திரெளபதி முர்மு முதல் பூஜா ஹெக்டே வரை... 2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் பெண்கள்!

காஜல் அகர்வால்தான், தென்னிந்திய நட்சத்திரங்களில் அதிகம் தேடப்பட்டவர்களில் முதலிடம் பிடித்திருக்கிறார்.

2022-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் பெண்கள்!
ஒவ்வொரு வருட இறுதியிலும், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பெயர்களை கூகுள் வெளியிடும். அரசியல், சினிமா, சர்ச்சை என்று பல தளங்களில் பிரபலமான அந்தப் பெயர்களை வாசிக்கையில், கையை விட்டுக் கடந்துபோன வருடத்தில் மீண்டும் ஒருமுறை வாழ்வது போன்ற உணர்வைத் தரும்.
அந்த வகையில், 2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் லிஸ்ட்டையும், கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டையும் இங்கே பகிர்ந்திருக்கிறோம்.

நுபுர் சர்மா
பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாதமொன்றில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவிக்க, அது சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சர்ச்சை அடங்காத நிலையில், உதய்பூரைச் சேர்ந்த டெய்லர் ஒருவர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக வீடியோ வெளியிட, அவரின் தலையைத் துண்டித்துக் கொன்றனர் இருவர். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
`ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியுள்ளது என்றாலும், ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கும் பொறுப்பற்ற இந்தச் செயலே காரணம். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்' என அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். ஒரு படுகொலை நடப்பதற்கு காரணமாக இருந்தவர்; உச்ச நீதிமன்றமே இவருக்கு கண்டனம் தெரிவித்தது என இந்திய அளவில் நெகட்டிவ் பப்ளிசிட்டிக்கு ஆளானவர் நுபுர் ஷர்மா. அதன் காரணமாகவே இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பெண்களில் முதல் இடத்தில் இருக்கிறார் இவர்.

திரெளபதி முர்மு
இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரெளபதி முர்மு, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வறுமை மிகுந்த குழந்தைப் பருவம், ஆசிரியர், நீர்ப்பாசனத்துறையில் கிளார்க் என்ற எளிமையான பின்னணியில் வாழ்ந்துகொண்டிருந்த திரெளபதி முர்மு, 1997-ல் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
Also Read
பா.ஜ.க சார்பில் இருமுறை எம்.எல்.ஏ.; 2000-ம் ஆண்டில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்தபோது வர்த்தகம், போக்குவரத்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் பொறுப்புகளை வகித்தது; ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்று தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் சத்தமில்லாமல் வளர்ந்த திரெளபதி முர்முவை, அடுத்த ஜனாதிபதி என்று பா.ஜ.க. அறிவிக்க, உலகம் முழுக்க 'திரெளபதி முர்மு' என்ற பெயர் கூகுளில் தட்டச்சு செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பெண்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் இவர்.

சுஷ்மிதா சென்
இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பெண்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் இந்த முன்னாள் உலக அழகி. இவர் தத்தெடுத்த மகள்களின் இன்ஸ்டா போஸ்ட், காதல் முறிவு, சுஷ்மிதாவுடன் உறவில் இருப்பதாக தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி என, 2022 முழுக்கவே சமூக வலைத்தளங்களில் பேசப்படுபவராக இருந்தார் சுஷ்மிதா சென்.
``மெயின்ஸ்ட்ரீம் சினிமா, நான் விரும்பியதைத் தரவில்லை என்பதால்தான், கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. இந்த பத்து வருட இடைவெளியானது எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதையும், எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்த இடைவெளியை என்னுடைய மகள்களுக்காக முழுமையாகச் செலவிட்டேன்'' என ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தவர், தற்போது, திருநங்கை சமூக ஆர்வலர் கௌரி சாவந்த் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அஞ்சலி அரோரா
சமூக வலைத்தள பிரபலம், நடிகை, நடனக்கலைஞர் என்று வலம் வந்துகொண்டிருக்கிற அஞ்சலி அரோரா, இன்ஸ்டாகிராமில் வைரலான `கச்சா பாதம்' பாடலுக்கு நடனமாடி ஓவர் நைட் ஸ்டார் ஆனார்.
Also Read
இவரின் இன்ஸ்டா, அவருடைய ஹாட் புகைப்படங்களாலும், வீடியோக்களாலும் நிறைந்து கிடக்கிறது. இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக, `அது நானில்லை' என்று மறுத்தார் அஞ்சலி அரோரா. இந்த பரபரப்பு காரணமாகவே, கூகுளில் தேடப்பட்ட இந்தியப் பெண்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறார் அஞ்சலி.

