
நான் வேலைக்குப் போன ஒருநாள், பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதான பொன்ராஜ் என் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடந்த சம்பவம் இது. ஒரு பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டான் ஒருவன்.
எந்தத் தவறும் செய்யாத அந்தப் பெண்ணைப் பற்றித் தமிழகமே பேசியது. ஒட்டுமொத்த கவனத்தையும் குவித்த அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இப்போது கல்வியைத் தொடரக்கூட வழியில்லாமல் சிரமப்படுகிறார். அந்தப் பிரச்னையை மனரீதியாக எப்படி எதிர்கொள்ள வேண்டுமென அவருக்குத் தெரியவில்லை. இந்தப் பெண்ணுக்காவது பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆதரவற்ற பெண் ஒருவர் இப்படியொரு வன்முறைக்கு உள்ளானால் என்ன ஆகும்? அவர்களைக் காப்பாற்ற இந்த அரசும் சமூகமும் என்ன தீர்வை வைத்திருக்கிறது?
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியைப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் தினமாக தமிழக அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த இரண்டாவது நாளில், “ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்கும் வகையில் காப்பகங்களை அரசு தொடங்க வேண்டும்’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் தினம், குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடினாலும், பெண்களுக்கான பாதுகாப்பு நிச்சயமாக இங்கில்லை. வர்க்க, பொருளாதார, சமூக, சாதி அடுக்கென எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் தரப்பு பெண்களும் பாதிப்புக்குள்ளாகிவருவது ஒவ்வோர் ஆண்டும் கூடிக்கொண்டே வருகிறது. இதில் கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மன நலம் பாதிப்படைந்த பெண்கள், சிறுமிகள் நிலை மிக மோசமாக உள்ளது. இவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாவது தொடர்கிறது. இப்படி பாதிக்கப்படுபவர்களில் ஒரு சிலர்தான் சட்டத்தின் உதவியை நாடுகிறார்கள். பலருக்கு அடுத்து என்ன செய்வதென்றுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் ‘`ஆதரவற்ற பெண்களுக்குக் காப்பகம் அமைக்க வேண்டும்’’ என்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணாவின் உத்தரவு, ஆதரவற்ற பெண்களின் நிலையை வெளியுலகத்துக்குத் தெரியவைத்துள்ளது. இதற்குக் காரணமான வழக்குகளைப் பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்ட கிராம ஏழைப் பெண்ணொருவர் தாக்கல் செய்த மனுவில், ‘`மிகவும் கஷ்டப்படுற குடும்பம். ஊரில் வேலை இல்லாததால் என் கணவர் சென்னையில் வாட்ச்மேன் வேலை பார்க்கச் சென்றுவிட்டார். பள்ளிக்கூடம் செல்லும் மகன், உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் ஊரில் வாழ்ந்து வந்தோம். பையனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நான் கூலி வேலைக்குச் சென்று விடுவேன். மகளை வீட்டில் விட்டுச் செல்வேன். நான் வேலைக்குப் போன ஒருநாள், பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதான பொன்ராஜ் என் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்தது என்னவென்றே தெரியாத நிலையில், அடுத்தவர் உதவி இல்லாமல் வாழ முடியாத என் மகள் கர்ப்பமாகிவிட்டாள். அவள் வயிற்றில் உருவாகியுள்ள கருவைக் கலைக்க உத்தரவிட வேண்டும். பொன்ராஜ் அரசியல் செல்வாக்குள்ளவர், அவர் குடும்பத்தினரிடமிருந்து எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் நிவாரணம் வழங்கவும் வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கருக்கலைப்பு செய்யச் சட்டத்தில் கடுமையான விதிகள் இருப்பதால், சிறுமியின் நிலையை நன்கு உணர்ந்த நீதிபதி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவக்குழுவினரிடம் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 24 வாரக் கரு வளர்வதாகவும், கருக்கலைப்பு செய்யும் அளவுக்கு உடல் நிலை இருப்பதாகவும் மருத்துவக் குழு தெரிவித்த பின், கருவைக் கலைக்கவும், கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்துவருவதால் மரபணு சோதனைக்காகக் கருவைப் பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் போதுதான், ‘`தமிழகத்தில், 18 வயதைக் கடந்த பெண்களுக்கான மறுவாழ்வு மையங்கள் இல்லை. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளவர் மைனர் பெண். தாயாரின் பராமரிப்பில் இருந்தபோதே அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். கருக்கலைப்புக்குப் பின்பும் அவர் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமுமில்லை. அதனால் உடல் நலமாகும் வரை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆதரவற்ற பெண்கள், பாலியல் வன்கொடுமை உட்பட கடும் வன்முறைகளால் பாதிக்கப்படும் 18 வயதைக் கடந்த பெண்களுக்கான காப்பகம் அமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். இதுபற்றி ஆலோசித்து 8 வாரங்களுக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார்.
இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது மட்டுமல்லாமல், வேண்டாத கருவைச் சுமக்கும் கொடுமையும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகிறது. சில வருடங்களுக்கு முன் இதுபோன்ற பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான பெண்ணின் கருவைக் கலைக்கக் கோரி நடந்த வழக்கு விசாரணை மெதுவாக நடந்ததால், அப்பெண்ணுக்குக் கருவைக் கலைக்க முடியாமல்போனது.
நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சீனி செய்யதம்மா, “பெண்களைப் பாதுகாக்கக் காப்பகம் அமைக்க வேண்டும் என்பது இருக்கட்டும். முதலில் பெண்கள்மீதான வன்முறைகளைக் குறைக்க அதற்கான சட்டத்தை இந்த அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டும். சமீபத்தில், 8-ம் வகுப்பு பயிலும் சிறுமியை அப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கு உடனே வழக்குப்பதிவு செய்யாமல் தாமதித்துள்ளது காவல்துறை. உயர்நீதிமன்றம் தலையிட்டுத்தான் எப்.ஐ.ஆர் போட்டு, இரண்டு மாதம் கழித்துதான் கைது செய்துள்ளனர். பெற்றோருடன் உள்ள பெண்களுக்கே இந்த நிலைமை என்றால், ஆதரவற்றவர்களின் நிலை? பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரிக்கக் காவல்துறையினர் சீருடையில் வரக்கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டாலும் அவர்கள் அப்படி வருவதில்லை. காவல்துறையின் இந்த அணுகுமுறை பாதிக்கப்பட்டவர்களை பயம்கொள்ள வைக்கிறது. இதெல்லாம் மாற வேண்டும்.
இதுபோன்ற கொடுமைக்கு ஆளான பெண்கள், சிறுமிகளுக்கு கவுன்சலிங் முக்கியமாகத் தேவை. அதைச் செய்வதில்லை. ஒரு சம்பவம் நடக்கும்போது அதைப்பற்றிப் பேசுகிறோம். அதன்பின் அதை அப்படியே மறந்துவிடுகிறோம்.
இதுபோன்று பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை ஒரு விபத்துபோல எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்தச் சமூகம் ஏற்பதில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணையும் தனிமைப்படுத்துகிறார்கள்.பாலியல் வன்கொடுமையால் உண்டாகும் கருவைக் கலைக்கவே பெரும் சட்டப்போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. குழந்தைகள், பெண்களுக்கான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தினாலே பல குற்றங்கள் குறைந்துவிடும். அதை முதலில் அரசு செய்ய வேண்டும்’’ என்றார்.
சோக்கோ அறக்கட்டளை நிர்வாகியும், வழக்கறிஞருமான செல்வகோமதி, ‘`பாதிக்கப்படும் பெண்களுக்கான காப்பகம் தேவையானதுதான். அதே நேரம் அதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு அரசு சார்பில் எதுவும் செய்வதில்லை” என்றார்.
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க இருக்கும் சட்டங்கள் மற்றும் சமூக முறைகளைப் பற்றிய உரையாடல் அனைத்துத் தரப்பிலும் இங்கே அவசியமாகிறது. அதைத் தொடங்காமல் தீர்வை நோக்கி நம்மால் நகரவே முடியாது.