
“சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா?”
‘அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து தைரியமாகக் கடந்த ஆண்டு சபரிமலைக்குச் சென்றவர்கள் கனகதுர்கா மற்றும் பிந்து. இந்த இருவரில் பிந்து `நவோதானா கேரளம் ஸ்ரீஸ்திரி பக்ஷ கோட்டையம்மா’ அமைப்பைச் சேர்ந்தவர்.
பல ஆண்டுகளாகப் பெண் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். பிந்துவையும் கனக துர்காவையும் கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இந்துத்துவ அமைப்பினரும் பக்தர்களும் போராடினர். கடைசிவரை ஒரு பெண்ணும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சபரிமலை கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டும் தன் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை பிந்து. திருப்தி தேசாயுடன் சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தவர், கொச்சியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்றார். அப்போது அங்கு வந்த காவி வேட்டி அணிந்திருந்த நபர் ஒருவர் பிந்துமீது மிளகு ஸ்ப்ரே தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிந்துவிடம் பேசினேன்.
``திருப்தி தேசாயுடன் சபரிமலைக்குச் செல்ல அனுமதி கோரி காவல்நிலையத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு மறைந்திருந்த சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், என் மீது மிளகு ஸ்ப்ரே அடித்தார். முகமெல்லாம் எரிய ஆரம்பித்துவிட்டது. அங்கு இருந்தவர்கள் யாருமே அதைத் தடுக்க முன்வரவில்லை.

காவல்துறையில் இது குறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பகிரங்கமாக ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் போலீஸோ, அரசாங்கமோ எடுக்கவில்லையென்றால் இது எப்படியான அரசாங்கம் என்று புரிந்துகொள்ளலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பெண்களுக்காகப் போராடுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டு பதவிக்கு வருகிறார்கள். ஆனால், ஓட்டு வாங்குவதற்காகப் பெண்களின் உரிமைகளை மறுக்கிறார்கள். குறிப்பாக, ஒரு பெண் தனக்கான உரிமையை உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படிகூடப் பெற முடியவில்லை என்றால் இந்த அரசாங்கம் எதற்கு?”
“சபரிமலை விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு மாறிவிட்டது என்று நினைக்கிறீர்களா?”
“சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பை மதிப்பதுபோல ஒருசார்பு மக்களை நம்ப வைத்துவிட்டு, உடனடியாக வாக்கு வங்கியைப் பாதித்துவிடும் என்று தனது கொள்கைக் கோட்பாட்டையே மாற்றிக்கொண்டு முழுநேர அரசியல்வாதியாகி விட்டார் பினராயி விஜயன். கம்யூனிஸ்ட்டுகளும் அரசியல் சந்தர்ப்பவாதிகள்தான்!”
“உங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முதலமைச்சரைச் சந்தித்து முறையிட இருக்கிறீர்களா?”
``நான் ஏன் அவரைச் சந்திக்க வேண்டும்? ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றியும் பெண்கள் உரிமை பற்றியும் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலம் இது. இந்த மாநிலத்தில் உரிமையைக் கேட்கும் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்படியான தாக்குதல்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. அது குறித்து ஒரு வார்த்தைகூட, கண்டனக் குரலைக்கூட எழுப்பாதவர்களை நான் ஏன் சந்திக்க வேண்டும்? அவர்கள்தாம் ‘நான் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவள்’ என்று பரப்புகிறார்களே! ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஓட்டுக்காக இந்தப் பிரச்னையைத் திசை திருப்ப முயல்கிறார்கள். பினராயி விஜயன் அரசு, பெண்களுக்கான அரசு என்று நம்பி இருந்தோம். ஆனால், அந்த நம்பிக்கை தற்போது போய்விட்டது. என் மீது தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்துக்குச் செல்வேன்.”

“பெண்கள் குறித்து சி.பி.எம் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?”
“சபரிமலை விவகாரத்தில் பி.ஜே.பி மற்றும் சங் பரிவார் அமைப்புகளைப் போன்று சி.பி.எம் கட்சியும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. இது பினராயி விஜயன் அரசுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும். ஒரு அரசாங்கம் பெண்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தினால் மட்டும் அந்த அரசு பெண்களுக்கான அரசு என்று கூறிவிட முடியாது. பெண்களின் உரிமைகளை முழுமையாகப் பேச வேண்டும்.”
“உங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டு பயப்படுகிறீர்களா?”
``நான் எதைக் கண்டும் யாரைக்கண்டும் அஞ்சவில்லை. இப்படியான தாக்குதல்களைக் கண்டு பயந்து வீட்டில் முடங்கிவிடுவேன் என்று இந்துத்துவ அமைப்புகள் நினைக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டு நான் பயப்படவில்லை. எனது உரிமைகளைப் பற்றிப் பேசும்போது நான் யாருக்காக பயப்பட வேண்டும்? அதனால் யார் தடுத்தாலும் அதையும் மீறி நான் சபரிமலைக்குச் செல்வேன். அப்படியும் என் உரிமை பறிக்கப் படுமானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வேன்”