Published:Updated:

மேடம் ஷகிலா - 11: ஜெயலலிதா, கனிமொழி, குஷ்பு... ஆ.ராசா, லியோனி, எஸ்.வி.சேகர்... அரசியல் என்பது?!

ஜெயலலிதா, கனிமொழி, குஷ்பு... ஆ.ராசா, லியோனி, எஸ்.வி.சேகர்
News
ஜெயலலிதா, கனிமொழி, குஷ்பு... ஆ.ராசா, லியோனி, எஸ்.வி.சேகர்

தி.மு.க எம்பி ஆ. ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு வந்த வழிமுறை தவறானது என்று சொல்வதற்காக எடுத்துக்கொண்ட உவமை அந்த வழிமுறையை விட தவறாக போய் முடிந்தது.

Published:Updated:

மேடம் ஷகிலா - 11: ஜெயலலிதா, கனிமொழி, குஷ்பு... ஆ.ராசா, லியோனி, எஸ்.வி.சேகர்... அரசியல் என்பது?!

தி.மு.க எம்பி ஆ. ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு வந்த வழிமுறை தவறானது என்று சொல்வதற்காக எடுத்துக்கொண்ட உவமை அந்த வழிமுறையை விட தவறாக போய் முடிந்தது.

ஜெயலலிதா, கனிமொழி, குஷ்பு... ஆ.ராசா, லியோனி, எஸ்.வி.சேகர்
News
ஜெயலலிதா, கனிமொழி, குஷ்பு... ஆ.ராசா, லியோனி, எஸ்.வி.சேகர்
”உலகத்தின் தொடக்கம் பெண்”, ”வாழ்வில் எல்லாவற்றையும்விட முதன்மையான உறவு தாய்”, ”குடும்பத்தின் அடிநாதம் பெண்கள்”, “பெண்கள் நாட்டின் கண்கள்”... இருபது நாட்களுக்கு முன்புதான் அனைத்து அரசியல் கட்சியினரும் உலக மகளிர் தினத்தன்று போதும் போதும் எனுமளவு பெண்களை கொண்டாடினார்கள். கொண்டாட்டமும், வாழ்த்து செய்திகளும் அந்த நாளோடு சரி.

கடந்த இருபது நாட்களாக தாங்கள் செய்த, செய்ய மறந்த நலத்திட்டங்கள், கட்சிகள் கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பேசாமல் ஒருவரின்மீது ஒருவர் அவதூறு சொல்கிறேன் என பெண்களின் மீது சேற்றை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மனிதரின் வாழ்வு தாயின் பனிக்குடத்தில் தொடங்குகிறது என்று புகழ்கிறார்கள். பின்னர் பிரச்னை என்று வரும்போது வசைபாடவும் எதிர்ப்பவரின் பிறப்பிலிருந்து தொடங்குகிறார்கள். உலகம் முழுவதுமே ஒரு மனிதன் சக மனிதனை அவமானப்படுத்துவதற்காகவும், நிலைகுலையச் செய்வதற்காகவும் எடுக்கும் முதல் ஆயுதம் தாய், சகோதரி என எதிரியின் வீட்டு பெண்களின் ஒழுக்கத்தையும், உடலையும் பற்றிய வசைகளும்தான்.

அரசர் காலத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டை போரில் வென்றதும் அரசாங்கத்தின் சொத்துக்களை உடைமையாக்கிக் கொள்வதுபோல தோற்றுப்போன நாட்டின் பெண்களையும் உடைமையாக்கி அபகரித்து சென்ற கதைகள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன. தங்கள் வீட்டு பெண்ணை கடத்தி செல்பவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் ஆந்திராவில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு வந்த கதைகள் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே உண்டு. அந்த அளவிற்கு பெண்கள் உடைமைகளாக பார்க்கப்பட்ட காலம் இருந்தது.

பெண் வாக்காளர்கள்
பெண் வாக்காளர்கள்

சிறிது நாகரிகமும், அறிவும் வளர்ந்து ஜனநாயக முறை வந்தபிறகும் கூட பெண்களை ஆணின் உடைமையாக எண்ணும் நிலை மாறவில்லை. அதனால்தான் இன்றும் வீட்டில் நிகழும் சாதாரண சண்டைகளில் இருந்து சோஷியல் மீடியாவரை ஒருவர் இன்னொருவரின் மீது கோபத்தை காட்ட பெண்களையும், பெண் உடலையுமே தேர்வு செய்கின்றனர்.

