ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலில் இருக்கும் கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன். விவசாயக் கூலித்தொழிலாளி. இவரது மூன்று மகள்களும் ஒரே நேரத்தில் காவல்துறைப் பணியில் சேர்ந்திருக்கின்றனர்.
மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியால் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னரே, வெங்கடேசனின் மனைவி ஷகிலா இறந்துவிட்ட நிலையில், மகள்கள் பிரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி ஆகிய மூன்று பேரையும் சிரமப்பட்டு வளர்த்து, பட்டம் பெற வைத்திருக்கிறார் வெங்கடேசன். `காவல்துறையில் பணியாற்ற வேண்டும்’ என்ற மகள்களின் லட்சியக் கனவை நிறைவேற்றிய வெங்கடேசனின் கடின உழைப்பை பாராட்டும் விதமாக, மகளிர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சுமார் 10 நிமிடங்கள் முதலமைச்சருடன் நெகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார் வெங்கடேசன்.

இதுபற்றி வெங்கடேசனிடம் பேசினோம். ``பொண்ணுங்க மூணு பேருமே காவல்துறையில பணியாற்றணுங்கிற கனவோடு தீவிரமா பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தாங்க. இந்நிலையிலதான், 2019-ல் நடந்த காவலர் தேர்வுல கலந்துக்கிட்டு மூணு பேரும் தேர்ச்சி பெற்றாங்க. மூணு பேரும் ஒரே இடத்துல தேர்வு எழுதலை. மூத்தவர் வேலூரிலும், இரண்டாவது மகள் சென்னையிலும், இளைய மகள் திருவள்ளூர் மையத்திலும் தேர்வு எழுதினாங்க. அப்புறம் கொரோனா பொதுமுடக்கத்தால உடற்தகுதித் தேர்வும், மருத்துவப் பரிசோதனையும் ஒன்றரை வருஷம் தள்ளிப் போயிடுச்சி. இதையடுத்துதான், போன வருஷம் மார்ச் 13-ம் தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 19-ம் தேதி வரைக்கும், மூணு பொண்ணுங்களும் திருவள்ளூர் காவலர் பயிற்சி மையத்துல தங்கியிருந்து பயிற்சி எடுத்துக்கிட்டாங்க.
பயிற்சி முடிந்த நிலையில, மூணு பேரும் தமிழ்நாடு காவல்துறை பணியில சேர்ந்திருக்கிறாங்க. தற்சமயம், மூத்த மகள் பிரீத்தி அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்திலும், வைஷ்ணவி தாம்பரம் ஆயுதப்படையிலும், நிரஞ்சனி எழும்பூர் ஆயுதப்படையிலும் காவலர் சீருடை அணிந்து பணியில ஈடுபட்டு வர்றாங்க. என் பொண்ணுங்க எனக்குப் பெருமை தேடித் தந்துட்டாங்க. சாதாரண விவசாயக் கூலி நான். என்கிட்ட முதலமைச்சர் பேசினாருங்கிற இன்ப அதிர்ச்சியிலிருந்தே என்னால மீள முடியலை. போனை எடுத்த உடனேயே `வெங்கடேசனா..?’னு கேட்டார். `ஆமாங்கய்யா’ என்றதும், `நான் மு.க.ஸ்டாலின் பேசுறேன்’னு சொன்னார். ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. அதே சமயத்துல, படபடப்பு ஆயிட்டேன்.

`தாய் இல்லாத மூணு பெண் பிள்ளைகளையும் தமிழ்நாடு காவல்துறையில சேர வெச்சிருக்கிறீங்க. உங்களை நெனச்சுப் பெருமைப்படுறேன். வாழ்த்துகள். மகளிர் தினத்துல வாழ்த்து சொல்றதையும் நான் பெருமையா நெனைக்கிறேன். உங்க பெண் பிள்ளைகளுக்கும் வாழ்த்துச் சொன்னதா சொல்லுங்க’னு நலமுடன் விசாரிச்சு, வாழ்த்துச் சொன்னார். அதோடு, குடும்ப விவரத்தையும், சூழ்நிலையையும் பொறுமையா கேட்டுக்கிட்டார்.
முதலமைச்சர் ஐயா போன் பேசிட்டு வெச்ச ஒரு மணி நேரத்துக்குள்ள கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன்... இன்னும் நிறையப் பேரு வீட்டுக்கே வந்து என்னைப் பாராட்டிட்டுப் போனாங்க. அப்ப, அமைச்சர் காந்தி எனக்கு ரூ.1 லட்சம் கொடுத்து மனதார பாராட்டினார்.
என் பொண்ணுங்க மூணு பேரும் காவல்துறை பணியில சேர்ந்தப்பவே, எம்.பி கனிமொழி மேடம் போன் பண்ணி, என்கிட்டயும், என் பொண்ணுங்க மூணு பேர்கிட்டயும் தனித்தனியா பேசி வாழ்த்துச் சொன்னாங்க. இப்ப முதலமைச்சர் ஐயாவே பேசினதை நினைக்கும்போது ரொம்பவும் நெகிழ்ச்சியா இருக்கு’’ என்றார் ஆனந்தக் கண்ணீர் விட்டபடி!ெண்