸ்வரியைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்துச் சென்றார் ஊராட்சித் தலைவர் அமிர்தம். அவரை ஊராட்சித் தலைவர் இருக்கையில் அமரவைத்தார் ஆட்சியர். அமிர்தத்தின் கண்கள் கலங்கின. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடுங்கிய கரங்களால் தேசியக்கொடியை ஏற்றினார் அமிர்தம்.

கொடியேற்றிய பிறகு, தாம்பாளத்தில் சாக்லெட்டுகளை நிரப்பி, குழந்தையின் குதுகலத்தோடு ஒவ்வொருவரையும் தேடிச்சென்று வழங்கினார் அமிர்தம். கூட்டம் கலைய, சற்று ஆசுவாசமான அமிர்தத்திடம் பேசினேன்.

“மூணு வருசத்துக்கு முன்னால பஞ்சாயத்துத் தேர்தல் வரப்போகுதுன்னு சொன்னதுமே, எங்கூரு அய்யாமாருங்கல்லாம் நீங்கதான் தலைவருக்கு நிக்கணும்னு சொன்னாங்க. அப்போ எனக்கு எதிரா யாரும் நிக்கிறதா சொல்லலே. அதனால அன்னபோஸ்ட்டுல ஜெயிச்ச மாதிரிதான்னு இருந்தோம். ஆனா, தேர்தல் தள்ளிப்போயிடுச்சு. அப்படியிருந்தும் எல்லாப்பேரும் என்னை ‘தலைவரம்மா’ன்னுதான் கூப்பிடுவாங்க. இப்ப நடந்த உள்ளாட்சித் தேர்தல்ல, பழைய தலைவர் அரிதாசு, என்னை வரவிடக் கூடாதுன்னு நிறைய பிரச்னை பண்ணினார். ஆனா, எனக்காக ஊரே நின்னு ஓட்டு கேட்டுச்சு. நிறைய ஓட்டு வித்தியாசத்துல நான் ஜெயிச்சேன். ஆனா, எனக்காக நின்ன என் ஜனத்துக்கு எதையுமே செய்யவிடாம என்னை முடக்கிவெச்சிருந்தாக...” சொல்லும்போதே அமிர்தம் கலங்குகிறார்.

அமிர்தம்
அமிர்தம்


“முன்னாள் தலைவரும், அவரு கூட்டாளிங்களும் ‘உனக்குப் படிக்கத் தெரியாது, நாங்க சொன்னபடி கேளு’ன்னு நெருக்கடி கொடுத்தாங்க. எனக்குப் படிக்கத் தெரியாட்டி என்ன... அனுபவம் இருக்கு... யாருக்கு என்ன செய்யணும்ன்னு யோசனை இருக்கு... கணக்கு வழக்கு பாக்குறதுக்கு பட்டறிவு இருக்கு. அதிகாரிகளைப் பார்த்துப் பேசுறதுக்கு தைரியம் இருக்கு. ஆனா, என்னைச் செயல்பட விடலே. அலுவலகம் பக்கம்கூட வர விடலே. தொடர்ச்சியா என்னை அவமானப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. ‘குடியரசு நாள்... நீங்கதான்மா வந்து கொடியேத்தணும்னு’ ஸ்கூலில் இருந்து டீச்சரம்மா போன் பண்ணினாங்க. நானும் சரியான நேரத்துக்குப் போனேன். பழைய தலைவரு, வார்டு ஆளுங்க, துணைத் தலைவர், அவங்க வீட்டுக் காரர்ன்னு எல்லாரும் இருந்தாங்க. டீச்சரம்மா, ‘நீங்க வந்து கொடியேத்துங்க’ன்னு கைய பிடிச்சிக் கூப்பிட்டாங்க. கொடிக்கம்பத்துக்கிட்ட போனேன்... பழைய தலைவரு வேகமா வந்து என்னைத் தள்ளிவிட்டு, ‘சீ... கொடியேத்த உனக்கென்ன தகுதியிருக்கு... நீ என்ன சாதின்னு மறந்துட்டியா... தூ’னு துப்பிட்டு அவரே கொடியேத்திட்டாரு... என்னால எதுத்துப் பேச முடியலே... அவமானப் பட்டுத் திரும்பி வந்தேன். அன்னி லேருந்து ஒருவேளை சாப்பாடுகூட இறங்கலம்மா...” கண்கள் கசிகின்றன அமிர்த்ததுக்கு.

“அதுக்குப்பொறவும், என்னை ஆபீசுக்கு வர விடல. ரெண்டு முறை செக்குலவந்து கையெழுத்து மட்டும் வாங்கினாங்க. நூறு நாள் வேலைத்திட்டத்துல என்ன நடக்குதுன்னு கேட்டதுக்கும் பதில் இல்ல. நிறைய பேருக்கு சம்பளம் போடல. அதுக்கும் பதில் சொல்லல. சுதந்திர தினத்தன்னிக்கும் என்னைக் கொடியேத்த விடலை, ஏழு மாசத்துக்கு முன்னால அவமானப்பட்டிருந்தாலும் இப்பதான் விஷயம் வெளியே தெரிஞ்சது” என்கிறார் அமிர்தம்.

“அடுத்து என்னம்மா செய்யப்போறீங்க?” என்றேன்.

“இனி பயமில்லேம்மா... இன்னையோட எல்லாம் போயிருச்சு. இதோ இவ்வளவு அதிகாரிங்க, மனுஷ மக்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்? என்னை எதுக்காக மக்கள் தேர்ந்தெடுத்தாங்களோ அதைச் செய்வேன்” என்றவர். “பேசிக்கிட்டே இருந்தா வேல ஆவாதும்மா. நூறு நாள் வேலை நடக்குது... ஒரு எட்டு அங்க போய் பார்த்துட்டு வந்திடறேன்” என்று விடைபெற்றார்.

அமிர்தம்
அமிர்தம்

அமிர்தம் வந்ததும் 100 நாள் வேலை செய்த பெண்கள் எல்லாரும் சூழ்ந்துகொண்டு கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். சிரித்து க்கொண்டே வேலையின் தன்மையை ஆராயத் தொடங்குகிறார் அமிர்தம். அவரது சிரிப்பில் தென் படுகிறார்கள், ‘சுயராஜ் ஜியத்தைவிட சுயமரியாதை முக்கியம்’ என்ற தந்தை பெரியாரும் ‘அனைத்து மனிதர்களையும் மனிதர்களாக நடத்தக் கற்றுக்கொள்ளும் வரை தேசபக்தி என்பது சாத்தியமேயில்லை’ என்று சொன்ன டாக்டர் அம்பேத்கரும்.

கிளம்பும்போது பார்க்கிறேன். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ‘தலைவர் அமிர்தம்’ என்ற வார்த்தைகள் ஜொலிக்கின்றன. அது ஆகஸ்ட் 20. ஐந்து நாள்களுக்கு முன் அமிர்தத்துடன் சேர்ந்து அவமானத்துக்கு உள்ளாகித் தலைகுனிந்த தேசியக்கொடி இப்போது கம்பீரமாகப் பறந்து கையசைக்கிறது.