நம் நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் என்றும், பெண்களே ஆட்சிமாற்றத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள் என்றும் தேர்தல் ஆணையம் சொல்கிறது. பல ஆண்டுகளாக கவர்ச்சிகரமான நலத்திட்டங்கள் பெண்களின் வாக்குகளைப் பெறவேண்டும் என்றே அறிவிக்கப்படுகின்றன. ஆனால் அரசியலில் அநாகரிகமான உவமைகளில் இருந்து அவதூறு பேச்சுக்கள் வரை பெண்களையும், உறவுமுறைகளையும் குறிப்பிட்டு பேசுவது மட்டும் மாறவேயில்லை.

பெண்களை ஒழுக்க ரீதியாக சாடுவது அரசியலில் கட்சி பாகுபாடற்று ஆரம்பக் காலம் தொட்டே இருந்து வருகிறது.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளாக இருந்து அரசியலுக்கு எளிதாக வந்துவிட்ட இந்திராகாந்திக்கும்கூட பெண் என்பதால் சந்திக்க வேண்டிய அவதூறுகள் அவர் இறந்து இத்தனை வருடங்கள் கழித்தும் தொடர்கின்றன. அவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து கதைகள் தொடர்ந்து இன்றும் பரப்படுகின்றன.

ஜெயலலிதாவை அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவரது தோழி சசிகலா உடனான உறவு குறித்தும் இன்றும் விமர்சனங்கள் என்கிற பெயரில் அநாகரிக பேச்சுக்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஜெயலலிதாவை படு மோசமாக விமர்சனம் செய்பவர்கள் எம்.ஜி.ராமச்சந்திரனைப் பற்றி பேசாததற்கு அவர் ஆண் என்பது மட்டுமே காரணம் என புரிந்து கொள்ளலாம்தானே.

ஒரு நடிகையாக மிக இளம் வயதில் திரைத்துறையில் நுழைந்ததிலிருந்து, தற்போது இறந்து நான்கு ஆண்டுகள் ஆன பின்பும்கூட ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை நாள்தோறும் விமர்சனத்திற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவை ஆதரிக்கும் பெண்களும்கூட அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து நிறைய பேசியதை சிறுவயதில் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஜெயலலிதாவிற்காக வருத்தமும் அதேசமயம் ஒரு பெண் எவ்வளவு துணிச்சலாக இருக்கிறார் என்ற ஆச்சரியமும் இருந்தது.

ஜெயலலிதா - சசிகலா
ஜெயலலிதா - சசிகலா

ஜெயலலிதாவிற்காக வருந்தும் அதேவேளையில் அவர் செய்த சில விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். தான் வாழ்ந்த காலத்தில் ஒரு பெண்ணாக, ஒரு முதலமைச்சராக, ஒரு கட்சியின் தலைவியாக, ஜெயலலிதா மற்ற பெண்களுக்கு இழைத்த அவமரியாதைகள் எண்ணற்றது.

குறிப்பாக ஜெயலலிதா 2011 தேர்தலின்போது பிரசார மேடையில் கனிமொழியின் தனிப்பட்ட வாழ்வு குறித்து நாகரிகமற்ற முறையில் அவதூறாக பேசியிருக்கிறார். இதுபோன்ற பாலியல்/ஒழுக்கம் சார்ந்த வசவுகளை, பொய்களை, அநாகரிக செயல்களை ஆண்கள் மட்டும் செய்வதில்லை என்றும் ஆணாதிக்கம் என்பது ஆண்கள் சார்ந்தது மட்டுமல்ல என்பதையும் புரிந்துகொள்ள தொடக்க புள்ளியாக இருந்தது அந்த மேடை பேச்சுதான்.

பெண் என்பதால் மட்டுமே இணையத்தில், பத்திரிகைகளில், எதிர்க்கட்சிகளின் பிரசார மேடைகளில் இன்றுவரை மிக மோசமாக வார்த்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்களில் முக்கியமானவர் கனிமொழி.

