Published:Updated:

மேடம் ஷகிலா: 10 | அரசியல் பேசு... அரசியல் பழகு... அரசியலில் இறங்கு!

மகளிருக்கான பிரத்யேக பூத்
News
மகளிருக்கான பிரத்யேக பூத் ( Representational Image Only )

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளில் பெண்களுக்கான நலத்திட்டங்களை அனைத்து கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. அதை தீர்மானிக்கும் பொறுப்பில் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எத்தனை பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியம்.

Published:Updated:

மேடம் ஷகிலா: 10 | அரசியல் பேசு... அரசியல் பழகு... அரசியலில் இறங்கு!

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளில் பெண்களுக்கான நலத்திட்டங்களை அனைத்து கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. அதை தீர்மானிக்கும் பொறுப்பில் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எத்தனை பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியம்.

மகளிருக்கான பிரத்யேக பூத்
News
மகளிருக்கான பிரத்யேக பூத் ( Representational Image Only )
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சரியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்பதை மீண்டும் உறுதிசெய்திருக்கிறார் தலைமைத்தேர்தல் அதிகாரி.

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் பெண்களுக்கான வாக்குரிமை பெறுவது மிகக் கடினமாக இருந்தது. வசதியுள்ளவர்கள், கல்வியறிவு உடையவர்கள் என்று சிறப்பு அந்தஸ்து உடைய ஆண்களுக்கு மட்டும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. பெண்களுக்கும் அப்போது அதே விதி பின்பற்றப்பட்டது. 1951 பொது தேர்தலில் அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை வந்துவிட்டாலும் இன்றும் பெரும் அளவில் பெண்கள் அரசியல் ஈடுபாடு இல்லாமலும், சரியான வேட்பாளரை தேர்வு செய்வது பற்றிய முக்கியத்துவத்தை உணராமலும் இருக்கிறார்கள்.

நமக்கான சுதந்திரமும், உரிமையும் என்று பேசும்போது பெரும்பாலான பெண்கள் நாம் சுதந்திரமாகதானே இருக்கிறோம் என்று கேட்கின்றனர். நிச்சயமாக இல்லை! முன்னெப்போதையும்விட பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வீட்டு வாசலில் விளையாட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை உள்ளது. பள்ளியில் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும், பெண் பேராசிரியரே மாணவிகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்த முயற்சி செய்த சம்பவங்களும் பெண்களுக்கு பள்ளி, கல்லூரிகளே பாதுகாப்பில்லை என்கிற சூழலை உருவாக்கியுள்ளது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

வசதி படைத்தோர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், அவர்களின் பிள்ளைகள் சமுக வலைதளங்களில் கல்லூரி மாணவிகளைப் பின்தொடர்ந்து, காதல்/நட்பு முறையில் பழகி, பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் சமீபத்தில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கின.

இவை எல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண் குழந்தைகளின் கல்விக்கு பெரும் தடையாக இருக்கின்றன.

அதேபோல் இரவில் தனியாக வீடு திரும்பும் ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைகள், திரைத்துறை, தொலைக்காட்சி சீரியல் நடிகைகளின் தற்கொலைகள், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவருடன் பணிபுரியும் பெண் காவலரே அளித்திருக்கும் புகார் என நம் கண்முன் எவ்வளவோ குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

பொதுவெளியில் தைரியமாக தன்னையும் தன் திறமைகளையும் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்ற பெண்களுக்கு பணி இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், உணர்வுச் சுரண்டல்களும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள் முடக்க பல காரணங்களை நாள்தோறும் உருவாக்குகிறது சமூகம்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

கூலித் தொழிலாளிகள் முதல் படித்தவர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என எல்லா தரப்பினரும் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். விரைவான, நேர்மையான நடவடிக்கைகள் இல்லை. ஆண்களுக்காக ஆண்களால் இயற்றப்படும் தண்டனை சட்டங்கள் கடுமையானதாக இல்லை. அரசியல் மற்றும் ஆட்சியில் பெண்களின் சரி நிகரான பிரதிநிதித்துவம் இக்குற்றங்கள் குறைவதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கும்.

