மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கற்பிதங்கள் களையப்படும்! - 11 - ஆண்கள் சிரித்தால் கம்பீரம்... பெண்கள் சிரித்தால் அடக்கமின்மையா?

ஆண்கள் சிரித்தால் கம்பீரம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்கள் சிரித்தால் கம்பீரம்

எதார்த்த தொடர் - கீதா இளங்கோவன்

சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் எனக்குள் நெருடிக் கொண்டே இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்பு நான், என் தோழி, அவரின் டீன் ஏஜ் மகள் மூவரும் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, இரவு ஒன்பது மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தோம். நான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அருகே தோழியும், பின்புற சீட்டில் அவர் மகளும் அமர்ந்திருந்தனர். வடபழனி சிக்னல் அருகே வந்தபோது கடும் டிராஃபிக். வாகனங்கள் இன்ச் இன்ச்சாக ஊர்ந்து கொண்டிருந்தன. கிடைத்த இடைவெளியில் நானும் மெதுவாக காரை நகர்த்திக்கொண்டிருந்தேன். தோழியின் மகள் படத்தில் வந்த நகைச்சுவைக் காட்சியை விவரிக்க மூவரும் சத்தமாகச் சிரித்தோம். பின்புறம் டூவீலரில் வந்த ஆண்கள் காரின் ஜன்னல் கண்ணாடி அருகே வந்து `ஒழுங்கா வண்டி ஓட்டுங்க, என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு’ என்று கத்திவிட்டுச் சென்றனர்.

ஒரு நிமிடம் எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. கிடைத்த கேப்பில், சரியாகத்தானே ஓட்டிச் செல்கிறோம், ஏன் இவர்கள் இப்படி கோபப் படுகிறார்கள்? ஒருவேளை சரியாக ஓட்டவில்லையென்றே அவர்கள் கருதினாலும், `பார்த்து ஓட்டு’ என்று சொல்லி யிருக்கலாம். `என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு’ என்று எதற்கு வன்மத்தைக் கக்க வேண்டும்?

- கீதா இளங்கோவன்
- கீதா இளங்கோவன்

அடுத்த சம்பவம், ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் நடந்தது. தோழியின் புத்தகம் வெளியான மகிழ்ச்சியில் அந்தப் பதிப்பகத்தின் ஸ்டாலுக்கு முன்பு, நாங்கள் நான்கு தோழிகள் நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஒருவர் ஏதோ ஜோக்கடிக்க நால்வரும் சத்தமாகச் சிரித்தோம். சிறிது நேரத்தில் அடையாள அட்டை அணிந்த வயதானவர் ஒருவர் வேகமாக வந்தார். `பேசணும்னா ஸ்டாலுக்குள்ளே போய்ப் பேசுங்க. இப்படி சிரிக்காம கொஞ்சம் அறிவை வளர்த்துக்கோங்க’ என்று எங்களிடம் கத்தினார்.

ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தோம். என்ன சொல்கிறார் என்று உள்வாங்கி, சுதாரித்துத் திரும்புவதற்குள் ஆளைக் காணோம். அங்கு நின்றிருந்த எங்கள் நால் வரின் அறிவுக்கும் ஒன்றும் குறைச்சலில்லை. ஆளுக்கு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறோம். நிறைய சிந்திப் பவர்கள், பேசுபவர்களும்கூட. அறிவானவர்கள் சிரிக்கக் கூடாதா? சிரிப்பதற்கு அறிவு தேவையில்லை யென்றோ அறிவு தேவை என்றோ தகுதி எதுவும் இருக்கிறதா என்ன? யார் அவர்? எங்களிடம் கோபப் பட அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எதுவும் தெரியவில்லை.

இரண்டு சம்பவங்களிலிருந்து நான் உணர்ந்து கொண்டது ஒன்றுதான். பொது இடத்தில் பெண்கள் சிரித்தால் அது சுற்றியிருப்பவர்களைத் தொந்தரவு செய்கிறது. `பொம்பள சிரிச்சாப் போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு’ என்ற மூடமொழியும், நல்ல (குடும்பப்) பெண் சத்தமாகச் சிரிக்க மாட்டாள் என்ற கற்பிதமும் இன்றும் பொதுபுத்தியில் ஆழப் பதிந்திருக்கிறது. இந்தக் கற்பிதத்தால் பெண்ணை அவள் இயல்போடு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ஆணாதிக்க சமுதாயம். அப்படிச் சிரிக்கும் பெண் அடக்கமற்றவள், அவளைத் திருத்த வேண்டும் என்று முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்கூட பொது இடத்தில் அதிகாரம் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல். அவளை சுயமரியாதை யுள்ள சக மனுஷியாக மதிக்காத ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு இது.

இங்கே பொதுவெளி என்பது இன்னும் ஆண்களுக்கானதாகத்தான் இருக்கிறது. அவர்கள்தான் அதில் கோலோச்சு கிறார்கள். பொதுவெளிக்கு வரும் பெண்ணை `எங்க ஏரியாவுக்கு நீ வந்திருக்கே. நாங்க உனக்கு வகுத்து வச்சிருக்கிற இலக்கணப்படிதான் நடந்துக்கணும். உன்னோட வீட்டுக் குள்ள போய் இஷ்டம்போல இருந் துக்கோ’ என்று மறைமுகமாக வலியுறுத்துகிறார்கள்.

