ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து, மத்திய அரசு சாதகமான கருத்தை தெரிவிக்க மறுத்து வருகிறது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பெண்கள் பிரிவான சம்வர்தினி நியாஸ், ஒரே பாலினத் திருமணம் குறித்து பல்வேறு துறைகளில் பணியாற்றும் டாக்டர்களிடம் கருத்து கேட்பு ஒன்றை நடத்தியது. இதில் ஹோமியோபதி டாக்டர்கள் உட்பட மொத்தம் 318 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

`இக்கருத்துக்கணிப்பில் டாக்டர்கள், ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகையான குறைபாடு என்று தெரிவித்துள்ளனர். 70% டாக்டர்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். அதோடு ஓரினச் சேர்க்கை மூலம் பாலியல் நோய்கள் பரவும் என்று 83% டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பாலின திருமணத்தை அங்கீகரித்தால் அவர்களை சமுதாயத்தில் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு பதில் சமுதாயத்தில் ஓரினச் சேர்க்கை அதிகரிக்கும். இது போன்ற ஓரினச் சேர்க்கை பழக்கமுள்ளவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பாலின திருமணத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்படும் முன்பு பொதுமக்களிடம் கருத்துக் கேட்கவேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஓரினச் சேர்க்கை பெற்றோர்களால் தங்களது குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது என்று 67% டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு 57% டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்’ என்று சம்வர்தினி நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.