லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: நிஜ நிலாச்சோறு சாப்பிடப் போகும் கிறிஸ்டினா!

 கிறிஸ்டினா கோக்
பிரீமியம் ஸ்டோரி
News
கிறிஸ்டினா கோக்

அவங்க வீடு வித்தியாசமானது. மகள் விருப்பத்துல தலையிடுறதில்ல. ஒரு கட்டத்துல தனியா பயணம் போகணும்கிற எண்ணம் அவங்களுக்கு வந்துருச்சு. பணம் சேர்ப்பாங்க. மாசக் கணக்குல டூர் கிளம்பிடுவாங்க.

கொழுக்குமலை கூடாரத்தில் தங்கியிருந்த வினு, விமல், வித்யா ஆகிய மூவரும் அதிகாலை மென்குளிரில் மெதுவாக வெளியே வந்தார்கள்.

“என்ன வித்யாக்கா, இப்பவும் நல்லா குளிருது. நைட் எல்லாம் குளிர்ல ரொம்ப பயந்துட்டீங்க போல” என்று சிரித்தாள் வினு.

“ஸ்லீப்பிங் பேக் சரியில்ல, கால் எல்லாம் விறைச்சிருச்சு” என்று பரிதாபமாகச் சொன் னார் வித்யா.

“வாங்க வித்யாக்கா, சூடா டீ குடிச்சிட்டு வருவோம்” என்று கேன்டீனுக்கு அழைத்துச் சென்றாள் விமல்.

டீ இதமாக உள்ளே இறங்கவும் வித்யாவுக்குத் தெம்பு வந்துவிட்டது.

“இந்தக் குளிரையே உங்களால தாங்க முடியலையே, நீங்க எப்படி வேர்ல்டு டூர் எல்லாம் போறது?”

``அதெல்லாம் போகலாம் விமல். தமிழ்நாட் டைச் சேர்ந்த ஐஸ்வர்யா சம்பத்கூட நாமும் ஏதாவது ஒரு சுற்றுலால சேர்ந்துக்கலாம்!’’

“யாரு அவங்க... டிராவல் ஏஜென்சி நடத்த றாங்களா?”

“இல்ல, அவங்களும் நம்மள மாதிரி டூரிஸ்ட் தான். நாம ஆடிக்கு ஒரு தடவை போறவங்க. அவங்க டூர் போறதையே வாழ்க்கையா வச்சிருக்காங்க. எம்பிஏ படிச்ச ஐஸ்வர்யா, மும்பையில ஹெச்ஆரா இருந்தவங்க. ரெண்டு முறை காதலிச்சாங்க. திருமணம் வரைக்கும் வரல. வீட்ல பார்க்குற மாப்பிள்ளைகள் அவ ருக்குச் சரி வரல. அதனால அவங்க கல்யா ணமே வேணாம்னு முடிவு பண்ணிட்டாங்க.”

“வீட்ல ஒண்ணும் சொல்லலையா வித்யாக்கா” - ஆர்வமாகக் கேட்டாள் வினு.

 கிறிஸ்டினா கோக்
கிறிஸ்டினா கோக்

“அவங்க வீடு வித்தியாசமானது. மகள் விருப்பத்துல தலையிடுறதில்ல. ஒரு கட்டத்துல தனியா பயணம் போகணும்கிற எண்ணம் அவங்களுக்கு வந்துருச்சு. பணம் சேர்ப்பாங்க. மாசக் கணக்குல டூர் கிளம்பிடுவாங்க. இப்படி உலகத்துல பல நாடுகளைப் பார்த்துட்டாங்க. ‘சிங்கிளா இருக்கிறது கஷ்டமில்ல, சந் தோஷம்’னு சொல்றாங்க. பயணங்கள்ல சக பெண் பயணிகளோட நட்பு கிடைக்குது. அந்தந்த நாட்டு மக்களோட வாழ்க்கையைத் தெரிஞ்சுக்க முடியுதுனு சொல்றாங்க. இது வரை ஒன்பது மொழிகளை அவங்க இந்தப் பயணங்கள்ல கத்துக்கிட்டாங்களாம். இப்போ 40 வயசாகுது. இனிமேலும் கல்யாணம் செஞ் சுக்கிற ஐடியா இல்லங்கிறாங்க. பயணங்களும் புத்தகங்களும் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியா வைச்சுக்க போதுமானதுன்னு சொல்ற ஐஸ்வர்யா, தன்னோட அனுபவங்களைப் புத்தகமா எழுதப் போறாங்களாம்.”

“ வாவ்... நம்மளைச் சேர்த்துப்பாங்கன்னா, அவங்களோட ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம் வித்யாக்கா’’ என்ற வினு, “குளிர் மட்டும்தான் உங்களுக்கு இங்கே பயமா இருந்துச்சா வித்யாக்கா?” எனக் கேட்டாள்.