மேடைகளில் கவன ஈர்ப்பிற்காக தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது மராத்தி மேடை நாடகங்களில் தொடங்கியது என்று சொல்வார்கள். இலக்கியத்தில் கூட மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்கிறேன் என்று தகாத வார்த்தைகளையும், பெண்களைப் பற்றி மோசமான பேச்சுக்களையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகள் பேசுவது தவறல்ல என்று வாதாடும் எழுத்தாளர்களும், முற்போக்காளர்களும் இருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டங்களை பொறுத்தவரையில் கூட்டத்தினரை தக்க வைப்பதற்காக பெரும்பாலான கட்சிகளில் ஆபாசமாக பேசக்கூடிய பேச்சாளர்கள் உண்டு. அதில் பெண் பேச்சாளர்களும் அடக்கம்.

தமிழ்நாட்டில் சமகாலத்தில் இரண்டு முக்கிய முதலமைச்சர்களாக இருந்தவர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா. இருவருமே அவர்களின் அரசியல் மற்றும் ஆட்சி பற்றிய விமர்சனங்களைவிட தனிமனித தாக்குதல்களை அதிகமாக எதிர் கொண்டவர்கள். ஜெயலலிதாவிற்கு அவருடன் முடிந்துவிட்ட தனிமனித தாக்குதல்கள் கருணாநிதிக்கு மகள், பேத்தி என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கனிமொழி
கனிமொழி

பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர் பத்திரிகைத்துறையில் இருக்கும் பெண்களை மிக மோசமாக ஒழுக்கம் சார்ந்து விமர்சனம் செய்தார். அவருக்கு எதிராக பெண்கள் அமைப்புகளும், பத்திரிகைத் துறையில் இருப்பவர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் வருடக்கணக்காக அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதே போல் பா.ஜ.க-வை சேர்ந்த காரைக்குடி வேட்பாளர் ஹெச்.ராஜா தி.மு.க-வின் கனிமொழி கருணாநிதியை, "கள்ள உறவில் பிறந்த கள்ளக் குழந்தை” என்று தரம்தாழ்ந்து பேசியதும், இணையத்தில் ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் இன்றி அப்படியே இருக்கிறது.

ஊடகத்தில் வேலை செய்யும் பெண்கள், நடிகைகள், அரசியலில் இருக்கும் பெண்கள் என எந்த துறையாக இருந்தாலும் பொதுவெளியில் இயங்கும் பெண்கள் மீது ஆளும்கட்சியினரால் கொட்டப்படும் வன்மத்திற்கு எதிராகப் பெரும்பாலும் எந்த அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை.

அரசியலில் ஈடுபடும் பெண்களில் மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப்படுபவர்கள் நடிகைகள். சமீபத்தில் குஷ்பு கட்சி மாறியபோது கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோராலும் விமர்சனம் செய்யப்பட்டார். அவர் புதிதாக சேர்ந்திருந்த கட்சியின் ஆதரவாளர்கள்கூட குஷ்பு தங்கள் கட்சிக்கு வருவது மகிழ்ச்சிகரமானது என்று அரசியல் பார்வையில் அல்லாமல் நடிகை என்கிற ரீதியில் மட்டுமே கூறியிருந்தனர். குஷ்புவை விமர்சனம் செய்தவர்களில் பெண்களும் உண்டு.

அதேபோல் பெண்ணிய போராளிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் குஷ்புவை விமர்சனம் செய்பவர்களை கண்டிக்கிறேன் என்று பதிலுக்கு கனிமொழியை விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். தன்னை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட பிறகு அரசியல் சாதகங்களுக்காக தங்களுடைய கொள்கையில் நிலையில்லாமல் இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள்தான் மிகுந்த அயர்ச்சியை தருகிறார்கள்.

நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு

கடந்த வாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருவர் பிரசாரத்தின் போது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்கும் திட்டத்தை விமர்சனம் செய்து பேசியது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. இந்தியா முழுவதுமே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சுகாதாரக் குறைவினால் இளம் பெண்கள் பாதிக்கப்படுபவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாக #MenstrualHygieneDay கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக இலவசமாக நாப்கின் கொடுக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் இலவச நாப்கின் கொடுக்கும் திட்டத்தை தி.மு.க தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறது.

