
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டாரத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களின் எல்லையில் அடர் வனங்களில் 200 கிராமங்கள் சிதறிக்கிடக்கின்றன.
``வணக்கம்... நான் பணியர் இனத்தைச் சேர்ந்தவள். எனது அப்பா பாக்கு பறிக்கும் தொழிலாளி. அம்மா டீ இலை எடுக்கச் செல்கிறார். நான் பிளஸ் டூ படிக்கிறேன். நாங்கள் வனத்துக்கு நடுவில் வாழ்கிறோம். இதுநாள் வரை எங்கள் பாட்டிகளோ அம்மாவோ கழிவறை பற்றி யோசித்ததே இல்லை. திறந்தவெளியிலேயே அவர்களின் வாழ்க்கை கழிந்துவிட்டது. எங்களால் அப்படி வாழமுடியவில்லை. எங்களுக்குக் கழிவறை கட்டித்தர முடியுமா?’’
இப்படியொரு கடிதம் வந்தது விகடனுக்கு. இதை எழுதியவர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம், அம்மன்காவு வனகிராமத்தைச் சேர்ந்த பபிதா. இந்தக் கடிதத்தோடு காரமூலா கிராமத்தைச் சேர்ந்த ரெஜினா, திரிக்கபெட்டா கிராமத்தைச் சேர்ந்த பிந்து எழுதிய கோரிக்கைக் கடிதங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

அடர் வனங்களுக்கு மத்தியில் வாழ்ந்து, காபி, பாக்குத் தோட்ட முதலாளிகளுக்குப் பணியம் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஒரு பழங்குடிச் சமூகத்திலிருந்து கழிவறை கேட்டு வந்த கோரிக்கையை அடுத்து, உடனடியாக விகடன் குழு களமிறங்கியது. மூன்று பேரின் வீடுகளுக்கு அருகிலும் வாசன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மூன்றே மாதங்களில் ரூ.2.4 லட்சம் செலவில் கழிவறைகள் கட்டித்தரப்பட்டன.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டாரத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்களின் எல்லையில் அடர் வனங்களில் 200 கிராமங்கள் சிதறிக்கிடக்கின்றன. வனத்துக்கு மத்தியில் நான்கைந்து வீடுகள் கொண்ட சிறு சிறு குடியிருப்புகள் இருக்கின்றன. பல பகுதிகளில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தந்திருக்கிறது. ஆனால் முறையான பாதையோ, கழிவறையோ இல்லை. பணியர்கள், குறும்பர்கள், காட்டு நாயக்கர்கள் என மூன்று பழங்குடிச் சமூகங்கள் இங்கு வாழ்கிறார்கள்.
அக்கறையுள்ள சில தொண்டு நிறுவனங்கள் உதவியோடு இப்பழங்குடிகளின் பிள்ளைகள் கல்விக்கூடங்களை எட்டியிருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள்தான் பபிதாவும் ரெஜினாவும்.