பெண்கள் அரசியல் பேசுவதும், தங்களுக்கான வேட்பாளரை சரியாகக் கண்டறிவதும், கட்சி மற்றும் ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவமும் கிடைத்தால் மட்டுமே பெண்களுக்கான பிரச்னைகளும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசப்படும். அதற்கு உதாரணம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா #MahuaMoitra. மக்களவையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், விவசாயிகளின் பிரச்னைகள் முதல் பாலியல் குற்றங்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைவரை அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக தொடர்ந்து அவர் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்.

பல காலமாக மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது குடிநீர் தேவை. எல்லா வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லும் திட்டங்கள் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், இன்னமும் பெரும்பாலான இரண்டாம் கட்ட நகரங்களிலும், கிராமங்களிலும் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் மிகவும் அவதியுறுபவர்கள் பெண்கள்.

தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்து நகரங்களிலும் பெரிய பாலங்கள், அதிவேகமாக செல்ல எட்டு வழிச்சாலைகள் என சிந்திக்கும் ஆட்சியாளர்கள் பெண்களுக்கான அடிப்படை பிரச்னையான குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய முயற்சி செய்வதில்லை. இதற்கு பின்னால் இருப்பது பெண்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாளர்களின் அலட்சியம். குடிநீர் விநியோகத்தை தனியார் மயமாக்கி குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழலும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பொருளாதர பிரச்னையில் இருக்கும் குடும்பங்களில் இது கூடுதல் சுமை.

வேலைக்குச் செல்லும் பெண்கள்
வேலைக்குச் செல்லும் பெண்கள்
representational image

இயற்கை சீற்றங்கள் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வுவரை அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. புயல், மழை, வெயிலினால் பயிர்கள் நாசமாகும்போது அரசாங்கத்திடம் விவசாயிகள் உதவிக்கேட்டு நிற்கும் செய்திகளை எளிதாக கடந்துபோகும் நமது கோபம் அதிகபட்சம் வியாபாரிகளோடு முடிந்துவிடுகிறது.

வெங்காயம் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கை என்ன என்று கேட்டால், ”எங்கள் வீட்டில் வெங்காயம் சாப்பிட மாட்டோம். அதனால் எனக்கு அது பற்றி தெரியாது” என்று சொல்பவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சாமானியர்களாகிய நாம் அரசியல் பேசாமலும், அரசியலில் ஈடுபடாமலும் ஒதுங்கி இருப்பது.

பெண்கள் தங்களுக்குள் இசை, உணவு, சினிமா ரசனை ஆகியவற்றை வெளிப்படுத்தும்போது அங்கு சாதாரணமாக நிகழும் உரையாடல், தங்களது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்போது மட்டும் பிரச்னையாக மாறுகிறது. காரணம் இன்றைய பெண்களின் அரசியல் நிலைப்பாடுகள் பெரும்பாலும் மதம், கடவுள், சாதியை உள்ளடக்கியதாக இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், சாதி/மத தீண்டாமைகளையும் பலரும் குழப்பிக் கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கை என்பது தனிமனித சுதந்திரம். ஆனால் அந்த சுதந்திரத்தை பறிக்கும், சக மனிதனை அடிமையாக்கும் சாதி/மத வேறுபாடுகள் மற்றும் பிற்போக்குத்தனங்களின் அடிப்படையில் வாக்களித்தல் மனிதத்தன்மை அற்றது.

மீன்பிடித் தொழிலில் பெண்கள்
மீன்பிடித் தொழிலில் பெண்கள்

நம் தெருவில்/ஊரில் முடிவுறாமல் பாதியில் நிற்கும் பொது கட்டுமானப் பணிகள், சாக்கடை வசதிகள் என நாள்தோறும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் முதல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்வரை புகார் கொடுக்கவும், கேள்வி கேட்கவும் நமக்கு அதிகாரம் உண்டு. நமது பிரதிநிதியாக ஆட்சிக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் தொகுதியில் அவர்களது அலுவல் நேரத்தில் சாமனியர்களுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாக இருத்தல் அவசியம்.

