Published:Updated:

அரசுத் திட்டங்கள்- ஓசி அல்ல பெண்களின் உரிமை...

உரிமைத் தொகை ( Photo by Syed Hussaini on Unsplash )

பெண்களுக்கான அரசு திட்டங்களை, சலுகையாகவும், இலவசமாகவும் கருத முடியாது. இவையாவும் பெண்களின் உரிமை. ஆணுக்கு நிகராக பெண்களையும் ஆளுமையாக்கும் சமூகநீதிக்கான பாளமே அரசின் திட்டங்கள்.

Published:Updated:

அரசுத் திட்டங்கள்- ஓசி அல்ல பெண்களின் உரிமை...

பெண்களுக்கான அரசு திட்டங்களை, சலுகையாகவும், இலவசமாகவும் கருத முடியாது. இவையாவும் பெண்களின் உரிமை. ஆணுக்கு நிகராக பெண்களையும் ஆளுமையாக்கும் சமூகநீதிக்கான பாளமே அரசின் திட்டங்கள்.

உரிமைத் தொகை ( Photo by Syed Hussaini on Unsplash )

வாய்ப்பும் உரிமையும்  காலங்காலமாக  மறுக்கப்படும் பெண்களின் முன்னேற்றத்திற்கு, அரசாங்கம் நலத்திட்டங்களை அறிவிக்கிறது. பெண்களுக்கான திட்டங்களைப் பயன்படுத்தி  கிராமம் மற்றும் நகரங்களில்  வாழும் பெண்கள் முன்னேற்றமடைந்து விட வேண்டும் என்று  பெண்ணிய சிந்தனையாளர்களும், சமூக செயற்பாட்டாளரும் ஏங்கிக் கொண்டிருக்கையில், அரசின் திட்டங்களால் பயன்பெறும் பெண்களை, காமெடி என்ற பெயரில் சிலர் இழிவுபடுத்துகின்றனர்.

சமீபத்தில் வெளியான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் வழங்கப் போவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்தத் திட்டத்தை  விமர்சித்து   சவுக்கு சங்கரின் டிவிட்டர் அட்மின் பிரதீப் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

சரத்குமார் நடித்த  `கட்டபொம்மன்' படத்தில் வரும் அரிசி ஆலை காமெடி வீடியோவில், கவுண்டமணி, பெண்களின் உடலமைப்பை வைத்தும், வெளித்தோற்றத்தை வைத்தும் வேலைக்குத் தேர்வு செய்வார். இப்படித்தான் முதல்வரும் , நிதி அமைச்சரும் தகுதி வாய்ந்த குடும்பப்பெ ண்களைத் தேர்வு  செய்வார்கள் என்று முதல்வரையும், நிதி அமைச்சரையும் பயன்பெறும் பெண்களையும் இழிவுபடுத்தியுள்ளார், பிரதீப். வீடியோ அதிகளவு பகிரப்பட்டதை தொடர்ந்து, பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 கட்டணமில்லா பேருந்து சேவை
கட்டணமில்லா பேருந்து சேவை

பெண்களுக்கான  அரசுத்திட்டங்களை   இழிவுபடுத்துவது என்பது புதிதல்ல. பெண்களுக்கு கட்டணமில்லாமல்  பேருந்து போக்குவரத்து திட்டத்தையும் ஆணாதிக்க சிந்தனை உடையவர்கள் விமர்சித்து வருகின்றனர். பேருந்துகளில் பெண்கள் பயணிக்கும்போது  ஓசி டிக்கெட் என்று கேலி செய்வதும், பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் நிற்கும்போது, பேருந்து நிற்காமல் செல்வதும் பெண்கள் அன்றாடம் சந்திக்கக்கூடிய பிரச்னை.

பயணம் செய்தல் என்பது அடிப்படை உரிமை. ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது பெண் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும், புதிய நபர்களைச் சந்திப்பதற்கும் வாய்ப்புகளைப் பெறுகிறாள். கட்டணமில்லா பேருந்து சேவை என்பது, பெண் முன்னேற்றத்திற்கான படிக்கல். இதுவும் ஆணாதிக்க சமூகத்தால் விமர்சிக்கப்படுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் உள்ள பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வரும் பெண்களையும்   ஆணாதிக்க சமூகம் கேலி செய்கிறது.