கூடலூரில் இருந்து, பாட்டவயல் வழியாக வனத்துக்குள் பயணித்தால் அம்மன்காவு வருகிறது. இரண்டு வீடுகள் மட்டும் அருகருகே இருக்கின்றன. அரசு கட்டிக்கொடுத்த அந்தத் தொகுப்பு வீடுகளில் ஒன்றுதான், பபிதாவின் வீடு. பபிதாவின் அப்பா காலமாகிவிட்டார். அம்மா, இன்னொரு மணம் செய்துகொண்டுவிட்டார். கவிதாவும் பபிதாவும் மட்டும் தனித்து வசிக்கிறார்கள். தன் தங்கையைப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கனவைச் சுமந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் தாய்க்குத் தாயாக கடுமையாக உழைக்கிறார் கவிதா. பபிதா பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு சென்னை கவின்கலைக் கல்லூரியில் சேரும் கனவோடு இருக்கிறார். ரெஜினாவின் வீடு மிகப்பெரிய சரிவில் இருக்கிறது. பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு நீட் தேர்வெழுதப் பயிற்சி பெற்றுவருகிறார்.
‘‘எங்க பாட்டி, அம்மாவுக்கெல்லாம் கழிவறை பத்தித் தெரியாது சார். வெளியிலதான் போவாங்க. பகல்ல தோட்டத்துக்கு வர்ற ஆம்பளைங்க நடமாட்டம் இருக்கும். அதனால விடியுறதுக்கு முன்னால அல்லது இருட்டினப்புறம்தான் போவாங்க. கொஞ்சநாள் முன்னாடி ராத்திரி சரிவுக்குப் போன ஒரு அக்காவை யானை அடிச்சிருச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுக் காப்பாத்தினாங்க. பாம்புக, சிறுத்தைக எல்லாம் இந்தப் பகுதிக்கு வரும் சார். பதறிப்போய் ஓடிவருவோம். ஸ்கூலுக்குப் போனபிறகுதான் எங்களுக்குக் கழிவறையோட தேவை புரிஞ்சுச்சு. ஆனா கட்டணும்னா ஆயிரக்கணக்குல பணம் வேணும்னாங்க.

எங்க ஊருக்குப் பக்கத்துல ஆதிவாசி நலச்சங்கம் இருக்கு. அங்கிருக்கிற அண்ணனுங்ககிட்ட கேட்டோம். சங்கத்துல நடத்துற ஆஸ்பத்திரிக்கு விகடன்ல இருந்து நிறைய உதவிகள் பண்ணியிருக்காங்க. அவங்கதான் ‘விகடனுக்கு லெட்டர் போடும்மா'ன்னு சொன்னாங்க. லெட்டர் போட்ட உடனே தேடி வந்துட்டாங்க. இந்தப் பாதையில பொருள்களையெல்லாம் கொண்டு வந்து சேர்க்கவே ரொம்பச் சிரமப்பட்டாங்க. ஆனாலும் மூணே மாசத்துல கட்டி முடிச்சுட்டாங்க...’’ என்கிறார்கள் பபிதாவும் ரெஜினாவும்.
தமிழகத்தின் கடைக்கோடி எல்லையில் வனங்களில் உள்ளடங்கி வசிக்கும் பழங்குடிகள் விழிப்புணர்வோடு கழிவறை கட்டித்தரக் கோரிக்கை விடுக்கிறார்கள். தேவை மிகப்பெரியது. நிறைய தன்னார்வலர்கள் களத்துக்கு வந்து உதவிகள் செய்கிறார்கள். மக்களுக்குக் கரம் கொடுத்து உதவும் நோக்கில் ஆனந்த விகடன் சார்பில், வாசன் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக 10 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தேவை அதிகமிருக்கிறது. வாசகர்களின் பங்களிப்போடு சுமார் 50 குடும்பங்களுக்கேனும் கழிவறை கட்டித்தர விரும்புகிறோம். கரம்கொடுக்க விரும்பும் வாசகர்களை வரவேற்கிறோம்!

வாசகர்கள் பங்களிக்கலாம்!
உதவும் உள்ளம் கொண்டவர்கள், Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்புக் கணக்கிற்கு (கணக்கு எண்: 0416132000052, ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) அனுப்பலாம்.
வெளிநாட்டு வாசகர்கள் எங்களது கீழ்க்கண்ட FCRA அக்கவுன்ட்டில் நிதியுதவியை அளிக்கலாம். SBI சேமிப்புக் கணக்கு எண்: 41756580337, ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: SBIN0000691, ஸ்விப்ட் கோடு- SBININBB104 நியூ டெல்லி மெயின் பிராஞ்ச், நியூடெல்லி-110001).
நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `For Tribal Sanitation’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை பான் கார்டு நம்பருடன் `ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். அல்லது help@vikatan.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் செய்த பரிவர்த்தனைக்கான ஆவணங்களை அனுப்பி வைத்தால், உங்களுக்கான ரசீது அனுப்பி வைக்கிறோம்.