அரசியல்வாதிகள் மேல் வைக்கும் மிகப்பெரிய குற்றாச்சாட்டு ஊழல். சாதாரண சாலை வசதிகள், தெரு விளக்குகளில் இருந்து, பெருந்தொற்று காலத்து மருத்துவ வசதிகள், போர் விமானங்கள்வரை அக்காலம் முதலே ஊழல் குற்றச்சாட்டு இல்லாத கட்சிகளே இல்லை எனும் அளவிற்கு ஊழல் தேசிய மயமாக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சிலரே பதவியில் இருப்பதும், மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதும் ஒரு முக்கிய காரணம். அரசியல்வாதிகள் என்றாலே ஊழல்வாதிகள்தான் என்று நாம் ஒதுங்கிக்கொண்டால் மீண்டும் அவர்களேதான் ஆட்சியில் அமர்த்தப்படுவார்கள்.

மத்திய/மாநில அரசுகள் கொண்டு வரும் புது சட்டங்களை முழுவதும் நீக்க/திருத்த சிறுக்குழுக்களின் போராட்டங்கள் மட்டும் போதாது. மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு மக்களுடன் நிற்கும் வலுவான எதிர்கட்சிகளும் அவசியம். ஏனெனில் ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்னைகளுக்கு பல நேரங்களில் அரசுகளை எதிர்த்து நிரந்தர தீர்வை தரக்கூடியது நீதிமன்றங்கள் மட்டுமே. சுயலாபத்திற்காக அல்லாமல் நம்மோடு போராட்டக் களத்தில் நிற்கும், நமக்காக சட்டப் போராட்டம் நடத்தும் வலுவுள்ள அரசியல் கட்சிகள் பற்றி தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்.

அரசியல் கூட்டத்தில் பெண்கள்
அரசியல் கூட்டத்தில் பெண்கள்

தலித் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் எவ்வளவு அதிகரிக்கின்றதோ அதே அளவு பொது சமூகத்திற்கு தெரியாமல் மறைக்கப்பட்டும் வருகிறது. அவ்வாறு குற்றங்கள் நடக்கும்போது தலித் இயக்கங்களும், தலித்துகளுக்கான கட்சி என அடையாளப்படுத்தப்படும் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுப்பதும் நடக்கிறது. அது அவர்கள் பொறுப்பு அல்லது பிரச்னை என்பதுபோல மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். உத்திரபிரதேசத்தில் நடக்கும் தலித் வன்கொடுமைகள் இந்தியா முழுவதும் தெரியும் அளவிற்குகூட தமிழ்நாட்டில் நடக்கும் தலித் பெண்களின் பிரச்னைகள் தமிழ்நாட்டுக்குள்ளேயே தெரிவதில்லை.

அடுத்த கிரகங்களுக்கு விண்கலம் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து இருக்கும் சூழலில் இன்னும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதும், அச்சமயத்தில் விஷவாயு தாக்கி உயிர் இழப்பதும் நடந்துக் கொண்டிருக்கிறது. கண்டும் காணாமலும் மக்கள் அதை எளிதாக கடந்து போகின்றோம்.

மக்களாட்சி என்பது அனைத்து மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு இயங்கும் ஆட்சியாக இருக்க வேண்டும். நம்மைவிட பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், சாதி/மத ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் நன்மை செய்யக்கூடியவர்களாக இருக்கும் வேட்பாளர்களையும், கட்சியையும் கண்டறிந்து வாக்களிக்க வேண்டும்.

மேடம் ஷகிலா
மேடம் ஷகிலா

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளில் பெண்களுக்கான நலத்திட்டங்களை அனைத்து கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. அதை தீர்மானிக்கும் பொறுப்பில் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எத்தனை பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பதும் இங்கே முக்கியம். பெரும்பாலான கட்சிகளில் மாநில அளவிலான பதவிகளில், உயர்மட்ட ஆலோசனை குழுக்களில் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இன்றைய நலத்திட்டங்களை விட நாம் வாக்களிக்கும் கட்சியில் பெண்களுக்கான இடம் என்ன என்பதையும் கணக்கில் கொள்வது அவசியம்.

நாம் அரசியல் பேசுவதால் மற்றவர்களிடத்தில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு உறவில் பிரிவு வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் இது ஆரோக்கியமான போக்கு அல்ல. நமக்கு நெருங்கியவர்களின் மன வருத்தத்தை விட நமக்கான உரிமைகளும், சுதந்திரமும் மிக அவசியம். நாம் அரசியல் பேசாமல், அரசியலில் ஈடுபடாமல் ஒரு காலத்திலும் நமக்கான உரிமைகள் பெறவே முடியாது.