கோகுல்ராஜின் ஆணவப் படுகொலையைத் தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. அந்த வழக்கை நேர்மையாக விசாரணை செய்த டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவும் மர்மமான முறையில் இறந்துபோனார். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கில், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கில், கோகுல்ராஜ் யாருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததால் படுகொலை செய்யப்பட்டாரோ அந்த சுவாதியே, கோகுல்ராஜுக்கு எதிராக பிறழ் சாட்சியாக மாறியிருப்பதுதான் நீதிபதிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள். சுவாதிக்கு உண்மையைக் கூற அவகாசம் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், இதுகுறித்து இதேபோன்ற வழக்கில் சாட்சியாக இருக்கும் கெளசல்யா சங்கரிடம் நாம் பேசினோம்.
”கோகுல்ராஜ் வழக்கில் சுவாதி பிறழ் சாட்சியா மாறினதுக்கு அவங்களை மட்டுமே குறை சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. இந்த சாதிய சமூகம் கொடுக்கிற அழுத்தம்தான் இதற்கு மிக முக்கியமான காரணம். அவங்க கோகுல்ராஜிடம் எந்த மாதிரியான முறையில் பழகுனாங்கன்னு யாருக்கும் தெரியாது. லவ் பண்ணினாங்கங்குறதுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. கோயிலில் சுவாதியும் கோகுல்ராஜும் நட்பாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு சாதியைக் கண்டுபிடித்து படுகொலை செய்கிற தைரியம் வந்திருக்கிறது என்றால், அதற்குச் சாதி வெறிதான் காரணம். ஒரு திவ்யா… ஒரு கெளசல்யா… தனி ஆனதற்குக் காரணம் இந்தச் சாதிய தமிழ்ச் சமூகம்தான். சாதி எதிர்ப்புக்காக என்னைப் போராடவைத்ததும் இதே சமூகம்தான்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதிதான் முக்கியமான சாட்சியாக இருந்தார். வழக்குத் தொடுப்பதற்கு ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருந்தார். இப்போது, அவர் மாறியிருக்கிறார் என்றால் அவரில் குடும்பச் சூழலும் சமூகமும் உடன் இருப்பவர்களும் கொடுத்த அழுத்தம்தான் காரணம்.
சுவாதிக்குத் திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அவங்களோட சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முழுக்க முழுக்க சாதியவாதிகள் மற்றும் பெற்றோர் கட்டுப்பாட்டில் இப்ப அவங்க இருக்காங்க. சாதி ஒழிப்பு, முற்போக்கு பேசக்கூடிய அறிவார்ந்தவர்கள் அவருடன் இல்லை. நாம் அவரை தொடர்புகொண்டாலும் அவர் நம்மிடம் பேசத் தயாராக இல்லை. அவருக்கான தைரியத்தைச் சமூகமும் அரசாங்கமும்தான் கொடுக்கவேண்டும். அவங்களோட சூழலை நாம் கவனத்தில் கொண்டாலும் அதேநேரம், சுவாதி மனசாட்சியோடு உறுதியாக நின்று சாட்சி சொல்லவேண்டும். போனது கோகுல்ராஜ் உயிர் மட்டுமல்ல, இந்த வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவும் மர்ம மரணம் அடைந்திருக்கிறார்.

அந்த வழக்கை அவர் நேர்மையாக விசாரித்ததாலேயே அழுத்தம் அதிகமாக இருந்தது. ஒரு அதிகாரிக்கே இப்படியென்றால், சுவாதி எம்மாத்திரம்? அதனால், அவர் தைரியமாக வாக்குமூலம் வழங்க அரசு துணையாக நிற்கவேண்டும். நாங்களும் துணையாக நிற்கிறோம். அப்போதுதான், ஆணவ கொலையாளிகளுக்கு அச்சம் ஏற்படும். சுவாதி அநீதிக்குத் துணைபோகக்கூடாது. பலவருடங்களாக ஆணவக்கொலைக்குத் தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று போராடிவருகிறோம். சமூகநீதிக்காகத் துணைநிற்கும் தி.மு.க அரசு இந்தத் தனிச்சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்” என்கிறார் கோரிக்கையாக.