
பெண் டைரி I ஒரு வாசகியின் கடிதம்
நாங்கள் ஒரு கிராமத்தில் வாழும் கூட்டுக் குடும்பம். மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் குடும்பம், எங்கள் குடும்பம் என அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். கணவர் ஒரு வருடத்திற்கு முன்னர் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அந்த இழப்பிலிருந்து என்னால் மீண்டு வரவே இயலவில்லை. என்றாலும் என் இரண்டு பெண் பிள்ளைகளுக்காக வாழ்ந்துவருகிறேன். எங்கள் செலவுகளை மாமனார் பார்த்துக்கொள்கிறார், பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்களை கணவரின் அண்ணன் பார்த்துக்கொள்கிறார்.

கணவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு, அவர் அண்ணன் நடவடிக்கையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அவர் என்னைத் தப்பாகப் பார்ப்பதுபோல ஆரம்பத்தில் தோன்றியபோதும், அப்படி இருக்காது என்றும், கணவரின் மறைவால் எனக்கு ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பின்மையே என்னை அப்படி எண்ண வைக்கிறது என்றும் நினைத்துக்கொண்டேன். ஆனால், தொடர்ந்த நாள்களில், என் உள்ளுணர்வு தவறில்லை என்றானது. கணவரின் அண்ணன் என்னைப் பார்க்கும் பார்வை, அவர் என்னிடம் பேசும் விதம், நடவடிக்கைகள் எல்லாமே எனக்குப் பாலியல் தொல்லை தரும் வகையிலேயே இருந்தது. உதாரணமாக, ‘ஒரு காபி போட்டுக் கொடு’ என்று சொல்லிவிட்டு, அந்த சாக்கில் நான் காபி போடும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருப்பது, சாப்பாடு பரிமாறும்போது, பொருள்களைக் கொடுத்து வாங்கும்போது எல்லாம் என்னைத் தொட்டுப் பேச ஆரம்பித்தார்.
ஒரு முறை வீட்டில் நான் மட்டும் இருக்க நேர்ந்தபோது, நேரடியாகவே என்னிடம் தவறாக நடக்க முயன்றார். கத்தி ஊரைக் கூட்டுவேன் என்று எச்சரித்தேன். அன்றிலிருந்து இந்த நான்கு மாதங்களாக என் வாழ்க்கை நரகமாகக் கழிந்துகொண்டிருக்கிறது. அவர் தொல்லைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், அவர் மனைவியிடம் இதைச் சொல்லிவிட்டேன். ஆனால் எனக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ‘‘ஆம்பளைங்க அப்படி, இப்படித்தான் இருப்பாங்க. நீதான் அதுக்கு இடம் கொடுக்காம நடந்துக்கணும்’’ என்று என்னையே குற்றவாளியாக்கிப் பேசினார். மேலும், ‘‘என்ன இருந்தாலும் என் பிள்ளைகளுக்கு அவர் அப்பா. அவரைப் பத்தி இப்படி வெளிய சொல்லி என் பிள்ளைங்களோட மனசை உடைச்சுடாத’’ என்றார். அதோடு விடாமல், தன் கணவரிடமும் இது விஷயமாக சண்டையும் போட்டார்தான். ஆனால், ‘‘நான் அப்படித்தான் இருப்பேன்’’ என்று அவர் திமிராக பதில் சொல்லிவிட, அவர் மனைவி, ‘‘நீ உங்க அம்மா வீட்டுக்கே போயிடேன்’’ என்று என்னிடம் கூறிவிட்டார்.

அவர்களின் பிள்ளைகள் மட்டுமல்ல, எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புப் படிக்கும் என் மகள்களின் நிலையை நினைத்தும்தான் இதைப் பற்றி மாமனார், மாமியாரிடமோ, வேறு யாரிடமோ சொல்லாமல் அமைதி காக்கிறேன். வீட்டில் இது பிரச்னையாகி, என் மகள்களுக்கு விஷயம் தெரியவந்தால், ஏற்கெனவே அப்பாவை இழந்திருக்கும் அவர்கள் அம்மாவின் நிலையும் இப்படி ஆகிவிட்டதே என்று இன்னும் உருக்குலைந்து போய்விடுவார்கள்.
எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுமே. ரேஷன் அரிசிதான் சாப்பாடு என்ற வறுமை நிலை அம்மாவுக்கு. கழிவறைகூட இல்லாத வீட்டில், ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறார். பள்ளி இல்லாத அந்த ஊரில், நானும் மகள்களும் சென்று வாழ வழியில்லை. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள நான் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், வீட்டு அட்வான்ஸ் கொடுக்க சேமிக்கும் வரையாவது நான் இந்த வீட்டில்தான் இருந்தாக வேண்டும். அதுவரை எப்படி என் கணவரின் அண்ணனுக்கு பதிலடி கொடுப்பது?
(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)