“பாம்பு பயமும் இந்துச்சுப்பா...”

“பாம்புதான் இந்த ஏரியாவுல இல்லைன்னு சொன்னாங்களே, அப்புறம் என்ன?”

“இருந்தாலும்...”

“அட, போங்க வித்யாக்கா. 19 வயசு பொண்ணு இதுவரைக்கும் 500 பாம்புகளுக்கு மேல பிடிச்சிருக்காங்களாம்!”

‘‘அட, யாரு விமல் அந்தப் பொண்ணு?”

“சென்னைலதான் இருக்காங்க. அவங்க அப்பா முத்துப்பாண்டியன், வீட்டுப் பகுதி கள்ல வரும் பாம்புகளைப் பிடிச்சு, காட்டுப் பகுதில விடுறதை சமூக சேவையா செஞ்சிட்டு வர்றார். இதுவரை அஞ்சாயிரத்துக்கும் அதிக மான பாம்புகளைப் பிடிச்சிருக்காராம். சின்ன வயசுலயிருந்து அப்பா பாம்பு பிடிக்கிறதைப் பார்த்துட்டிருந்த ஹரிணிக்கும் அதுல ஆர்வம் வந்துருச்சு. அப்பாகிட்டயிருந்து நுட்பத்தைக் கத்துக்கிட்டு, பாம்புகளைப் பிடிக்கிறாங்க!”

“ஆச்சர்யமா இருக்கு விமல். இது ஹாபியா?”

“விலங்குகள் மீதுள்ள அன்பால இதைச் செய்யறாங்க. எம்பிஏ படிக்கணும்கிறது அவங்க லட்சியமாம் வினு!”

“ஓ... நல்லா வரட்டும். ஒரு வாக் போயிட்டு வரலாமா வித்யாக்கா?”

“நடக்கலாம்... கால் வலிச்சா இங்கே ஒரு ஆட்டோகூட கிடைக்காது. பாவம் இந்த மக்கள்!”

“இந்த ஆஃப் ரோடுல ஜீப் வர்றதே பெரும் பாடா இருக்கு... ஆட்டோல்லாம் வந்தா கவிந்துரும் வித்யாக்கா!”

“ஆட்டோன்னு சொன்னதும் நினைவுக்கு வருது வினு. திருப்பதியில 200 பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களா இருக்காங்களாம். `ராஷ்ட்ரிய சேவா சமிதி'ங்கிற தொண்டு நிறுவனம் இந்தப் பெண்களுக்கு ஆட்டோ ஓட்டவும் ஆட்டோ வாங்கவும் உதவியிருக்கு. இந்தப் பெண்கள்ல பலரும் கணவனை இழந்த வங்க, குடிகார கணவனோட வாழறவங்க... இப்படி ஏழைகளா இருக்கிறவங்க. ஆட்டோ ஓட்டி, அந்த வருமானத்துல குடும்பத்தை நடத் தறாங்க. ஆட்டோ ஓட்டுனதுக்குப் பிறகு வாழ்க்கை நல்லா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா, இவங்கள ஆண் ஆட்டோக்காரர்கள் எதிர்க்கிறாங்களாம்...”

“அதெல்லாம் ஆண்கள் உடனே ஏத்துக்க மாட்டாங்க. அதுக்கெல்லாம் கவலைப்படாம நம்ம வேலையைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கணும்.”

“ஆமா விமல்... அமெரிக்க விண்வெளி நிறு வனம் நாசா 2025-ல பெண்களை நிலாவுல இறங்க வைக்கப்போகுது. அதுல முதல் பெண்ணா கிறிஸ்டினா கோக் அறிவிக்கப் பட்டிருக்காங்க. இவங்க விண்வெளி ஆய்வு மையத்துல நீண்ட காலம் தங்கியிருந்தவங்க. இவங்களோட விக்டர் க்ளோவர்ங்கிற விண்வெளி வீரரின் பெயரையும் நாசா அறிவிச்சிருக்கு. நிலாவுக்குப் போகப் போற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவர்!”

“பெண்கள் மட்டும் போற பயணம் இல்லையா வித்யாக்கா?”

“நிலாக்குப் போற ஆர்டெமிஸ் மூணு கட் டங்களா பயணிக்குது. முதல்முறை ஆள் இல் லாமலே நிலாவைச் சுத்திவரும். ரெண்டாவது தடவை ஆட்களோடு சுத்திவரும். மூணாவது தடவை நிலால ஆட்கள் இறங்குவாங்க. மொத்தப் பயணங்களுக்குமான வீரர்களை அறிவிச்சிட்டு வர்றாங்க.”