தென்னிந்திய நட்சத்திரங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியல்!
காஜல் அகர்வால்
தென்னிந்திய நட்சத்திரங்களில் அதிகம் தேடப்பட்டவர்களில் முதலிடம் பிடித்திருக்கிறார் காஜல் அகர்வால்.
தன் கர்ப்ப காலத்தையும், மகப்பேறு காலத்தையும் சோஷியல் மீடியா வழியாக தன் ரசிகர்களுக்கு அப்டேட் செய்து கொண்டே இருந்த நடிகை காஜல் அகர்வால்தான்,

சமந்தா ரூத் பிரபு
விவாகரத்துக்குப் பிறகு பலரும் சமந்தாவை பற்றிய செய்திகளை அதிகம் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவரைப் பற்றிய ட்ரோல்களும் அதிகம் வெளிவந்தன.
கணவரைப் பிரிந்ததற்கு ட்ரோல், அதிகமான ஜீவனாம்சம் கேட்டார் என்று சொல்லி அதற்கொரு ட்ரோல், ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னார் என்றொரு ட்ரோல், ஐட்டம் பாட்டுக்கு ஆடியதற்கு ட்ரோல், சினிமா பிரபலங்கள் பர்சனல் பகிரும் 'காபி வித் கரணில்' பங்கெடுத்தாலும் ட்ரோல், உடல் நலமில்லாமல் படுக்கையிலிருந்தபடியே டப்பிங் கொடுத்தாலும் ட்ரோல் என்று சென்ற வருடம் முழுக்க, கூகுளில் அதிகமாகத் தேடப்பட்ட நடிகைகளில் சமந்தா முன்னணியில் இருக்கிறார்.

ராஷ்மிகா
இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் நடிகை ராஷ்மிகாவும் இடம் பிடித்துள்ளார்.
`புஷ்பா' படத்தில் நடித்த பிறகு ராஷ்மிகாவை தேடுபவர்களின் எண்ணிக்கை இணையத்தில் அதிகரித்திருக்கிறது.

நயன்தாரா
O2; காத்து வாக்குல ரெண்டு காதல்; பல வருடங்களாகக் காதலித்து வந்த விக்னேஷ் சிவனை திருமணம் முடித்தது; வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானது; உடல் மெலிந்திருப்பது என்று நயன்தாராவின் சொந்த வாழ்க்கை; சினிமா வாழ்க்கை இரண்டுமே இந்த வருடம் முழுக்க வைரலுக்கும், ட்ரோலுக்கும் ஆளாகிக் கொண்டே இருந்தது.
இதன் காரணமாக, நயன்தாராவும் இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

பூஜா ஹெக்டே
சோஷியல் மீடியா ரீல்ஸ், விளம்பர படங்கள், விஜய் பட நாயகி எனச் சென்ற வருடம் முழுக்க பிஸியாகவே இருந்தவர் நடிகை பூஜா ஹெக்டே.
ரன்வீர் சிங் – ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கும் படத்திலும், இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜியின் இந்தி படமொன்றிலும், மற்றொரு இந்திப்படத்திலும் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கூகுளில் பலர் தேடிய செலிபிரிட்டி லிஸ்ட்டில் இருக்கிறார்.