ஓர் ஆணுக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கும், திருமணமாகி சில நாள்களில் மனைவி பிரிந்து போவதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஈக்கள்தான் காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா?
உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்டோய், அஹிரோரி தொகுதியில் உள்ள பதையன் பூர்வா (Badhaiyan Purwa) கிராமத்துக்கு திருமணமாகி வரும் மருமகள்கள், தங்களின் புகுந்த வீட்டை விட்டு, பிறந்த வீட்டுக்குப் பிரிந்து செல்கின்றனர். இதற்குக் காரணம் அங்குள்ள ஈக்களின் தொல்லைதான்.

சரி, ஈக்களை விரட்ட ஏதாவது செய்யலாமே என்று கேட்கலாம். எவ்வளவுதான் முயன்றாலும் ஈக்கள் மீண்டும் வந்து விடுகின்றனவாம். இதனால் சலிப்படைந்த பெண்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர்.
இதுபோல ஒன்று, இரண்டு பெண்கள் அல்ல, ஈக்களின் தொல்லையால் ஓராண்டுக்குள், சுமார் 6 பெண்கள் தங்களின் புகுந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். கணவர்கள் தங்களின் மனைவிகளை எவ்வளவு சமாதானப்படுத்தினாலும், வர மறுக்கின்றனர். `ஒன்று அந்தக் கிராமத்தை விட்டு வெளியே வாருங்கள்... இல்லையென்றால் என்னை மறந்துவிடுங்கள்' என்று அவர்களின் மனைவியர் கூறியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, பெண்களை இந்தக் கிராமத்தில் உள்ள ஆண்களுக்குத் திருமணம் செய்து தரவே பலரும் யோசிக் கின்றனர். ஈக்களின் தொல்லைக்குக் காரணம், 2014-ம் ஆண்டில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட கோழிப்பண்ணைதான் எனக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். படிப்படியாக அதிகரித்த ஈக்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது.

இதுகுறித்து கிராமத்தில் வசிக்கும் பிரதான் விகாஸ் குமார் கூறுகையில், ``ஈக்கள் அச்சுறுத்தக்கூடிய வகையில் மாறி, உறவுகளில் சண்டைகளை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு இங்கு திருமணம் செய்து வந்த மூன்று மணப்பெண்கள் அவர்களின் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்" என்றார்.
இக்கிராமத்தின் சமூக சுகாதார நிலைய கண்காணிப்பாளர் மனோஜ் குமார் கூறுகையில், ``பல முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு இயக்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் ஈக்கள் தொடர்பான நோய்கள் ஏதும் இதுவரை காணப்படவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈன்னு என்னை பார்த்தான், என்னை பூச்சியில சேர்த்தான். அங்க தானே அவன் தோத்தான்... குண்டு போடும் வண்டு நானு...ஈடா ஈடா ஈடா!