ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே துவ்வாடா ரயில் நிலையத்தில், ரயிலின் அடியில் சிக்கிய இளம்பெண் ஒருவர், இரண்டு மணி நேர தீவிர முயற்சிக்குப் பின்னர் மீட்கப்பட்டார். எனினும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சசிகலா என்ற 20 வயதான கல்லூரி மாணவி, முதுகலை முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து வந்துள்ளார். இவர் டிசம்பர் 7-ம் தேதி புதன்கிழமையன்று கல்லூரி செல்வதற்காக குண்டூர் - ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். துவ்வாடா ரயில் நிலையத்தில் இருந்து இறங்கும்போது, கால் இடறியதில் ரயில்வே நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து, ரயிலின் அடியில் சிக்கிக்கொண்டார்.
இதைப் பார்த்தவர்கள் பதறினர். உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த ரயில் உடனே நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து, அந்த மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரம் போராடி, பிளாட்ஃபார்மை இடித்து, ரயிலின் இடையே சிக்கிக்கொண்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

ஆனால், இவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதோடு, சிறுநீர்ப்பையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுத்து வந்த நிலையில், டிசம்பர் 8-ம் தேதி வியாழன் அன்று உயிரிழந்தார். மாணவியின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.