அலசல்
Published:Updated:

நெருங்கும் திருமணம், திரும்ப வந்திருக்கும் முன்னாள் காதலன் என்ன முடிவெடுப்பது?

ஒரு வாசகியின் கடிதம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு வாசகியின் கடிதம்

பெண் டைரி | I ஒரு வாசகியின் கடிதம்

எனக்கு 30 வயதாகிறது. கல்லூரிப் படிப்பை முடித்து ஓர் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்தபோது, என்னைப் போலவே புதிதாகச் சேர்ந்திருந்த அவனுக்கும் எனக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக வளர்ந்தது. மூன்று வருடக் காதல் வாழ்க்கை. இடையில் அவன் அண்ணனுக்குத் திருமணம் முடிந்தது. அதன்பின் என் அக்காவுக்கும் திருமணம் முடிந்த நிலையில் எங்கள் காதலை வீட்டில் சொன்னோம்.

ஒரு ஹோட்டலில் இரு குடும்பத்தினரையும் சந்திக்க வைத்தோம். அப்போது இரண்டு தரப்பிலுமே வார்த்தைகள் வீம்பாக வெளிப்பட, அது சலசலப்பாக மாறியது. எங்கள் காதல், திருமணத்தில் முடிவது இன்னும் சிக்கல் ஆனது. வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நான் அழைத்தேன். அவனுக்கு அதில் உடன்பாடில்லை.

நெருங்கும் திருமணம், திரும்ப 
வந்திருக்கும் முன்னாள் காதலன் என்ன முடிவெடுப்பது?

மாதங்கள் செல்லச் செல்ல, அவன் வீட்டினரை மீறி அவன் ஒருபோதும் என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டான் என்று தோன்றியது. ‘‘அப்படியெல்லாம் இல்ல. அப்பா சின்ன வயசுலேயே இறந்துட்டாங்க. நானும் அண்ணனும்தான் உலகம்னு அம்மா வாழ்ந்துட்டாங்க. அண்ணா ஏற்கெனவே வீட்டை விட்டுப் போய்தான் லவ் மேரேஜ் பண்ணினான். இப்போ நானும் அதைப் பண்ணினா, எங்களுக்காகவே அம்மா வாழ்ந்ததுக்கு அர்த்தம் இல்லாமப்போயிடும். அதனால நீ பொறுத்துக்கத்தான் வேண்டும்’ என்றான். ஆனால், இந்த ஜென்மத்தில் அவன் அம்மா எங்கள் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்தப் பிரச்னைகள், மேலும் எங்களுக்குள் எழுந்த ஈகோ பிரச்னைகளால் ஒரு வருடத்தில் நாங்கள் பிரிந்துவிட்டோம்.

வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், எந்த வரனும் அமையவில்லை. எனக்குச் சில லவ் புரொபோசல்கள் வந்தன என்றாலும் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. இப்படியே மூன்று வருடங்கள் கழிந்த நிலையில், இப்போது எனக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. பெற்றோர் பார்த்த வரன். எனக்குப் பிடித்திருக்கிறது என்றும் இல்லை, பிடிக்கவில்லை என்றும் இல்லை. ‘30 வயசாயிடுச்சு, இன்னும் கல்யாணம் முடியலையா?’ என்ற கேள்விகளால் இந்த சமூகம் எனக்குத் தரும் அழுத்தத்தை நிறுத்த இந்தத் திருமணம் எனக்கு ஆசுவாசமாக இருக்கும் என்று தோன்றியது. நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது, மூன்று மாதங்களில் திருமணம்.

நெருங்கும் திருமணம், திரும்ப 
வந்திருக்கும் முன்னாள் காதலன் என்ன முடிவெடுப்பது?

இந்நிலையில், எதிர்பாராத விதமாக சமூக வலைதளத்தில் எனக்கு என் முன்னாள் காதலன் மெசேஜ் அனுப்பியிருந்தான். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை, வெளிநாட்டில் இருக்கிறான், எனக்கு விரைவில் திருமணம் என்ற அப்டேட்கள் பகிரப்பட்டன. ஃபார்மலாக ஆரம்பித்த பேச்சு, ஒரு கட்டத்தில் பழைய காதல் காலம் போல மாற ஆரம்பித்தது. காதல் புதுப்பிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில் நான் விலக, அவனோ இப்போது வந்து திருமணம் பற்றிப் பேசுகிறான். அவன் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், அதனால்தான் இவன் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் கூறியவன், ‘நிச்சயம்தானே முடிஞ்சிருக்கு, வீட்ல பக்குவமாப் பேசி திருமணத்தை நிறுத்து. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்கிறான். ‘உன் வீட்டு சம்மதம் முக்கியம்னுதானே என்னைக் காக்க வெச்ச, இப்போ நான் ஏன் இந்த ரிஸ்க் எடுத்து எங்க வீட்டுக்கு அதிர்ச்சி கொடுக்கணும்?’ என்றேன். ‘நீ என் மேல இருக்குற கோபத்துல பேசுற. இந்த முறையும் நம் ஈகோவாலோ, வேறு எந்தக் காரணங்களாலோ நாம வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்துட வேணாம். இருக்கும் கடைசி வாய்ப்பையும் விட்டுடாத’ என்கிறான். இப்போது எனக்கும் அப்படியே தோன்றுகிறது. என்ன முடிவெடுப்பது?

(வாசகிக்கான உங்கள் ஆலோசனைகளை கமென்ட்டில் தெரிவிக்கலாம்.)