Published:Updated:

பொங்கலுக்கு விறுவிறுப்பாகத் தயாராகும் நெட்டி மாலைகள்!

நெட்டி மாலைகள்
News
நெட்டி மாலைகள்

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு விவசாய தொழில் கிடைப்பது அரிதாக உள்ளது. அந்த நேரத்தில் நீர்நிலைகளில் படர்ந்து கிடக்கும் நெட்டித்தக்கை செடிகளை சேகரித்து மாலையாக்குகின்றனர். பொங்கல் விழாவில் நெட்டித்தக்கை மாலை வியபாரம் சூடுபிடித்து முடிந்துவிடுகிறது.

Published:Updated:

பொங்கலுக்கு விறுவிறுப்பாகத் தயாராகும் நெட்டி மாலைகள்!

தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு விவசாய தொழில் கிடைப்பது அரிதாக உள்ளது. அந்த நேரத்தில் நீர்நிலைகளில் படர்ந்து கிடக்கும் நெட்டித்தக்கை செடிகளை சேகரித்து மாலையாக்குகின்றனர். பொங்கல் விழாவில் நெட்டித்தக்கை மாலை வியபாரம் சூடுபிடித்து முடிந்துவிடுகிறது.

நெட்டி மாலைகள்
News
நெட்டி மாலைகள்

நீர்நிலைகளில் சேகரிக்கப்படும் நெட்டித்தக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த மேலவல்லம் கிராமம் உள்ளது. இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், விவசாய கூலித் தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் வருடம்தோறும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் நெட்டிமாலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தொழிலில் இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் முதல்  முதியவர்கள் வரை ஈடுபட்டு வருகின்றனர். இந்த நெட்டி மாலை தயார் செய்வதற்கு இக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, வீராணம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று அங்கு தண்ணீரில் படர்ந்து கிடக்கின்ற நெட்டித்தக்கை என்ற ஒருவகை கொடிகளைச் சேகரித்து வருகின்றனர்.

தண்ணீரில் சிரமத்துடன் இறங்கியும், சில நீர்நிலைகளில் ஆழமாக உள்ள பகுதிகளில் நீந்தியும் சேகரித்த இந்த நெட்டித்தக்கைகளை டாட்டா ஏசி போன்ற வாகனத்தின் மூலம் கொண்டு வருகின்றனர்.

நெட்டி மாலைகள்
நெட்டி மாலைகள்

கண்ணைக் கவரும் வண்ண மாலைகள்!

நீர் நிலைகளில் இருந்து எடுத்து வந்த நெட்டிதக்கை இலைகள் நீக்கப்பட்டு வெயிலில் உலர வைக்கப்படுகிறது. ஓரிரு தினங்களில் உலர்ந்த நெட்டித்தக்கைகளின் மேலுள்ள தோல் நீக்கப்படுகிறது. தோல் நீக்கப்பட்டவுடன் வெண்மையாக உள்ள தண்டுப் பகுதி துண்டு துண்டாக நறுக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சாயம் தோய்க்கப்பட்டு, வெயிலில் உலர வைக்கப் படுகிறது. அருகிலுள்ள கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் வளர்ந்து கிடக்கின்ற தாழை செடியிலிருந்து, தாழை நார் எடுத்து பதப்படுத்தப்பட்டு, அந்த நாரில் உலர வைக்கப்பட்டு வண்ணம் தோய்க்கப்பட்ட நெட்டித்தக்கைகள் கோர்க்கப்பட்டு மாலையாக்கப்படுகிறது.  

தேவையான பல வண்ணங்களில் ஒற்றை மாலை, இரட்டை மாலை, ரோசாப்பூ மாலை உள்ளிட்ட அழகிய கண்ணைக் கவரும் நிறங்களில் மாலைகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட மாலைகளை சிதம்பரம், சீர்காழி, கடலூர், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். பொங்கல் விழாவுக்கு முன்பு சில நாள்களில் நெட்டித்தக்கை மாலை வியாபாரம் ஆரம்பித்து, மாட்டுப் பொங்கல் அன்று  சூடு பிடித்து அன்றே  முடிந்து விடுகிறது. 

கால்நடைகளுக்கு பாதிப்பில்லை...

இதுகுறித்து மேலவல்லம் கிராமத்தைச் சேர்ந்த நெட்டி மாலை தயார் செய்து வரும் தொழிலாளி மோகனிடம் பேசினோம். ``நாங்கள் நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து நெட்டி மாலை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகை முடிந்த பிறகு விவசாய தொழில் நமது பகுதியில் கிடைப்பது அரிதாக உள்ளது. அந்த நேரத்தில் இங்குள்ள இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் பிரிந்து சென்று வெளியூர்களிலுள்ள நீர் நிலைகளில் படர்ந்து கிடக்கும் நெட்டித்தக்கை செடிகளை சேகரித்து வந்து,  அதில் நெட்டி மாலை செய்து விற்பனை செய்து வருகிறோம்.

நெட்டி மாலைகள்
நெட்டி மாலைகள்

இந்த நெட்டி மாலைகளை ஆர்வத்துடன் கால்நடைகளின் உரிமையாளர்கள் வாங்கி சென்று மாட்டுப் பொங்கல் அன்று ஆடு, மாடுகளுக்கு அணிவித்து மகிழ்ச்சியடைகின்றனர். நெட்டி தக்கை மாலையால் எந்த பாதிப்பும் இல்லை. இதில் எந்த ரசாயனமும் இல்லை. இயற்கை முறையிலேயே தயாரிக்கப் படுவதால் ஆடு மாடுகள் இதைத் தின்றாலும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், கடந்த சில வருடங்களாக பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. 

பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் கால்நடைகள் அதைத் தின்றுவிட்டால்  பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் மாலைகளால் நெட்டித்தக்கை மாலைகள் விற்பனை சற்று குறைந்தே காணப்படுகிறது. ஆனால், நெட்டி மாலை எல்லா வகையிலும் சிறந்த ஒன்றாகும். அதனால் இதை வருடம்தோறும் வாங்குபவர்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

வாழ்வாதாரம்!

எங்களுக்கு நெட்டி மாலை தயார் செய்வதற்கு உரிய நிதி வசதி கிடைக்காததால் நாங்கள் தனியாரிடமிருந்து வட்டிக்கு கடன் வாங்கி பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் கொடுத்து விடுவதாக உறுதியளித்து வாங்கிய கடனை, வட்டியுடன்  சேர்த்து செலுத்தி வருகிறோம். வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தி வருவதால் எங்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. மூன்று மாத கால சாப்பாடு மற்றும் சில்லறை செலவினங்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. காலம் காலமாக நாங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் பலமுறை கோரிக்கை விடுத்தும், எங்களுக்கு இதுவரை எந்த நிதி உதவியும் அரசு வழங்கவில்லை.

நெட்டி மாலைகள்
நெட்டி மாலைகள்

இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் நெட்டித்தக்கை குறைவாகவே சேகரித்து குறைந்த எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்துள்ளோம். ஆனால், நெட்டித்தக்கை மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எங்கள் குடும்பங்கள் மிகுந்த அவதியில் இருந்து வருவதால், மழைக்கால நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு ரூ.10,000 வீதம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும். 

மேலும், இனிவரும் காலங்களில் தொடர்ந்து இயற்கை முறையில் நெட்டித்தக்கை மாலை தயார் செய்து விற்பனை செய்ய அரசு மானியத்துடன் வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.