ஆனால் பேராவூரணி நாம் தமிழர் வேட்பாளர், ”தி.மு.க எப்படி என் வீட்டு பெண்களுக்கு நாப்கின் கொடுக்கலாம். நாங்கள் நாப்கின் வாங்கக்கூட வக்கற்றவர்களா?” என்று கேட்பதன்மூலம் இன்னும் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்த அடிப்படை அறிவோ, பெண் குழந்தைகளின் மீது அக்கறையோ இல்லை என்று தெரிகிறது. அதோடு நின்றுவிடாமல் மிகவும் தரம் தாழ்ந்து தி.மு.க தலைவரின் குடும்ப பெண்கள் ஒவ்வொருவரையும் பெயரையும் சொல்லி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து பிரசார மேடையில் பேசினார். அவரது பேச்சு நமக்கு கோபத்தை உண்டாக்குகிறது என்றால் அதற்கு ஆர்ப்பரித்து சிரித்து கைத்தட்டும் கூட்டம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வீட்டு பெண்களின் நிலையை எண்ணினால் பதற்றமாக இருக்கிறது.

ஓர் ஆணை திட்டுவதற்காக அவர் வீட்டில் இருக்கும் பெண்களை வசைபாடுவதும், பதிலுக்குப் பேசியவரின் வீட்டு பெண்களை அதே மொழியில் தரக்குறைவாகப் பேசுவதற்கும் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறன.

பெண்ணை ஆணின் உடைமையாக எண்ணுகிற மனப்போக்கு இன்றும் கல்வி, வர்க்கம், சாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் எல்லா தரப்பினரிடத்திலும் இருக்கின்றது. ஒருவர் நம் வாகனத்தின் மீது கல்லெறிந்தால், துரத்தி சென்று அவரின் உடைமைகளை சேதப்படுத்தும் அதே மனநிலைதான் இங்கு தன் வீட்டு பெண்களை வசைப்பாடுபவர்களின் வீட்டு பெண்களை பதிலுக்கு கேவலப்படுத்துவதும்.

கற்பு புனிதமானது என்றும் அது பெண்களுக்கு மட்டுமே உள்ள விஷயம் என்றும் இந்த சமூகம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது. குடும்ப கௌரவத்தை பொக்கிஷமாகவும் பெண்கள் அதை காக்கும் பெட்டகமாகவும் சமூகம் எண்ணுகிறது. இங்கே புனிதம் என்று எதுவும் இல்லை. சர்வ நிச்சயமாக அது பெண்களின் உடலில் இல்லை என்கிற புரிதல் மட்டும்தான் பெண்ணை சக மனுஷியாக பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தும்.

லியோனி
லியோனி

எல்லா மனிதர்களும் ஒன்று போல் இருப்பதில்லை. அழகு என்பதற்கான ஓர் அளவுகோலை நிர்ணயித்து அதன்படி இல்லாதவர்களை உருவ கேலி செய்வது குற்றம். கேலி செய்பவர்களையோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையோ பதிலுக்கு அதேபோல் குறை சொல்லி பேசுவதும் தவறு.

உடலில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்ட ஊனம் என்று வழங்கி வந்த பதத்தை மாற்றி மாற்றுத்திறனாளி என்ற சொல்லை பயன்படுத்துமாறு செய்தவர் கருணாநிதி. ஆனால் தி.மு.க சார்பில் பிரசாரம் செய்யும் பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, “பெண்களின் இடுப்பு தற்போது பேரல் போல் ஆகி விட்டது” என்று உடல் பருமன் குறித்து உருவக் கேலி #BodyShaming செய்திருக்கிறார். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருந்தாலும் இதுபோல் பிற்போக்குத்தனமாக பேசக்கூடியவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