இது குறித்து வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான செல்வகோமதியிடம் பேசினோம்....

``பெண்களுக்கான அரசின் நலத்திட்டங்களை  சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் கேலி செய்வது தொடர் பிரச்னையாக உள்ளது. இவ்வாறான  மோசமான  நடவடிக்கையை தனிநபரின் அத்துமீறலாகப் பார்க்க முடியாது, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பின் தாக்கமே தனி நபர்கள்  மூலம் விஷங்களாக கக்கப்படுகின்றன.  இந்தியாவின்  கடைக்கோடியில் வாழும் பெண்கள், ஆணாதிக்க ஒடுக்குமுறையுடன், கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர்.

அவர்களுக்கான ஆரோக்கியமான உணவும், சுகாதாரமான மாதவிடாய் காலத்தையும்கூட அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு அரசின் கட்டணமில்லா பேருந்து சேவை பேருதவியாக இருக்கிறது.

செல்வகோமதி
செல்வகோமதி

எனக்குத் தெரிந்த மாணவரின் அக்கா கணவர் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அக்குடும்பம் கடுமையான வறுமையைச் சந்தித்தது. அந்தப் பெண், அரசின் கட்டணமில்லா பேருந்தில் சென்று முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இதன் மூலம் பேருந்து கட்டணச்செலவு மிச்சப்படுகிறது.

முறுக்கு வியாபாரத்தில் கிடைப்பது 100 ரூபாய் லாபம், அதிலும் பாதி பணம் பேருந்துக்கு செலவாகியிருந்தால் அந்த குடும்பத்தின் வறுமை நீங்கியிருக்காது. ஆனால் அப்பெண் சொந்தக்காலில் நிற்பதற்கும், அக்குடும்பத்தின் வறுமைய நீக்குவதற்கும் அரசின் கட்டணமில்லா பேருந்து சேவை பேருதவியாக உள்ளதை மறுக்க முடியாது. அதே போல் அரசு அறிவித்திருக்கும் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை திட்டம், முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது.

பெண்கள் வீட்டில் செலுத்தும் உழைப்புக்கு எந்தவித ஊதியத்தையும் சமூகம் தருவதில்லை. இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் வருமானத்திற்கு, தன் கணவனையே நம்பியிருப்பதால் அவர்களுக்கான அடிப்படை தேவைகள் கூட பல நேரங்களில் மறுக்கப்படுகின்றன.

இச்சூழ்நிலையில் அரசின் இந்தத் திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டங்களை கேலி செய்பவர்களுக்கு, உழைப்பு சுரண்டலாலும், ஆணாதிக்கத்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களின் வலி மிகுந்த கதைகள் புரிவதில்லை. பெண்களுக்கான அரசு திட்டங்களை சலுகையாகவும், இலவசமாகவும் கருத முடியாது. இவை யாவும் பெண்களின் உரிமை, ஆணுக்கு நிகராக பெண்களையும் ஆளுமையாக்கும் சமூக நீதிக்கான பாளமே அரசின் திட்டங்கள்'' என்றார்.

பிங்க் பஸ்
பிங்க் பஸ்

கடைநிலையில் இருக்கும் பெண்களை மட்டும் இச்சமூகம் கேலி செய்யவில்லை, தலைமைப்பொறுப்பில் இருக்கும் பெண்களை கூட ஆணாதிக்க சமூகம் விட்டுவைப்பதில்லை. சென்னையின் மேயர் பொறுப்பில் இருக்கும் பிரியா ராஜனை கேலி செய்யும் பதிவுகளும், அவரை அழகியல் பதுமையாக வர்ணிக்கும் பதிவுகளும் இணையத்தில் வைரலாகின்றன. பெண்களுக்கு உரிமைகளும், உணர்வுகளும், அறிவாற்றலும் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள சமூகம் மறுக்கிறது. பெண்களை உணர்வுகளும் உரிமைகளுமற்ற சதைப்பிண்டமாகப் பார்க்கும் ஆணாதிக்க மனநிலையை சமூகத்திலிருந்து வேரறுப்போம்