மற்ற எபிசோடுகள்
Published:Updated:

‘குருவி தலையில் பனங்காய்’ வைக்காதீர்கள்! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 6

பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...
பிரீமியம் ஸ்டோரி
News
பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்...

அவள் எப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறாளோ, அப்போதெல்லாம் அது குறித்து என்னிடம் நேரடியாகப் பேச மாட்டாள்.

"நாங்களும் உங்க வயசைத் தாண்டிதானே வந்திருக் கோம். நாங்கள்லாம் இப்படியா நடந்து கிட்டோம். அதென்னவோ இந்தக் காலத்து டீன்ஏஜ் பிள்ளைங்க ஏன்தான் இப்படி சோம்பேறிகளா, திமிர் பிடிச்சவங்களா, யாரையும் மதிக்காத வங்களா இருக்கீங்களோ தெரியலை...’’ டீன்ஏஜ் பிள்ளைகள் இருக்கும் அநேக வீடுகளில் இந்தப் புலம்பலைக் கேட்கலாம்.

‘`ஆமா... அந்தப் புலம்பல் உண்மைதானே... பிள்ளைங்க அப்படித்தானே இருக்காங்க...’’ என நீங்களும் வக்காலத்து வாங்கலாம்.

எதற்கெடுத்தாலும், ‘எங்க காலத்துல...’ என ஃப்ளாஷ்பேக் பேசும் நீங்கள், நிகழ்காலத்தில் உங்கள் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்னை களை, சவால்களை எப்போதாவது எட்டிப் பார்த்திருக்கிறீர்களா? அதன் விளைவாக அவர்கள் எதிர்கொள்ளும் ஸ்ட்ரெஸ்தான் அவர்களை அப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்பதை அறிவீர்களா?

‘குருவி தலையில் பனங்காய்’ வைக்காதீர்கள்! - பாய்ஸ்... கேர்ள்ஸ்... பேரன்ட்ஸ்... இனி இல்லை இடைவெளி! - 6

டாக்டர் ஷர்மிளா

பலரும் சந்திக்கிற பொதுவான சவால் ஒன்றைப் பார்ப்போம். இன்றைய டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு படிப்பில் எக்கச்சக்கமான அழுத்தம் இருக்கிறது. குறைவான அவகாசத்தில் பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டிய கமிட்மென்ட் இருக்கிறது. ஒரு பக்கம் பெற்றோரின் எதிர்பார்ப்பு, இன்னொரு பக்கம் ஆசிரியர்கள் தரும் அழுத்தம் என அந்தச் சுமை கிட்டத்தட்ட ‘குருவி தலையில் பனங்காய்’ வைப்பதற்கு இணையானது. பதின்ம வயதில் இருக்கும் பெரும்பாலான பிள்ளைகளின் நிலை இன்று இதுதான். அதையும் மீறி அவர்கள் தங்களால் இயன்றதை இயன்ற வழிகளில் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

1-2-3 என மூன்று பதின்ம வயதினரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். இவர்களில் நம்பர் 1-க்கு படிப்பில் உதவி தேவைப்படலாம். அதனால் அவர் தன் குடும்பத்தார் உதவியை நாடலாம். நம்பர் 2, படிப்பை சோர்வாகவும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வீடியோ கேம்ஸையும் நாடலாம். நம்பர் 3, முதல் இரண்டு நபர் களையும் போல இல்லாமல் தன் பிரச்னை என்ன எனப் பொறுமையாக யோசித்து, தானே அதற்கான தீர்வுகளைக் கண்டு பிடிப்பவராக இருக்கலாம்.

எனவே டீன்ஏஜில் இருக்கும் எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை... ஒரு விஷயத்தை ஒரே மாதிரி அணுகுவதில்லை. ஒருபக்கம் படிப்பு, இன்னொருபக்கம் தன் உடல் குறித்த இமேஜ் கவலை, நட்பு சிக்கல்கள் என அவர்களுக்கு அந்த வயதுக்கே உண்டான பல பிரச்னைகள் இருக்கக்கூடும் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப வயதுக்கு மாறும் அந்தத் தடுமாற்ற பயணத்தில் பெற்றோர்கள் அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும்.

இந்த விஷயத்தில் என் மகள் ஆஷ்லியையே உதாரணமாகச் சொல்கிறேன். அவள் எப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ்ஸாக உணர்கிறாளோ, அப்போதெல்லாம் அது குறித்து என்னிடம் நேரடியாகப் பேச மாட்டாள். ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தால் உடனே தூங்கிவிடுவாள். ஆரம்பத்தில் அவளது இந்தச் செய்கை என்னைக் கோபப்படுத்தியிருக்கிறது. அவளுக்கு ஏதோ மன வருத்தம் என தெரியும். ஆனால், தூக்கம் அதற்கான தீர்வல்ல என்பதை ஏன் உணர மறுக்கிறாள் என கோபப்பட்டிருக் கிறேன். அவளுக்கும் அது புரிந்திருக்கிறது என பிறகுதான் தெரிந்துகொண்டேன். ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடுபட அதுதான் அவளது டெக்னிக் என்பது புரிந்தபோது, அவளுக்கான இடைவெளியைக் கொடுத்து அவள் போக்கில் ஸ்ட்ரெஸ்ஸை கையாள அனுமதித்தேன்.