இது நடந்த அடுத்த நாளே தி.மு.க எம்பி ஆ. ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு வந்த வழிமுறை தவறானது என்று சொல்வதற்காக எடுத்துக்கொண்ட உவமை அந்த வழிமுறையை விட தவறாக போய் முடிந்தது. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறையான கொள்கை அடிப்படையிலானது அல்ல என்று விளக்குவதற்காக அது கள்ள உறவு என்று குறிப்பிடுகிறார் ஆ.ராசா.
அதுபோக முதலமைச்சரின் பதவி காலத்தை குறிப்பதற்காக குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையைப் போல என்கிறார். உறவு முறைகளையும், பிரசவ முறைகளையும் இழுத்து உவமை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் இவையெல்லாம் மேடையில் கவன ஈர்ப்பிற்காக செய்யப்படுகிறது. சாமானியர்களின் மொழியில் பேசுகிறோம் என்கிறார்கள். சாமனியர்களின் இதுபோன்ற மொழியை சரி செய்ய வேண்டிய கடமை தலைவர்களுக்கு அல்லவா இருக்கிறது?அரசியலில் இதைவிட மலிவான பேச்சுககள் இந்த நிமிடம்வரை உருவாகிக்கொண்டே இருந்தாலும் ஆ. ராசா போன்ற முற்போக்காளர்கள் பேசும்போது அது சர்ச்சையாகிறது. தனது தவறான உவமைக்காக முதல்வர் பழனிசாமியிடம் மன்னிப்புக் கோரி இருக்கிறார் ஆ. ராசா.

ஆ.ராசா பேசியதைவிட அருவருப்பான விஷயம் முதல்வர் பதவிக்கு வந்ததைப் பற்றி அவர் பேசியதை முதல்வரின் தாயாரை பற்றி பேசியதாக திரித்து அ.தி.மு.க-பா.ஜ.க-பா.ம.க தலைவர்கள் இரண்டு நாட்களாக முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வரும் மற்றவர்களும் இறந்துபோன முதல்வரின் தாயார் மீது தெரிந்தே அவதூறு பரப்பி தங்கள் தேர்தல் நேர லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

இங்கு ஒரு பெண் எப்படி பாலியல் மற்றும் ஒழுக்கம் சார்ந்த பேச்சுகளால் அவமானப்படுத்தப்படுகிறாளோ அதே போல் ஒரு ஆணை அவமானப்படுத்துவதற்காக சாதியும், ஆண்மை போன்ற விஷயங்களும் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஆண் தலித்தாக இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம்.

ஓ.பன்னீர்செல்வத்தை பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி ஒரு பொதுமேடையில், ஆண்மை இல்லாதவர் என்று சொல்கிறார். அங்கிருக்கும் ஆண்களும், பெண்களும் அதைக்கேட்டு கைதட்டி சிரிக்கிறார்கள். அதற்காக அவர் மேல் எந்த வழக்கும் பதியவில்லை. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்கள்கூட கேட்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி & ஆ.ராசா
எடப்பாடி பழனிசாமி & ஆ.ராசா

முதல்வர் பழனிசாமி ஆ.ராசாவை, ''என்னுடன் உரையாட உனக்கு என்ன தகுதி இருக்கிறது. உன் பின்புலம் என்னவென்று தெரியாதா?” என்று சாதியை குறிப்பிட்டு பேசினார். அதற்காக யாரும் இன்றுவரை வருத்தமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு சுப்பிரமணிய சுவாமி பிரதமர் மோடியைவிட தான் மேலானவர் என்றும், தான் சொல்வதை செய்யும் காவலாளி இடத்தில் இருக்கும் சாதியை சேர்ந்தவர்தான் மோடி என்றும் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். நாட்டின் பிரதமருக்கே இந்த நிலைதான்.

அரசியல் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள முடியாமல் எதிரியின் வீட்டு பெண்களை அவமானப்படுத்துவது, சாதி மற்றும் மதத்தை வைத்து அசிங்கப்படுத்துவது, ஆண்மையை குறிப்பிட்டு கேலி செய்வது இன்றும் பெரும்பாலான அரசியல் கட்சிகளில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் கட்சிகளும் இதில் அடக்கம்.

கொள்கை, ஆட்சி, செய்த நல திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி பேசும் ஆரோக்கியமான அரசியல் சூழலும், பிரசார முறைகளும் சாத்தியமாகும் அந்த நாளும் வந்திடாதோ?