“ஓ... கிறிஸ்டினாவுக்கும் விக்டருக்கும் வாழ்த்துகள்” என்றாள் விமல்.

மூவரும் மெதுவாக நடக்க ஆரம்பித்தனர்.

வழியில் சில பெண்கள் இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என விசாரித்தனர்.

“வித்யாக்கா, உங்க வயசுக்கே நடக்க முடி யலைன்னு சொல்றீங்களே, இங்கிலாந்துல பார்பரா தாக்ரேங்கிற ஓய்வுபெற்ற பேரா சிரியர் வாரத்துக்கு ரெண்டு தடவை பத்து கி.மீ. தூரம் ஓடறாங்க. 85 வயசுல இவங்க ஓடறதைப் பார்த்த ஆடிடாஸ் நிறுவனம், தொலைக்காட்சி விளம்பரத்துல நடிக்கிற வாய்ப்பைக் கொடுத்திருக்கு. அதுல கிடைக்கிற வருமானத்தை மருத்துவ அறக்கட்டளைக்குத் தரப் போறதா சொல்லியிருக்காங்க பார்பரா!”

“ஆஹா... பார்பரா வாழ்க!” என்றாள் வினு.

“மலையாளப் படம் `இரெட்ட' பார்த் தீங்களா வித்யாக்கா?”

“இல்ல, விமல். ஆனா, எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க... இளகிய மனம் கொண்டவங்களுக்குக் கஷ்டமா இருக்குன்னும் சொன்னாங்க. எனக்குதான் இளகிய மனம்னு சொல்வீங்களே... அதான் பார்க்கலாமா வேணாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.”

“ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்துல ஜோஜு ஜார்ஜ் தயாரிச்சு, அவரே ரெண்டு கேரக்டர்ல நடிக்கவும் செஞ்சிருக்கார்.”

“ஜோஜு ஜார்ஜா? அவர் நடிச்ச ‘சோழ’ பார்த்ததுலேருந்து, அவர்னா கொஞ்சம் தயக்கமா இருக்கு படம் பார்க்க!”

“இதுவும் அப்படிப்பட்ட அதிர்ச்சியை உங்களுக்குக் கொடுக்கலாம் வித்யாக்கா. ஜோஜு ஜார்ஜ் ட்வின்ஸ் கேரக்டர்ல வர்றார். ரெண்டு பேருமே காவல்துறையிலதான் வேலை செய்யறாங்க. ஒருத்தர் கொஞ்சம் கோபக்காரரா இருந்தாலும் நல்லவர். இன் னொருத்தர் மோசமானவர். நல்லவரான ஜோஜு ஜார்ஜுக்கு ஒரு மகள் பிறந்ததும் ஒத்துவரலைன்னு மனைவி தனியா போயிடறாங்க. அந்த மகள் வளர்ந்து, ஒரு பாடகியா டிவி மியூசிக் ஷோல கலந்துக்கறாங்க. அப்பாவுக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்றதுக் குள்ள மகளைப் பார்க்கணும்னு ஆசை. மனைவிகிட்ட சொல்றார். இதுக்கு நடுவுல தம்பி ஜோஜு ஜார்ஜ், துப்பாக்கியால தன்னைச் சுட்டுக்கிட்டு ஸ்டேஷன்ல இறந்துட றார். அதுக்கு என்ன காரணம்கிறதுதான் க்ளைமாக்ஸ்... ஜோஜு ஜார்ஜ் ரெண்டு ரோல் லயும் உருவத்துல வித்தியாசம் காட்டாமலே, நடிப்புல வித்தியாசம் காட்டி அசத்திடறார்.”

“அப்போ பார்க்க வேண்டிய படம்தான்!”

“ஓகே... வாங்க திரும்பிப் போவோம்” என்றார் வித்யா.

பேசிக்கொண்டே தங்கும் இடத்தை நோக்கி மூவரும் நடந்தனர்.

- அரட்டை அடிப்போம்...

*******

மார்கரெட் ஏ. வில்காக்ஸ்
மார்கரெட் ஏ. வில்காக்ஸ்

வினு தரும் வித்தியாசமான தகவல்

மெக்கானிக்கல் இன்ஜினீயரின் சூடான கண்டுபிடிப்பு

குளிர்ச்சியான பிரதேசங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படும் கார் ஹீட்டரை கண்டு பிடித்தவர் ஒரு பெண். மெக்கானிக்கல் இன்ஜினீய ரான அவரது பெயர் மார்கரெட் ஏ. வில்காக்ஸ். காலம்: 1893. கார் இன்ஜின் செயல்பாடு காரணமாக ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வெப்பத்தைப் பயன்படுத்தி, கார்களின் உள்ளே வெப்பநிலையை உயர்த்துவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தார் மார்கரெட்.