குழந்தைகளை வளர்ப்பது, பெற்றுக் கொள்வது குறித்து ஒவ்வொரு தலைமுறையினரிடையே வேறுபட்ட கருத்துகள் நிலவும். கொள்ளு தாத்தாவிற்கு பத்து குழந்தைகள், தாத்தாவிற்கு ஐந்து, அப்பாவுக்கு இரண்டு, எனக்குக் குழந்தைகளே வேண்டாம் எனச் சிந்திக்க ஆரம்பித்து விட்டது இன்றைய தலைமுறை.

இந்நிலையில் ஜப்பானில் 30 வயதுக்கும் கீழ் உள்ள திருமணம் ஆகாதவர்களில், பாதிக்கும் மேலானோர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜப்பான் அரசு கடந்த ஆண்டு குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை 8,00,000 வரை குறைந்துள்ளது என ஒரு தகவலை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தலைமுறையினர் `குழந்தைப் பிறப்பு’ (Child birth) மற்றும் பேரன்டிங் (Parenting) குறித்து என்ன நினைக்கிறார்கள் என Rohto Pharmaceutical Co என்ற மருந்து நிறுவனம் ஜப்பானில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடியுகள் ஜப்பான் அரசாங்கத்தை கவலையடையச் செய்துள்ளது.
ஜப்பானில் 18 வயது முதல் 29 வயதுடைய நபர்களிடம் ஆன்லைன் மூலமாக கடந்த ஜனவரி மாதம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 400 பேர் கலந்துகொண்டு பதிலளித்தனர். அந்த ஆய்வின் முடிவுகள்…
*ஜப்பானில் 30 வயதுக்குட்பட்ட திருமணமாகாதவர்களில் பாதி பேர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு, மாறிவரும் பொருளாதார சூழ்நிலை அதனால் ஏற்படும் கவலைகள் மற்றும் பிரசவம், குழந்தை வளர்ப்பில் உள்ள சுமைகளை ஆகியவை கவலையளிப்பதால் குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை என்று பெரும்பாலனோர் தெரிவித்துள்ளனர்.
*இவர்களில் 49.4 சதவிகிதத்தினர் தங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று வெளிப்படையாகவே மறுத்துள்ளனர்.
*பாலினத்தின் அடிப்படையில் பார்த்தால், இந்த ஆய்வில் கலந்து கொண்டு பெற்றோராவதில் விருப்பம் இல்லை என 53 சதவிகித ஆண்களும், 45.6 சதவிகித பெண்களும் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உயர்ந்து வரும் விலைவாசிதான் இதற்கு காரணம் என்று இவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.