ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வாழ்க மினிமலிசம்! ஆடம்பரங்கள் இல்லை... ஆரோக்கியக் குறைவும் இல்லை...

மினிமலிசம்
பிரீமியம் ஸ்டோரி
News
மினிமலிசம்

சிறு வயதிலிருந்தே சிக்கனமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான்.

`தேவைக்கு அதிகமானதை நாடுவதில்லை’, `அவசியத்துக்கும் அதிகமாக வாங்கிக் குவிப்பதில்லை’ என்பதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதெல்லாம், எதிலெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் பின்பற்றுகிறீர்கள்... அதன் மூலமாக அடைந்த பலன்கள் என்னென்ன? அந்த ரகசியங்களை மற்றவர்களுக்கும் பகிரலாம் என்று அறிவித்திருந்தோம். வாசகர்கள் அனுப்பியவற்றில் சென்னையைச் சேர்ந்த கே.தமிழரசி எழுதிய இந்த பகிர்வு சிறந்த பரிசு பெறுகிறது. இவருக்கு விகடன் குழும இணையதள ஆறு மாத சந்தா வழங்கப்படும். இதன் மூலம் விகடன் குழுமத்தில் அனைத்து இதழ்கள் மற்றும் பிரீமியம் கட்டுரைகளை டிஜிட்டலில் படிக்கலாம்.

சிறு வயதிலிருந்தே சிக்கனமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான். முதல் குழந்தை பிறந்தபோது குழந்தைக்காக வாங்கிய துணிமணிகள், விளையாட்டுப் பொருள்கள், மூன்று சக்கர சைக்கிள் போன்ற வற்றை பத்திரமாக எடுத்து வைத்து சில வருடங் களுக்குப் பிறகு இரண்டாவது குழந்தை பிறந்ததும் பயன்படுத்திக் கொண்டேன். இதனால் கூடுதல் செலவுகள் இல்லை. பைக் இருந்தும் என் கணவர் கார் வாங்க விரும்பியபோது மறுத்தேன். `கார் வாங்கும் பணத்தை வங்கியில் எஃப்டியில் போட்டு அதில் கிடைக்கும் வட்டியில் வாடகை ‘கார்’ புக் செய்து எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம். கார் பராமரிப்பு, பெட்ரோல் செலவு நமக்கு இருக்காது’ என்று விளக்கினேன். இப்போது வாடகை காரை தேவைக்கு மட்டும் புக் செய்து பயன்படுத்துகிறோம்.

எங்கள் குடும்பத்தில் யாருடைய பிறந்தநாளையும் பலரையும் அழைத்து ஆடம்பரமாக கொண்டாடுவது இல்லை. அன்றைய தினம் வாழ்த்துக் கூறி வீட்டில் பாயசம் அல்லது கேசரி செய்வதோடு சரி. மேலும் வீட்டில் ஏ.சியோ, வாஷிங் மெஷினோ இல்லை. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பு இல்லை. கேபிள் கனெக்‌ஷன் மட்டுமே அதுவும் பிள்ளைகளுக்காக. தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே டி.வி பார்க்க அனுமதிப்பேன். எந்த ஒரு பொருளை வாங்கினாலும் ஹோட்டலில் சாப்பிட்டாலும் பணமாகத்தான் தருவேன். `ஜிபே’, `போன்பே’ போன்றவை மூலம் பணம் செலுத்துவதில்லை. அப்போதுதான் பணத்தின் அருமை தெரியும். கிரெடிட் கார்டுகளை தவிர்த்து விடுகிறோம்.

வாழ்க மினிமலிசம்! ஆடம்பரங்கள் இல்லை... ஆரோக்கியக் குறைவும் இல்லை...

கிராண்ட் சேல் ஆஃபர் பார்த்தால் உடனே கண் மூடித்தனமாக பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கமில்லை. பலமுறை நன்றாக யோசித்து அவசியம் என்றால் மட்டுமே எதையும் வாங்கு வேன். அடிக்கடி போன், டூவீலர் மாற்றுவதில் உடன்பாடில்லை. முடிந்தவரை தேவையற்ற செய்தித்தாள், பத்திரிகைகள், புடவை, துணி மணிகள், சாமான்கள் போன்றவற்றை பாத்திரக் காரனுக்கு போட்டு குடம், பக்கெட் என வாங்கு வேன். இதனால் வீடு சுத்தமாக உள்ளது.

வீட்டில் இருந்து குறைவான தொலைவில் இருக்கும் வேலைகளுக்கு நடந்தே செல்கிறேன். துணிகளை வாஷிங் மெஷின் இன்றி துவைக்கிறேன். மசாலா அரைக்க அவ்வப்போது உரலை பயன் படுத்துகிறேன். உடல் உழைப்பைப் பயன்படுத்தி வேலை செய்து கலோரிகளை எரிப்பது பிடிக்கும். பெட்டை தவிர்த்து, தரையில் பாய் தலையணையுடன் படுக்கிறேன். நன்றாகத் தூங்கி புத்துணர்ச்சியுடன் எழுகிறேன். உடல் வலி, முதுகுவலி இல்லை.

வசதிகள் அதிகரிக்க, அதிகரிக்க நோய்களும், துன்பங் களும் அதிகரிக்கும். எனவே முடிந்தவரை எளிமையாக வாழ விரும்பி அதன்படி வாழ்ந்து வருகிறேன்.

- கே.தமிழரசி, சென்னை-116