தூங்கி எழுந்ததும் பிரச்னையின் தீவிரம் குறைந்த நிலையில் அவளே என்னிடம் வந்து பேசுவாள். அந்த அணுகுமுறை உண்மையில் சிறப்பாகவும் இருந்தது. இருவரும் அமைதியான மனநிலையில் நிகழ்த்திய அத்தகைய உரையாடல்கள் எப்போதும் சுமுகமாகவே முடிந்திருக் கின்றன.

உங்களுக்கும் டீன்ஏஜில் பிள்ளைகள் இருந்தால்... ‘டீன் ஏஜர்னாலே இப்படித் தானே இருப்பாங்க...’ உங்கள் டீன்ஏஜ் மகள் அல்லது மகளை இந்தக் கோணத்தில் பார்க்காதீர்கள்.

அந்த வயதில் அவர்களுக்குண்டான பிரச்னைகள் இருக்கும் என உணர்ந்து அவற்றை அவர்கள் விரும்பும் வழியில் அணுக அனுமதியுங்கள்.

உங்கள் டீன்ஏஜ் மகள், மகனின் தனிப்பட்ட பிரச்னைகளை பொதுப் பிரச்னைகளாக நினைக்காமல், அவற்றுக்குத் தீர்வு காண உதவுங்கள். உங்கள் டீன்ஏஜ் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான, பாசிட்டிவ் வான உரையாடல்களைத் தொடருங்கள்.

டீன்ஏஜில் உங்கள் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பெற்றோராக உங்களுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். அந்த வயதில் பிள்ளைகளுக்கு அவை பெரிய பிரச்னைகளே. எனவே, அவர்கள் இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கப் பழகினால் பிள்ளைகளுக்கு உங்கள்மீது நம்பிக்கை கூடும்... எதையும் மனம்விட்டுப் பேசுவார்கள்.

ஆஷ்லி - டாக்டர் ஷர்மிளா
ஆஷ்லி - டாக்டர் ஷர்மிளா

ஆஷ்லி

‘`இன்னும் கொஞ்ச நாள்ல ஆஷ்லி டீன்ஏஜ்ல அடியெடுத்து வைக்கிறா...’’ - நான் 13 வயதை நெருங்கிக்கொண்டிருந்தபோது அம்மா யாரிடமாவது இப்படிச் சொன்னால், உடனே அவர்களில் பலரின் முகங்களும் மாறுவதை கவனித்திருக்கிறேன். ‘`குழந்தைங்களா இருக்கிறவரை நல்லாத்தான் இருக்கீங்க... டீன்ஏஜை தொட்டதும் அம்மா, அப்பா பேச்சைக் கேட்கறதில்லை... பெத்தவங்களுக்கே வில்லன்களாயிடறீங்க..’’ என்று கமென்ட் அடித்தார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

உங்கள் மகளோ, மகனோ இதுபோன்ற வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் ‘ஒருவேளை டீன்ஏஜ்ல அப்படித்தான் இருக்கணும்போல’ என்ற எண்ணம் அவர்களுக்குள் வராதா... டீன்ஏஜர் என்றாலே பெற்றோரை மதிக்க மாட்டார்கள், அவர்கள் சொல்வதற்கு எதிராகத்தான் செயல்படுவார்கள் என்று ஏன் நினைக்க வேண்டும்?

நான் உட்பட டீன்ஏஜில் இருக்கும் என் ஃபிரெண்ட்ஸ் ஒவ்வொருவரிடமும் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு குணங்களும் சேர்ந்தே இருக்கின்றன. எனவே எங்களைப் பற்றிய உங்கள் முன் அனுமானங்களை தயவுசெய்து எங்கள்மீது திணிக்காதீர்கள். எங்களைப் பார்த்து பயப்படாதீர்கள். நீங்கள் சொல்வதைத்தான் நாங்களும் சொல்ல விரும்புகிறோம்... நீங்களும் எங்கள் வயதைக் கடந்து வந்தவர்கள்தானே..!

- ஹேப்பி பேரன்ட்டீனிங்....

டீன் டேட்டா

12 முதல் 17 வயது வரையிலான பிள்ளைகளில் 63 சதவிகிதம் பேர், தங்கள் பெற்றோரிடம் எதைப் பற்றியும் பேச முடிவதையும், பெற்றோரின் ஆலோசனைகள் பலனளிப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த வயதிலுள்ளவர்களில் வெறும் 5 சதவிகிதத் தினருக்கு மட்டுமே இத்தகைய ஆரோக்கியமான உரையாடல் சாத்தியப்படுவதில்லை என்கிறார்கள்.

பதின்பருவத்தில் 82 சதவிகித ஆண்களும், 76 சதவிகித பெண்களும் தங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை விடவும் பெற்றோரின் ஆலோசனைகளுக்கே முக்கியத் துவம் தருவதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

91 சதவிகித டீன்ஏஜ் ஆண்களும் 89 சதவிகித டீன் ஏஜ் பெண்களும் தங்களிடம் அக்கறை காட்டுவதில் அம்மாக்களின் பங்கு அதிகம் என்கிறார்கள்.

16 சதவிகித அப்பாக்கள் மட்டுமே தங்கள் டீன்ஏஜ் பிள்ளைகளிடம் தினசரி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.