பொது இடத்தில் ஆண்களும்தான் சிரிக்கிறார்கள், சத்தமாகச் சிரிக் கிறார்கள். சில ஆண்கள் மீசையை முறுக்கிக் கொண்டு, பலமாகச் சிரித்தால் `சிங்கம் மாதிரி என்ன கம்பீரமா சிரிக்கிறாரு பாரு’ என்று சிலாகிப்பதும், பெண் சிரிக்கும்போது `ஆம்பள மாதிரி எதுக்குடி சிரிக்கிறே?’ என்று கடிந்து கொள்வதும் எத்தகைய முரண்பாடு!

பெண்கள் சிரித்தால் அடக்கமின்மையா?
பெண்கள் சிரித்தால் அடக்கமின்மையா?

பெண் என்பவள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்; உரக்கப் பேசக் கூடாது; சத்தமாகச் சிரிக்கக் கூடாது என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் எதிர்பார்க்கிறது. `சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்’ என்று எழுதும் பாடல்கள் எல்லாம் பொய்யா என்றால் முழுக்கப் பொய் என்று சொல்ல முடியாது. வீட்டுக்குள் பெண்கள் சிரிக்கலாம்; அதுவும் சத்தம் வராமல் அளவாகச் சிரித்தால்தான் அழகு; பொதுவெளியில் புன்னகை மட்டுமே செய்யலாம்; சிரிப்பு வந்தால், நாணத்துடன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பது மிக நல்லது; அதை ஆண்களும் ரசிப்பார்கள் என்று ஒரு நண்பர் சொன்னபோது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால், ஆண்களுக்கு எப்போது தேவையோ பெண்கள் அப்போது சிரித்தால் போதுமாம்!?! பெண் என்பவள் உணர்வும், சுய விருப்பங்களும் உள்ள சக மனுஷி என்பதை இவர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு. மனித இயல்பு. பெண்கள் மகிழ்ச்சியாகவெல்லாம் இருக்கத் தேவையில்லை, ஆண்களுக்கு பணிவிடை செய்துகொண்டு, குடும் பத்தை, கலாசாரத்தை, சாதியமைப்பை, மதத்தை கட்டிக் காக்கும் பணியைச் செய்தால் போதும் என்பதைத்தான் சமுதாயம் பலவழிகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. தனக்கு அடங்கி இருக்கவேண்டிய பெண் எப்படி சத்தமாகச் சிரிக்கலாம் என்ற ஆணா திக்க உளவியலும் இதற்குப் பின்னால் இருக்கிறது.

இன்னொரு புறம் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற குற்றச்சாட்டை வேறு சொல்வார்கள். இது தவறான முன்முடிவு. நான்கைந்து தோழிகள் சேர்ந்து பேச ஆரம்பித்தால் அங்கு கேலி கிண்டல்களுக்கும் சிரிப்புக்கும் பஞ்சமே இருக்காது. அந்த இடமே கலகலப்பாக இருக்கும். ஆனால், இது வீடுகளுக்குள்ளும், ஆண்கள் இல்லா இடங்களிலும்தான் நடக்கும். ஆண்கள் இருக்கும்போதோ, பொதுவெளியிலோ விமர்சனங்களுக்கு அஞ்சியே பல பெண்கள் பெரிதாகச் சிரிக்க மாட்டார்கள்.

ஆண்கள் சிரித்தால் கம்பீரம்
ஆண்கள் சிரித்தால் கம்பீரம்

பெண்கள் தன்னைவிட ஒருபடி குறைவானவர்கள் என்ற எண்ணம் ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களுக்கு இருப்பதால் தன் முன்னால் சிரிப்பதை மரியாதைக் குறைவாக எண்ணுகிறார்கள். தோழர் களே... மகிழ்ச்சியாக இருக்கும் பெண்கள்தான் தன்னியல்போடு சிரிக்கிறார்கள். அதற்கும் ஆண்களுக் கான மரியாதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெள்ளந்தியாகச் சிரிக்கும் பெண் தன்னைச் சுற்றியிருக்கும் சூழலை மகிழ்ச்சியாக மாற்றுகிறாள். முடிந்தால் அவள் சிரிப்பில் கலந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தூர இருந்து ரசியுங்கள். இரண்டும் செய்ய முடியாவிட்டால், தொந்தரவு செய் யாமல் விலகிப் போய்விடுங்கள். பெண்களை உள்ளவாறே ஏற்றுக் கொள்வதுதான் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்கும்.

தோழியரே, யார் என்ன சொன் னாலும் சிரிப்பை கைவிடாதீர்கள். பெண்கள் உரக்கச் சிரிப்பதை இயல்பாக ஏற்கும் பொதுவெளியை உருவாக்கு வோம்.

- களைவோம்...