
இன்றே தொடங்குவோம்!
அக்டோபர் மாதம் சீன அதிபர் சந்திப்புக்காக மாமல்லபுரம் வந்திருந்த பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் நடந்துகொண்டே குப்பைகளை அகற்றிய ‘ப்ளாகிங்’ வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதென்ன ப்ளாகிங்? வாக்கிங் என்பது நடைப்பயிற்சி. ப்ளாகிங் (Plogging) என்பது இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்றுவது. இந்தப் பயிற்சி மூலம் ஆரோக்கியம் மேம்படுவதோடு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும்.
ஸ்வீடனில் தொடங்கிய ப்ளாகிங்! 2016-ம் ஆண்டு, எரிக் ஆல்ஸ்டோர்ம் என்பவரால் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ப்ளாகிங் ஓட்டம். ‘ப்ளாகா அப்’ என்பதற்கு, ‘எடுத்துக்கொண்டு செல்' (pick and go) என்பது பொருள். ஜாகிங்கின்போது தெருக்களில் குப்பைகள் இருப்பதை கவனித்த எரிக், ஜாகிங் செய்துகொண்டே குப்பைகளை அகற்றியுள்ளார். உடல்ரீதியாக ஃபிட்னஸை மேம்படுத்தவும், போகும் வழியைச் சுத்தம் செய்யும்விதமாகவும் அமைந்த இந்தப் பயிற்சி, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமூக வலைதளங்கள் வழியாகப் பல நாடுகளுக்கும் பரவியது.

இந்தியாவில் ப்ளாகிங்! வானொலி வழியாக மக்களிடம் பேசிவரும் பிரதமர், ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தைப் பற்றி ஒருமுறை பேசினார். அப்போது இந்தியாவின் முதல் ப்ளாகரான ரிப்பு தமனைக் குறிப்பிட்ட அவர், இந்திய மக்கள் அனைவரும் அவரைப் போல ப்ளாகிங் செய்யுமாறு அழைப்புவிடுத்தார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் அக்டோபர் 2 அன்று, இந்தியா முழுவதும் ‘ஃபிட் இந்தியா ப்ளாகிங் ஓட்டம்’ ஒருங்கிணைக்கப்பட்டது. இருப்பினும், பிரதமர் மோடியின் ப்ளாகிங் வீடியோவுக்குப் பிறகுதான் இது இந்திய அளவில் வைரலானது.
நன்மைகள் என்னென்ன? `‘சாதாரண ஜாகிங் பயிற்சியைவிட அரை மணிநேர ப்ளாகிங் ஓட்டத்தில், 288 கலோரிகளை உடலிலிருந்து வெளியேற்றலாம். கீழே குனிந்து மேல் எழுவது போன்ற செயல்பாடுகள் கால்கள் கைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்’' என்று இதன் சிறப்பைச் சொல்கிறார் எரிக்.

ஓர் அனுபவம்! கடந்த ஓராண்டாக ப்ளாகிங் செய்து வருகிறார் மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த ஹரிப்ரியா.
“ப்ளாகிங் செய்யுறதுக்கு முன்னாடி, கிளவுஸ், ஷூஸ், ட்ராஷ் பிக்கர், குப்பை போடும் பை போன்ற பொருள்களை தயார் செஞ்சுக்கணும். ஆரோக்கியமா இருக்கிறதுக்காக ஜாகிங் போகப்போய், தொற்றுநோய்க்கு இடம் தந்துவிடக் கூடாது. அடுத்தது, ப்ளாகிங் செய்யும் முறை. பயிற்சி செய்யும்போது கைகால் அசைவுகள்ல கவனமா இருக்கணும். உடலை பாதிக்குற மாதிரி தாறுமாறான அசைவுகளைத் தவிர்க்கணும். ப்ளாகிங்ல கீழ குனிஞ்சு, நிமிர்ந்து குப்பைகளை அகற்றணும். அப்போ, முதுகுப்பகுதியை வளைச்சு குப்பைகளை எடுக்காம, ஸ்காட் பொசிஷன்ல எடுக்கிறதுதான் சரியானதா இருக்கும்.
முக்கியமாக... இது ஃபிட்னஸ் + சுத்தப்படுத்து தல் பயிற்சி மட்டுமல்ல. குப்பைகளை அகற்ற பத்து பேர் இருந்தா, குப்பையைக் கொட்ட நூறு பேர் இருப்பாங்க. ப்ளாகிங் பயிற்சி செய்கிறப்ப, நாம சந்திக்கிற மக்கள்கிட்ட, ‘குப்பை போடுவது ஏற்புடையது அல்ல’ - இந்த மெசேஜை அழுத்தமா பதிவு செய்வதுதான் ப்ளாகிங்!
உடல் மற்றும் மனரீதியாக ப்ளாகிங் உங்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்க!” என்று அழைக்கிறார் ஹரிப்ரியா.